"எனக்கு யாரும் கொலை மிரட்டல் விடவில்லை" - கே.ஜி.எஃப் நாயகன் யாஷ் விளக்கம் | KGF hero Yash life threat is hoax

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (10/03/2019)

கடைசி தொடர்பு:08:05 (11/03/2019)

"எனக்கு யாரும் கொலை மிரட்டல் விடவில்லை" - கே.ஜி.எஃப் நாயகன் யாஷ் விளக்கம்

கடந்த இரண்டு நாள்களாக, கன்னடத் திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது. கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகி, மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற 'கே.ஜி.எஃப்' படத்தின் நாயகன் யாஷின் உயிர் ஆபத்தில் உள்ளது' என்று பரவிய செய்திதான் அதற்குக் காரணம்.

யாஷ்

இரண்டு ஆண்டுகளுக்கு முன், யாஷ் தனக்கு ஒரு மர்மக் கும்பலிடமிருந்து தொடர் கொலை மிரட்டல்கள் வருவதாக போலீஸில் புகார் அளித்தார். அதுபோலவே, கடந்த ஆண்டு மற்றொரு கன்னட நடிகரான அர்ஜுன் தேவ், தனக்கும் கொலை மிரட்டல்கள் வருவதாகப் புகார் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அந்த புகார்கள் விசாரிக்கப்பட்டன.

இந்நிலையில், மார்ச் 7-ம் தேதியன்று கர்நாடக காவல் துறையினரால், பாரத் (எ) 'ஸ்லம்' பாரத் எனும் ஒரு ரவுடி உள்பட நான்கு ரவுடிகள் கைதுசெய்யப்பட்டனர். சுப்பாரி வழக்கில் கைதான இவர்களை, மூன்று நாள்களாக போலீஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்து வருகிறது.

விசாரணையின்போது பாரத், தனது கேங் கூடிய விரைவில் ஒரு கன்னட நடிகரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளான். இந்தத் தகவல் வெளியானதும், கடந்த கால வழக்குகளைக் கருத்தில்கொண்டு, அது யாஷ் அல்லது அர்ஜுன் தேவாக இருக்கலாம் என காவல் துறையினர் யூகித்தனர். இந்தச் செய்தி வெளியானதும், கன்னட சினிமா துறையினரும், யாஷ் ரசிகர் மன்ற உறுப்பினர்களும் கொந்தளித்தனர்.

ரசிகர்களில் சிலர், யாஷுக்கு திரையுலகில் போட்டியாக இருக்கும் நடிகர்களைக் குற்றம் சாட்டத் தொடங்கினர்.

இதுகுறித்து யாஷ், சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோது, "எனக்கு இதுவரை எந்தக் கொலை மிரட்டலும் வரவில்லை. நான் பாதுகாப்பாக உள்ளேன்," என்றார்.

மேலும், "திரையுலகில் யாரும் எனக்கு எதிரி கிடையாது. இங்கே இருப்பது ஆரோக்கியமான போட்டி. கொலை செய்யும் அளவுக்கு கீழ்த்தரமாக யாரும் நடந்துகொள்ளப்போவதில்லை. அதனால், என் ரசிகர்கள் பிற நடிகர்களைக் குறைசொல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்," என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 


[X] Close

[X] Close