`எண்ட் கேம்' ரிலீஸுக்கு முன் 'அவெஞ்சர்ஸ்' இயக்குநர் ஜோ ரூஸோ இந்தியா வருகை | Avengers: End Game co-director Joe Russo visits India

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (12/03/2019)

கடைசி தொடர்பு:20:20 (12/03/2019)

`எண்ட் கேம்' ரிலீஸுக்கு முன் 'அவெஞ்சர்ஸ்' இயக்குநர் ஜோ ரூஸோ இந்தியா வருகை

தற்போது இந்தியாவிலிருக்கும் மார்வெல் ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தியாக, அந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து  ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது. 'எண்ட் கேம்' படத்தை இயக்கி ரூஸோ சகோதரர்களில் ஒருவரான ஜோ ரூஸோ அடுத்த சில வாரங்களில் இந்தியா வரவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டில், உலகளாவிய ரசிகர்களால் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் படம் என்றால் அது ரூஸோ சகோதரர்கள் இயக்கும் 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்'. `மார்வெல் சினிமாட்டிக் யூனிவெஸ்' எனப்படும் திரைப்படத் தொடரின் மிக முக்கியமான திரைப்படம் இது.

ரூஸோ

`அயர்ன்மேன்', `தார்', `கேப்டன் அமெரிக்கா', `ஸ்பைடர்-மேன்' எனப் பல சூப்பர் ஹீரோக்களின் கூட்டணியான 'அவெஞ்சர்ஸி'ன் கடைசி படமும் இதுதான். கடந்த வாரம் வெளியான `கேப்டன் மார்வெல்' உட்பட இதுவரை திரைக்கு வந்துள்ள 21 திரைப்படங்களின் இறுதிக்கட்டம் இந்தப் படம். அதனாலேயே இதற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.

மற்றப் படங்களின் மறைமுகத் தொடர்ச்சியாகவும், கடந்த ஆண்டு வெளியான 'அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' படத்தின் நேரடித் தொடர்ச்சியாகவும் இந்தப் படம் இருக்கும். இந்தப் படத்தொடரின் சூப்பர் வில்லனான தேனோஸ், `இன்ஃபினிட்டி வார்' படத்தின் இறுதியில், கிட்டத்தட்டப் பிரபஞ்சத்தின் பாதி மக்கள் தொகையை அழித்துவிட்ட நிலையில், இனி வரவிருக்கின்ற `எண்ட் கேம்' படத்தில் அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ கூட்டணி இறந்தவர்களை எப்படி மீட்ருவாக்கம் செய்யப்போகின்றனர் என்பதே கதைக் கருவாக இருக்கும் என ரசிகர்களால் நம்பப்படுகிறது.

ரூஸோ

இந்த நிலையில், தற்போது இந்தியாவிலிருக்கும் மார்வெல் ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தியாக, அந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து ஓர் அறிவிப்பு வந்திருக்கிறது. 'எண்ட் கேம்' படத்தை இயக்கி ரூஸோ சகோதரர்களில் ஒருவரான ஜோ ரூஸோ அடுத்த சில வாரங்களில் இந்தியா வரவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகிற ஏப்ரல் 26-ம் தேதி 'எண்ட் கேம்' வெளியாகவுள்ள நிலையில் ஜோ ரூஸோ உலகம் முழுக்க, அந்தப் படத்தின் புரோமோஷனுக்காகப் பயணம் செய்யவிருக்கிறார். அதை இந்தியாவின் மும்பையில் இருந்து தொடங்குகிறார் என்று சொல்லப்படுகிறது.