Published:Updated:

“கமர்ஷியல் படம், கலைப்படம்... கத்துக்க ரெண்டும் அவசியம்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“கமர்ஷியல் படம், கலைப்படம்... கத்துக்க ரெண்டும் அவசியம்!”
“கமர்ஷியல் படம், கலைப்படம்... கத்துக்க ரெண்டும் அவசியம்!”

“கமர்ஷியல் படம், கலைப்படம்... கத்துக்க ரெண்டும் அவசியம்!”

பிரீமியம் ஸ்டோரி

தென்னிந்திய ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘தர்பார்’, ராஜமௌலியின் `RRR’, சிரஞ்சீவியின் ‘சைரா’, பிரபாஸின் ‘சாஹோ’ ஆகிய படங்களின் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், இப்போது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் எடிட்டர்.

“கமர்ஷியல் படம், கலைப்படம்... கத்துக்க ரெண்டும் அவசியம்!”

“அப்பா அக்கினி சஞ்சீவி, ஒரு எடிட்டர். நிறைய தெலுங்குப் படங்களுக்கும், ஒருசில தமிழ்ப் படங்களுக்கும் எடிட் பண்ணியிருக்கார். பெரியப்பா, எல்.வி.பிரசாத் பெரிய லெஜண்டு. இப்படிப்பட்ட குடும்பப் பின்னணியில நான் பிறந்து வளர்ந்தாலும், சின்ன வயசுல சினிமா பார்க்காமலேதான் வளர்ந்தேன். அப்படிப்பட்ட எனக்கு, பத்து வயசு இருக்கும்போது ஒரு சம்மர் லீவ்ல திடீர்னு சினிமாமேல பிடித்தம் வர ஆரம்பிச்சது. அதுவரை விட்டுப்போன படங்களையும் தேடித்தேடிப் பார்க்க ஆரம்பிச்சேன். அதேசமயம், புத்தகங்கள்மீதும் ஆர்வம் வந்தது.

பத்திரிகையாளர் ஆகணும்னு ஆசைப்பட்டு, மெட்ராஸ் யுனிவர்சிட்டியில இலக்கியம் படிச்சேன். காலேஜ் முடிஞ்சு ரிசல்ட் வர்ற இடைவெளியில, அப்பா கொஞ்சநாள் அவர்கூட கூப்பிட்டார், போனேன். அப்போதான் சினிமா உருவாக்கத்தின் மீது எனக்கு ஆர்வம் வர ஆரம்பிச்சது. என்னை அறியாமலேயே அந்த வேலையை நேசிக்க ஆரம்பிச்சேன். அப்பாகிட்டயே உதவியாளரா சேர்ந்துட்டேன். அப்படியே பத்து வருடங்கள் போச்சு. 89-ல் நான் எடிட்டரா அறிமுகமான ‘சிம்ஹ ஸ்வப்னம்’ (தெலுங்கு) படம் வந்தது. என்னோட 3-வது படமும், இந்தியில் என் முதல் படமுமான அமீர்கான் நடிச்ச ‘ராக்’ படத்துக்காக தேசிய விருது கிடைத்தது. இதுவரை 8 தேசிய விருதுகள் வாங்கியாச்சு. அதிக மொழிப் படங்களில் எடிட்டரா வேலை பார்த்ததுக்காக ‘லிம்கா’ சாதனைப் புத்தகத்திலும் வந்தாச்சு. ஆனா, இன்னும் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு அனுபவத்தை எதிர்பார்த்துதான் தொடங்குறேன்.”

“இந்திய மொழிகளில் இதுவரைக்கும் 17 மொழிகளில் எடிட்டிங் பண்ணியிருக்கீங்க. மொழிக்கேற்ப எடிட்டிங் மாறுபடுமா?”

