பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

நிறத்திலா இருக்கிறது நீதி?

நிறத்திலா இருக்கிறது நீதி?
பிரீமியம் ஸ்டோரி
News
நிறத்திலா இருக்கிறது நீதி?

நிறத்திலா இருக்கிறது நீதி?

யிரம் குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படக் கூடாது. ஆனால், அந்த நிரபராதி கறுப்பினத்தவராக இருந்தால்?!

நிறத்திலா இருக்கிறது நீதி?

‘சென்ட்ரல் பார்க் ஜாக்கர் கேஸ்’ மொத்த அமெரிக்காவையுமே புரட்டிப்போட்ட பிரபல வழக்கு. ஏப்ரல் 19, 1989 - நியூயார்க் சென்ட்ரல் பார்க்கில் இரவு ஜாகிங் சென்ற பெண் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டி ருக்கிறார். அதேநேரத்தில் மற்றும் சிலரும் பூங்காவின் மற்ற பகுதிகளில் தாக்கப்படுகின்றனர். இதற்குக் காரணமானவர் யார் என்று தெரியவில்லை. ஆனால், 14 முதல் 16 வயதிலான ஐந்து பதின்பருவத்தினர்தான் இந்தக் குற்றத்தைச் செய்திருக்க வேண்டும் என்று நிறத்தை வைத்து மட்டுமே முடிவெடுக்கிறது, காவல்துறை. கைதானதில் நான்கு பேர் கறுப்பினத்தவர், ஒருவர் ஹிஸ்பனிக் இனத்தவர். இவர்களை எப்படி அமெரிக்க நீதி அமைப்பு குற்றவாளி ஆக்குகிறது, அப்பாவி சிறார்களின் வாழ்வை அந்தச் சம்பவம் எப்படி மொத்தமாகத் திருப்பிப்போடுகிறது என உணர்வுபூர்வமாகப் பகிர்கிறது, நெட்ஃப்ளிக்ஸின் ‘When they see us’ மினி சீரிஸ்.

இன்றைய சூழலில், அமெரிக்காவின் இனவாத அரசியலைப் படமாக்குவது டொனால்ட் டிரம்ப்பைக் காட்டாமல் நிறைவு பெறாது. அவருடைய பேட்டிகளும் இத்தொடரில் இடம்பெறுகின்றன. இந்த வழக்கு நடக்கும்போது, ‘மரண தண்டனையை மீண்டும் கொண்டுவர வேண்டும்’ என நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கிறார் அவர். தொலைக்காட்சிகளில் பேட்டி அளிக்கிறார். “Maybe hate is what we need if we’re gonna get something done” என்கிறார். இரண்டு வரியில் வெறுப்பரசியலை விளக்குக என்று கேள்வி கேட்டால், இதை எழுதிவைத்து வந்துவிடலாம். இன்றும் இவற்றில் எதையும் திரும்பிப் பெறமாட்டேன் என்று டிரம்ப் நிலையாக நிற்பதுதான் இன்னும் பயமாக இருக்கிறது.

நிறத்திலா இருக்கிறது நீதி?

அடையாளமில்லாத எளிய மனிதர்களை நமது காவல்துறை எப்படிச் சுரண்டுகிறது எனக் காட்டியிருக்கும், ‘விசாரணை’ படம். ஆனால், அமெரிக்க வழக்கில் குற்றம்சாட்டப்படுகிறவர்கள் சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான். ஒரே விஷயம் நிறம்தான். வன்கொடுமை செய்யப்பட்டது, வெள்ளைப் பெண், குற்றம்சாட்டப்பட்டவர்கள் வேறு நிறம். இதுபோதும், விசாரணை தொடங்குவதற்கு முன்பே இவர்கள்தான் குற்றம் புரிந்திருப்பர் என முடிவெடுக்கின்றன அன்றைய வெள்ளை அமெரிக்க ஊடகங்கள்.

