பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

கிரேஸி இன் சொர்க்கம்!

கிரேஸி இன் சொர்க்கம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கிரேஸி இன் சொர்க்கம்!

இயக்குநர் சரண்; ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

னந்த விகடனில் பகுதிநேர கார்ட்டூனிஸ்டாக நான் வேலை பார்த்தபோதே, கிரேஸி மோகன் சார் எனக்கு நல்ல பழக்கம். பிரமாதமான நகைச்சுவைத் தொடர் ஒன்றை விகடனில் அவர் எழுதினார். அதற்கு வாரா வாரம் நான்தான் படம் வரைந்து கொடுத்தேன். எங்கே என்னைப் பார்த்தாலும், அந்தத் தொடர் பற்றியும், என் ஓவியங்கள் குறித்தும் பேசிக்கொண்டே இருப்பார்.

கிரேஸி இன் சொர்க்கம்!

‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் சாம்பிளுக்காக கிரேஸி சாரை வசனம் எழுதச் சொன்னார் கமல் சார். ஒரு காட்சியில் கால்ல வெச்சு நசுக்கிட்டுப் போயிடுவேன்’ என்று சொல்லும்  டெல்லி கணேஷிடம், ‘திருக்குறள்கூடத்தான் ரெண்டே அடி இருக்கு. அதை உலகமே கொண்டாடலையா’ என்று கிரேஸி சார் வசனம் எழுதினார். அசந்துபோன கமல் சார், ‘அபூர்வ சகோதரர்கள்’ படம் முழுக்க அவரை வசனம் எழுத வைத்தார்.

கிரேஸி இன் சொர்க்கம்!

இந்தியில் வெளிவந்த ‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்’ படத்தைத் தமிழில் உருவாக்கி, நடிக்க வேண்டும் என்ற எண்ணம் கமல் சாருக்கு இல்லை.  கிரேஸி மோகன் சார் இல்லையென்றால், ‘வசூல்ராஜா’ படத்தில் அவர் நடித்திருக்க மாட்டார். ‘வசூல்ராஜா’ படத்தை இடைவெளி இல்லாமல் எடுத்து முடிக்கத் திட்டமிட்டிருந்தோம். ‘கிரேஸி மோகன் ரொம்ப பிஸி. லேசுல வசனம் வாங்க முடியாது. அதனால, படத்துல அவருக்கு ஒரு டாக்டர் வேடம் கொடுங்க. அப்போதான் அப்பப்போ வசனத்தை வாங்கிக்கலாம்’ என கமல் சார் ஐடியா கொடுத்தார். நானும், கமல் சாரும் வற்புறுத்தி அவரை மார்க்கபந்து கேரக்டரில் நடிக்க வைத்தோம்.

கடந்த வருடம் கிரேஸி சாரின் அப்பா இறந்துவிட்டார். அதிலிருந்தே மனிதர் ரொம்பவும் உடைந்துபோயிருந்தார். இப்போது, நான் இயக்கிக்கொண்டிருக்கும் ‘மார்க்கெட் ராஜா’ படத்தில் அவரை நடிக்கவைத்துவிட வேண்டும் என்று கடந்த இரண்டு மாதமாக அவருடைய வீட்டுக்குப் போய் வந்தேன். ஒருநாள் அவரின் மனைவி என்னிடம், ‘அவர் இருபது வயசிலேருந்து ஆபீஸ் வேலைக்கும் போய்க்கிட்டு, நாடகமும் நடத்திக்கிட்டு, வெளி நாடுகளுக்கும் சுத்திக்கிட்டு... ஓய்வே இல்லாம உழைச்சுக்கிட்டி ருக்கார். அவர் சோர்வா இருக்கிறதா சொல்லி, நாங்க கேட்டதே இல்லை. இப்போ அடிக்கடி அப்படிச் சொல்றார்’ எனச் சொன்னபோது நொறுங்கிப்போனேன். உண்மைதான். கடந்த 47 வருடமாக ஓய்வே இல்லாமல் உழைத்த ஆத்மா, இப்போது ஓய்வெடுக்கிறது. தன்னுடைய வசனங்களால் எல்லோரையும் சிரிக்க வைத்தவர், இப்போது அழவைத்திருக்கிறார்.

- படம்: ப.பிரியங்கா