"ஆழம் போவதும் கரை நடப்பதும் அவள் உரிமை" - மாரி செல்வராஜ் உணர்வுப் பதிவு! | Mari Selvaraj's note about raising his daughter independently

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (16/03/2019)

கடைசி தொடர்பு:19:20 (16/03/2019)

"ஆழம் போவதும் கரை நடப்பதும் அவள் உரிமை" - மாரி செல்வராஜ் உணர்வுப் பதிவு!

பொள்ளாச்சியில் நிகழ்த்தப்பட்ட, தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து தமிழகம் இன்னும் மீளவில்லை என்றே சொல்லலாம். அதுகுறித்து சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், திரைக் கலைஞர்கள் எனப் பலர் கருத்தும், எதிர்ப்பும் தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர். பெண்களைப் பாதுகாப்பாக இருக்கச் சொல்ல வேண்டுமா, ஆண்களை அறத்தோடு வளர்க்க வேண்டுமா என ஒரு புறம் விவாதங்களும் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், 'பரியேறும் பெருமாள்' இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதியுள்ள ஒரு முகநூல் பதிவு, பலரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. ஒரு பெண்குழந்தையின் தந்தை என்ற கண்ணோட்டத்தில் மாரி அந்தப் பதிவை எழுதியிருந்தார்.

மாரி செல்வராஜ்

"ஒரு பெண் பிள்ளையின் தகப்பனாக
எனக்கு எந்தப் பயமும் இல்லை பதட்டமுமில்லை 
என் மகளுக்கு நான் கடலைக் காட்டுவேன்
கடலின் அழகைக் காட்டுவேன்
அழகின் ஆழம் காட்டுவேன்
ஆழத்தில் உயிர்களைக் காட்டுவேன்
உயிர்களின் விநோதம் காட்டுவேன்
விநோதங்களின் விபரீதங்களைக் காட்டுவேன்
விபரீதங்களின் காரணம் காட்டுவேன்
காரணங்களின் முடிவுகளைக் காட்டுவேன்
முடிவுகளின் இழப்புகளைக் காட்டுவேன்
இழப்புகளிலிருந்து மீள வலு நீச்சல் காட்டுவேன்
நீச்சலின் நியாயம் காட்டுவேன்
நியாயத்தின் நிம்மதி காட்டுவேன்
இத்தனைக்கும் பிறகு அவள் பயந்தால்
மறுபடியும் கடல் காட்டுவேன்
அதன் அழகைக் காட்டுவேன்
அது அவளுடைய கடல் 
அது அவளுடைய அலை 
அவள் நம்புகிறவரை அவளுக்கு கடல் காட்டுவேன்
ஆழம் போவதும் 
கரை நடப்பதும்
அவள் உரிமை"

என்ற அந்தப் பதிவு, மாரி எழுதிய ஒரு சில நிமிடம் முதலே, ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் பகிரப்பட்டுவருகிறது. பலரால், குறிப்பாகப் பெண்களால், அந்தப் பதிவில் உள்ள "ஆழம் போவதும்; கரை நடப்பதும்; அவள் உரிமை" என்ற வரிகளைப் பாராட்டி பின்னூட்டங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

 

 


[X] Close

[X] Close