ஆதாரங்கள் இல்லை, சம்பவ இடத்தில் கிடைத்த DNA-க்கள் எவருடனும் ஒத்துப்போகவில்லை. காவல்துறையின் அழுத்தத்தில் இந்தச் சிறார்கள் கொடுத்த வீடியோ வாக்குமூலத்தை மட்டுமே வைத்துத் தீர்ப்பளிக்கிறது, நீதிமன்றம்.

2002-ல் உண்மைக் குற்றவாளி மத்தியாஸ் ரெய்ஸ் தானாக வந்து சரணடைகிறார். ஆதாரங்கள் பொருந்திப்போகின்றன. நீதிமன்றம் தனது தீர்ப்பைத் திரும்பப்பெற்றது. ஆனால், இவையெல்லாம் நடப்பதற்குள் கிட்டத்தட்ட முழுத் தண்டனையையும் பெற்றுவிடுகின்றனர் இந்த ‘சென்ட்ரல் பார்க் ஃபைவ்.’ இழப்பீடுகள் இவர்களது வாழ்க்கையைத் திருப்பித் தரப்போவதில்லை. எல்லா வற்றையும்விட, பார்ப்பவர்களுக்கு இவர்களின் மனநிலையை எடுத்துரைப்பதிலேயே கவனம் செலுத்துகிறது, இந்தத் தொடர்.

நிறத்திலா இருக்கிறது நீதி?

வெளியான நாள் முதல் நெட்ஃப்ளிக்ஸில் அமெரிக்கர்கள் அதிகம் பார்த்தது, இதைத்தான். இது அவர்களின் குற்றவுணர்வின் வெளிப்பாடாகக்கூட எடுத்துக்கொள்ளலாம். இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் இப்போது கொதிக்கின்றனர். அதில் முக்கியமானவரான லிண்டன் ஃபேர்ஸ்டீன், தற்போது க்ரைம் நாவல்கள் எழுதுகிறார். கிளம்பியிருக்கும் எதிர்ப்பால் இவரது பதிப்பகம் இவரை நீக்கியிருக்கிறது. என்றோ நடந்த ஒரு நிகழ்வுக்கு இன்று எதிர்வினைகளை ஏற்படுத்தும் சக்தி என்றுமே காட்சி ஊடகத்திற்கு உண்டு என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

“எனக்கு ஒரு கனவு இருக்கிறது. ஒருநாள் நிறத்தால் இல்லாமல் குணத்தால் மட்டும் ஒருவரை மதிப்பிடும் நிலை இந்த தேசத்தில் உருவாக வேண்டும். எனது நான்கு குழந்தைகளும் அதில் வாழவேண்டும்” என்பார், மார்ட்டின் லூதர் கிங். ஆனால், டிரம்ப் போன்றவர்கள் இந்தக் கனவிலிருந்து அமெரிக்காவைப் பின்னோக்கியே இழுத்துச் செல்கின்றனர். இதிலும் குற்றத்தைக் குற்றமிழைத்தவரே ஒப்புக்கொள்ளாமல் இருந்திருந்தால், இன்றுவரையும் குற்றவாளிகளாகவே ஐந்து கறுப்பினச் சிறுவர்களும் வாழ்ந்திருப்பர். இப்படி இதுவரை எத்தனை பேர் இந்த அதிகாரச் சக்கரத்தில் சிக்கியிருக்கின்றனர் என்பது யாருக்கும் தெரியாது.

என்றையும்விட, இந்த டிஜிட்டல் யுகத்தில் எல்லா இடங்களிலும் வெறுப்பரசியல் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது. இனமோ, நிறமோ, மதமோ, சாதியோ இது எல்லா இடங்களிலும் இருக்கிறது. இதனாலேயே இன்றைய அரசியல் சூழலில் முக்கியமான தொடராக மாறுகிறது, ‘When they see us.’

ம.காசி விஸ்வநாதன்