`ட்வைலைட்' நாயகனை இயக்கும் கிறிஸ்டோபர் நோலன்! | Robert Pattinson and Elizabeth Debicki join Nolan's next

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (22/03/2019)

கடைசி தொடர்பு:13:00 (22/03/2019)

`ட்வைலைட்' நாயகனை இயக்கும் கிறிஸ்டோபர் நோலன்!

உலகின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் எடுக்கப்போகும் அடுத்த படம் என்ன என்பதுதான் இன்று ஹாலிவுட்டின் மில்லியன் டாலர் கேள்வி. `டார்க் நைட்' முப்படத் தொடர், `இண்டெர்ஸ்டெல்லார்', `இன்செப்ஷன்', `டன்கிர்க்' உட்பட, நோலன் இதுவரை எடுத்த அத்தனைப் படங்களும் க்ளாசிக்காக இருக்கும் நிலையில், அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர் உலகளாவிய நோலன் வெறியர்கள்.

கிறிஸ்டோபர் நோலன்

வார்னர் ப்ரோஸ் தயாரிக்கும் இந்தப் படம், ஏதோவொரு நிகழ்வைப் பற்றியது என்பது மட்டும் தெரிந்திருந்த நிலையில், தற்போது அந்தப் படத்தில் நடிக்கப் போகும் நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அண்மையில், இந்தப் படத்தின் கதாநாயகன் ஈக்வலைஸர் பட நாயகன் டென்ஸெல் வாஷிங்டனின் மகன் ஜான் டேவிட் வாஷிங்டன் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே, இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வாங்கிய `ப்ளாக் க்ளான்ஸ்மேன்' படத்தில் ஹீரோவாக நடித்தவர்.

இந்த நிலையில், அந்தப் படத்தின் வேறு சில முக்கிய பாத்திரங்களை ஏற்று நடிப்பவர்கள் பற்றி நேற்று அறிவிப்பு வெளியானது. பிரபல ஃபேண்டஸிக் காதல் கதையான `ட்வைலைட்' படத் தொடர் மற்றும் `ஹேரி பாட்டர்' படத் தொடரில் நடித்த ராபர்ட் பேட்டின்ஸன் இதில் நடிக்கிறார். மேலும், `கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி', `பீட்டர் ரேபிட்' போன்ற படங்களில் நடித்த எலிசபெத் டெபிக்கியும் அடுத்த நோலன் படத்தில் ஒரு முன்னணி கேரக்டரில் நடிக்கிறார் என்றும் வார்னர் ப்ரோஸ் நிறுவனத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நோலனின் வழக்கமான இசையமைப்பாளரான ஹான்ஸ் ஜிம்மர்தான் இந்தப் படத்துக்கும் இசையமைப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

பெரும் நட்சத்திரக் கூட்டணி இணைந்துள்ளதால் இந்தப் படத்துக்கான எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.