“கதையோட பின்புலமும், கலாசாரமும் மொழிக்கேற்ப மாறுபடுதே தவிர, இந்தியா முழுக்க உணர்வுகள் ஒரே மாதிரிதான் இருக்கு. அதனால, உணர்வுகளைக் கடத்துறதுல எனக்கு எந்த சிரமமும் ஏற்பட்டதில்லை. எப்போ சிரமம் வரும்னா, ஒரு அஸ்ஸாம் மொழிப் படத்தை எடிட் பண்றோம்னா, குறிப்பிட்ட இடத்துல வர்ற ஒரு குறிப்பிட்ட வாக்கியத்துக்கு என்ன அர்த்தம்னு புரிஞ்சுக்கிறதுல சிரமம் வரும். அதுக்காக ஒரு மொழிபெயர்ப்பாளரைப் பக்கத்துல வெச்சுப்பேன். இல்லைன்னா, முன்கூட்டியே சப்-டைட்டில் பண்ணச் சொல்லி, அதை வெச்சு எடிட் பண்ணுவேன். இப்போ எனக்கு ஏழு மொழி நல்லா புரியுது; நாலு மொழி சரளமா பேச வருது.”

“தென்னிந்தியத் திரையுலகின் முன்னோடி உங்க பெரியப்பா எல்.வி.பிரசாத் பற்றி?”

“இயக்கம், தயாரிப்பு, நடிப்பு, ஒளிப்பதிவுன்னு பல துறைகளில் பணிபுரிஞ்சவர். சினிமாவுல சம்பாதித்ததை சினிமாவுலதான் முதலீடு பண்ணணும்ங்கிறதைக் கொள்கையா வெச்சிருந்தவர். தன்னை மட்டுமல்லாம இன்டஸ்ட்ரி மொத்தத்தையுமே வளர்த்தெடுக்கணும்னு மெனக்கெட்டவர். அதுக்காக, நிறைய லேப், ஸ்டூடியோக்களைக் கட்டினார். அவர் இயக்கிய ஒரு படத்துல நான் அசிஸ்டென்ட் எடிட்டரா வேலை பார்த்திருக்கேன். அவரை மாதிரி நான் பெருசா மற்ற துறைகளில் இறங்கலைன்னாலும், ரெண்டு சின்ன படங்களைத் தயாரிச்சிருக்கேன்.” 

“ஒரு எடிட்டரா சில புதுமைகளைக் கொண்டு வந்திருப்பீங்க. அப்படி நீங்க கொண்டு வந்த சில புதுமைகள்?” 

“முன்னாடியெல்லாம் பெரும்பாலும் திரைக்கதைகளை ‘லீனியரா’தான் சொல்லிக்கிட்டிருப்பாங்க. ஆனா, நான் `அலைபாயுதே’ மாதிரி நிறைய ‘நான் லீனியர்’ திரைக்கதைகளைச் சொல்ல ஆரம்பிச்சேன். அமீர்கான் நடிச்ச ‘தில் சாத்தா ஹே’ படத்துல முழுக்க முழுக்க ‘ஜம்ப் கட்ஸ்’ வெச்சே பாடல்களுக்கு எடிட் பண்ணி யிருந்தேன். என்னைப் பொறுத்தவரை கதைக்கு எது தேவைப்படுதோ, அதை மட்டும்தான் பண்ணுவேன். எதையும் வலிந்து திணிச்சதில்லை.”

“மாஸ் கமர்ஷியல் படங்களுக்கும் வொர்க் பண்றீங்க, ‘டூ லெட்’ மாதிரியான யதார்த்தமான படங்களுக்கும் வொர்க் பண்றீங்க?”

