``நீயா 2 படத்தை எடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு வந்துவிட்டேன்!" - இயக்குநர் சுரேஷ் | Director Reveals why he's directing neeya 2 movie

வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (09/03/2019)

கடைசி தொடர்பு:21:50 (09/03/2019)

``நீயா 2 படத்தை எடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு வந்துவிட்டேன்!" - இயக்குநர் சுரேஷ்

'எத்தன்' படத்துக்குப் பிறகு இயக்குநர் எல். சுரேஷ் இயக்கும் படம் நீயா 2. ஜெய், ராய் லக்‌ஷ்மி, வரலட்சுமி சரத்குமார், கேத்தரின் தெரசா என பலர் நடிக்க, இந்தப் படத்தை ஜம்போ சினிமாஸுக்காக ஶ்ரீதர் தயாரிக்கிறார். பழைய நீயா படம் போன்றே இதுவும் இச்சாதாரி நாகப் பாம்பைப் பற்றிய கதை என்றாலும் அதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனப் படக்குழுவினர் கூறுகின்றனர். இன்று இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அதில் பேசிய இயக்குநர் சுரேஷ், "பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்துவிட்டு ஏன் இப்படி பாம்பு படம் எடுக்கிறீர்கள் என்பதே பலர் என்னிடம் கேட்கும் கேள்வி. இந்த நீயா 2 படத்தை நானாக எடுக்கவில்லை. எடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு வந்துவிட்டேன்," என்றார்.

எத்தன் படத்துக்குப் பிறகு, விஷ்ணு விஷாலை வைத்து ஒரு படம் தொடங்கி அது பாதியிலேயே ட்ராப் ஆனது என்று கூறிய சுரேஷ், "அதன் பின் பல தயாரிப்பாளர்கள் செண்டிமெண்டை நம்பி என் படத்தை எடுக்க முன் வரவில்லை. அதனால் வேறு வாய்ப்பு கிடைக்காமல் இந்தக் கமர்ஷியல் படத்தை எடுக்கும் நிலைக்கு வந்துவிட்டேன். ஆனாலும் பாலுமகேந்திராவின் பெயரைக் காப்பாற்றும் அளவுக்குக் கண்டிப்பாக எடுத்த காரியத்தை முழுமையாக நிறைவேற்றுவேன்," என்றார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு நடிகர் ஜெய் தாமதமாக வந்தார். அவர் பேசும்போது, "நான் லேட்டா வரல. வேற ஒரு ஷூட்டிங்கல இருந்தேன். அங்க பர்மிஷன் கேட்டு இங்க வந்தேன். இந்தப் படத்தப் பத்தி பேச நிறைய இருக்கு. படம் ரிலீஸப்போ கண்டிப்பா பேசலாம்," எனக் கூறிவிட்டு உரையை முடித்துக்கொண்டார்.

நீயா 2

முன்னதாகப் பேசிய சிறப்பு அழைப்பாளர் இயக்குநர் வெற்றிமாறன், "சுரேஷைப் போன்ற ஒரு முயற்சியாளனையும் உழைப்பாளியையும் பார்க்கமுடியாது. கண்டிப்பாகக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தியிருப்பார் என நம்புகிறேன்," என்றார்.

பின்னர் பேசிய இசையமைப்பாளர் சபீர், இந்தப் படத்தின் பாடல்கள் உருவானபோது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றைப் பகிர்ந்தார். "ஒரு மூட் சாங் ஒன்னு பண்ணனும் என்று சொல்லிவிட்டுச் சென்றார் சுரேஷ். நான் சிங்கப்பூரில் வளர்ந்தவன். அங்கே மூட் என்றால் 'குட் மூட்', பேட் மூட்' என இருவகை தான் எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்த மூடுக்கான அர்த்தம் அப்போது தெரியவில்லை. அதனால் வேறு ஒரு இயக்குநருக்குக் கால் செய்து கேட்டபோது அவர் தான் மூட் என்றால் என்ன எனக் கூறிவிட்டு சாம்பிளுக்கு சில பாடல்களையும் கூறினார். அப்போது தான் மூட் சாங் என்றால் என்ன என்றே எனக்குப் புரிந்தது," எனக் கலகலத்தார்.


[X] Close

[X] Close