காலாவின் கண்ணம்மா பாடலுக்காக நன்றி சொன்ன பா.இரஞ்சித்! | Pa Ranjith shares about the making of Kannamma song from Kaala

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (18/03/2019)

கடைசி தொடர்பு:20:00 (18/03/2019)

காலாவின் கண்ணம்மா பாடலுக்காக நன்றி சொன்ன பா.இரஞ்சித்!

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கி, ரஜினிகாந்த், நானா படேகர், ஹூமா குரேஷி, ஈஸ்வரி ராவ் நடிப்பில் கடந்தாண்டு வெளியான `காலா' படத்தின் பாடல்களில் அனைத்து வயதினரையும் வெகுவாகக் கவர்ந்தது `கண்ணம்மா' பாடல். சந்தோஷ் நாராயணன் இசையில், உமா தேவி வரிகளில் உருவான இந்தப் பாடலை தீ, பிரதீப் குமார், அனந்து இணைந்து பாடியிருந்தனர்.

ரஜினிகாந்த்

பழைய, தொலைந்த காதலை மீண்டும் எண்ணி, வயது முதிர்ந்த காலாவுக்கும், ஜரீனாவுக்குமான உள்ளுணர்வாக இந்தப் பாடல் படத்தில் அமைந்திருக்கும். இந்தப் பாடலின் கம்போஸிங்கின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை அண்மையில் பகிர்ந்துகொண்டார் இரஞ்சித். கூகை திரைப்பட இயக்கம் நடத்திய உலக உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கலந்துரையாடலின் போது தீ இந்தப் பாடலைப் பாடிக்காட்டினார்.

அப்போது பேசிய இரஞ்சித், ``இந்தப் பாட்ட தீயை வைத்து ரெக்கார்டு பண்ணிட்டு சந்தோஷ் எனக்கு அனுப்பினார். எனக்கு ஒரே பயமாயிடிச்சு. இந்தப் பொண்ண சின்னப் பொண்ணாவே பார்த்துப் பழகிட்டேனா, தீடீர்ன்னு வயசானா ரெண்டு பேரோட காதல் பாட்டுக்கு இவங்க பாடுறாங்கன்னு தெரிஞ்சதும் படத்தோட இது ஒட்டுமா ஒட்டாதான்னு பயம் வந்திடுச்சு," என்றார்.

மேலும், ``சந்தோஷ் கிட்ட அதைச் சொல்லும்போது, அதெல்லாம் கண்டிப்பா செட்டாகும்னு என்னைச் சமாதானப்படுத்தினார். எனக்கும் அந்தப் பாட்ட பல முறைக் கேட்டதுமே புடிச்சுப்போச்சு. அப்புறம் ரஜினி சார்கிட்ட அந்தப் பாட்ட போட்டுக் காட்டும்போது, உடனே ஓ.கே சொல்லிட்டார். `சூப்பரா இருக்கு... சூப்பரா இருக்கு... அப்படியே ஷூட் பண்ணிடலாம்'ன்னு சொன்னார். அவருக்கும் இந்த சினிமாவோட சில சென்டிமென்ட்களை உடைக்கிறதுல அவ்வளோ ஆர்வம் உண்டு," என்றார்.

அதைக் கூறிவிட்டு, ``இந்தப் பாட்டுக்காக நான் எப்பவுமே தீ கிட்ட நன்றி சொன்னதில்ல. இந்த மேடையை அதுக்குப் பயன்படுத்திக்கிறேன்," என நெகிழ்ந்தார் இரஞ்சித்.