பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

சமூகத்தின் மனச்சாட்சி!

சமூகத்தின் மனச்சாட்சி!
பிரீமியம் ஸ்டோரி
News
சமூகத்தின் மனச்சாட்சி!

சமூகத்தின் மனச்சாட்சி!

1966-ம் ஆண்டு. நேரு மறைந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ‘துக்ளக்’ நாடகத்தை அரங்கேற்றினார், 28 வயதான கிரிஷ் கர்னாட்.  இந்திய அரசியலின் பல சமகால விஷயங்களைத் தொட்டுச் சென்றது, அவரது ‘துக்ளக்.’ 

சமூகத்தின் மனச்சாட்சி!

மகளின் காதலுக்கு ஒப்புக்கொள்ளாத பணக்காரத் தந்தையாகத்தான் தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் பலருக்கும் அவரைத் தெரியும். ஆனால், சமூக உணர்வுள்ள ஒரு படைப்பாளியாக, காலத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் கிரிஷ். பல்வேறு மொழித் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருந்தாலும், வரலாற்று நாடகங்களே அவருக்குப் பிடித்தமானவை. “வரலாற்று நாடகங்களை இயக்கும்போது, அவற்றை எளிதாக சமகாலத்தோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது” என்றார்.

மதச்சார்பின்மை, வலதுசாரிகள் மேற்கொள்ளும் வரலாற்றுத் திரிபுமீதான எதிர்ப்பு, கர்நாடக மாநிலத்தின் சுயாட்சி முதலானவற்றைத் தொடர்ந்து பேசிய குரல் அவருடையது. 2014-ம் ஆண்டு, பி.ஜே.பி-யின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டபோது, அதை எதிர்த்துக் குரல் கொடுத்தவர், கிரிஷ். பசுவின் பெயரால் வட இந்தியாவில் வெறுப்புக்குற்றங்கள் நிகழ்ந்தபோது, அதைக் கண்டித்து மூக்கில் செலுத்தப்பட்ட ஆக்ஸிஜன் குழாயோடு ‘என் பெயரில் இந்தப் படுகொலைகள் நிகழவில்லை’ (#NotInMyName) என்ற பதாகையைக் கையில் ஏந்தினார்.

கௌரி லங்கேஷ், கல்புர்கி போன்ற சிந்தனையாளர்கள் கொல்லப்பட்டபோது உரத்து ஒலித்த குரலும் அவருடையதே. ‘அர்பன் நக்சல்கள்’ என்று சிந்தனையாளர்கள் இழிவுபடுத்தப்பட்டபோது, ‘நானும் அர்பன் நக்சல்’ என்று எழுதிய பலகையைத் தன் கழுத்தில் மாட்டி, தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

இந்தியாவின் மிகவும் உயர்ந்த விருதுகளான பத்ம விருதுகள், ஞானபீட விருது, சினிமாவுக்கான தேசிய விருதுகள் முதலானவற்றைப் பெற்றவர்களின் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தது என்றால், மதவாதக் கொலையாளிகள் டைரியில் எழுதிவைத்திருந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தது என்பதும் உண்மை.

ஒரு படைப்பாளி திறமையானவராக மட்டும் இருந்தால் போதாது, தான் வாழும் சமூகத்தின்மீது அக்கறை கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்பதற்கான வாழ்ந்த உதாரணம் கிரிஷ் கர்னாட். அவருடைய சிந்தனைகள் இனி அவரை ஏந்திச் செல்லும்.

- ர.முகமது இல்யாஸ்