“எந்த வகைப் படமா இருந்தாலும், அதோட டார்கெட் ஆடியன்ஸ் யார்னு பார்க்கணும். மாஸ் ஹீரோ படங்களின் ரசிகர்கள் தியேட்டர்ல கொண்டாட்ட மனநிலையை எதிர்பார்த்து வருவாங்க. அதை நாம பூர்த்தி பண்ணணும். ‘டூ லெட்’ மாதிரியான படங்களோட டார்கெட் ஆடியன்ஸ், மாற்று சினிமா ரசிகர்கள். இந்த ரசிகர்கள் முற்றிலும் வேறமாதிரி ரசனையை எதிர்பார்ப்பாங்க. அவங்க தேடுற உண்மைக்குப் பக்கத்துல இருக்கிற சினிமாவுக்காக மெனக்கெடணும். இப்படி விதவித மான படங்கள்ல வொர்க் பண்ணும்போதுதான், ஒரு எடிட்டரா நம் திறமையும் வளரும். கமர்ஷியல் படம், கலைப்படம் கத்துக்க ரெண்டுமே அவசியம்” 

“கமர்ஷியல் படம், கலைப்படம்... கத்துக்க ரெண்டும் அவசியம்!”

“ ‘துப்பாக்கி’ இடைவேளைக் காட்சி ரொம்பப் பரபரப்பா பேசப்பட்டது... அந்த அனுபவம்?”

“முருகதாஸ் அந்தக் காட்சியை ரொம்ப நல்லா எழுதியிருந்தார். 12 பேர் 12 இடத்துல சுடுறாங்கன்னு டீட்டெயிலா ஷூட் பண்ணியிருந்தார். படத்துல ஏழு நிமிடம் வர்ற அந்தக் காட்சிக்கு 14 மணிநேர ஃபுட்டேஜ் இருந்தது. அந்த சீக்வென்ஸைப் பொறுத்தவரை ரியல் டைமிங்ல நடக்கணும்னு முடிவு பண்ணினேன். 12 பேரையும் தனித் தனியா ரொம்பநேரம் காட்டினா போர் அடிச்சுடும்னு, ஒரே நேரத்துல 12 பேரையும் காட்டினேன். 12 பேர்கிட்டேயும் துப்பாக்கி இருக்குன்னு 3 பேர் ரியாக்‌ஷன்ல கடத்திட்டேன். அப்படின்னா, ஒரே நேரத்துல எதிரிகளைச் சுடுறதையும் நியாயமா ஒரே ஃப்ரேம்ல, ஒரே நேரத்துலதான் காட்டியிருக்கணும். ஆனா, அங்கே எமோஷன் முக்கியம். அதனால, தனித்தனியா காட்டினேன்.”

 “கடந்த காலங்கள்ல நீங்க பார்த்து வியந்த எடிட்டர், லேட்டஸ்ட் எடிட்டர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?”

“க்ரிஷிகேஷ் முகர்ஜி, பாலிவுட்ல பெரிய எடிட்டர். எனக்கு அவரோட வொர்க் ரொம்பப் பிடிக்கும். அதுக்கப்புறம், எங்க அப்பாவோட வொர்க் பிடிக்கும். சமீபகால தமிழ் சினிமாவுல நிறைய நல்ல எடிட்டர்ஸ் வந்திருக்காங்க. குறிப்பிட்டுச் சொல்லணும்னா, ‘96’ கோவிந்தராஜ் எடிட்டிங் பிடிச்சிருந்தது. அதேமாதிரி, ‘ராட்சசன்’ல ஷான் லோகேஷோட எடிட்டிங் பிடிச்சிருந்தது. ஒரு த்ரில்லர் படத்துக்குத் தேவையான பரபரப்பைப் பஞ்சமில்லாமல் கொடுத்திருந்தார்.”

 “ ‘தர்பார்’ அப்டேட்?”

“ ‘துப்பாக்கி’ படத்துல இருந்து நானும், முருகதாஸும் தொடர்ந்து இயங்கிக்கிட்டிருக்கோம். பொதுவா, அவர் படங்கள்ல ஒரு புது கான்செப்ட்டும் இருக்கும், மாஸ் சினிமாவுக்குத் தேவையான அம்சங்களும் இருக்கும். ‘தர்பார்’ படமும் அப்படித்தான் வந்திருக்கு. இன்னும் எடிட்டிங் ஆரம்பிக்கல.”

- தாட்சாயணி; படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு