'மறைமுகமாக இருந்தேன்; இப்போ அ.தி.மு.க-வில் இணைந்திட்டேன்!'- நடிகர் விஜய் கணேஷ் | Comedy actor vijay ganesh joins ADMK!

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (22/03/2019)

கடைசி தொடர்பு:19:20 (22/03/2019)

'மறைமுகமாக இருந்தேன்; இப்போ அ.தி.மு.க-வில் இணைந்திட்டேன்!'- நடிகர் விஜய் கணேஷ்

விஜய் கணேஷ்

கடந்த 16-ம் தேதி, அ.தி.மு.க உறுப்பினராக இணைந்திருக்கிறார் காமெடி நடிகர் விஜய் கணேஷ்.  அ.தி.மு.க தலைமைக் கழகப் பேச்சாளராகத் தனது பிரசாரத்தை ஆரம்பிக்கவிருக்கும் நிலையில், எப்படி திடீரென இந்தக் கட்சியில் சேர்ந்தீர்கள் என விசாரித்தோம். 

விஜய் கணேஷ்

''எனக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா  மீதான அபிமானம் எப்போதும் உண்டு. ஜெயலலிதா இருக்கும்போதே கட்சியில் சேர வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. ஆனால், அதற்கான சரியான சமயம் அப்போது அமையவில்லை. அதன் பிறகு, மறைமுகமாக அ.தி.மு.க-வின் ஆதரவாளனாக இருந்தேன். இப்போது, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்துள்ளேன். 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எனக்கு சொந்த ஊர். சினிமா ஆசையில் வீட்டிலிருந்து 65 ரூபாயை எடுத்துக்கிட்டு சென்னைக்கு ஓடியாந்துட்டேன். எனக்கும் கீழ ஏழெட்டு டிக்கெட்டு இருக்கு. எதையும் யோசிக்காம கிளம்பி வந்துட்டேன். திருவள்ளூர் பஸ் ஸ்டாண்டுல வந்து இறங்கினேன். அப்போ, எனக்கு  17 வயசு. எங்க ஊர்க்காரர் ஒருத்தர் ஒரு ஹோட்டல்  வெச்சிருந்தார்.

விஜய் கணேஷ்

அவர் மூலமாதான் சென்னை எனக்குப் பழக்கமானது. அதன் பிறகு, எவ்வளவோ கஷ்டத்துக்குப் பிறகு, சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கிடைச்சுது. என்னையும் அடையாளப்படுத்திக்கிற மாதிரியான கதாபாத்திரங்கள் வடிவேலு அவர்களோடு இணைந்தும் இதுவரை 62 படங்களுக்கு மேல நடிச்சிருக்கேன். இப்படி என் சினிமா பயணம் நிறைய மேடு பள்ளங்களைச் சந்திச்சிருக்கு.' 

இப்போதான், அரசியல் பயணம் ஆரம்பிச்சிருக்குது. என்னால முடிஞ்ச நல்ல விஷயங்களை இந்தக் கழகத்திற்குச் செய்யணும்னு ஆசைப்படுறேன். எந்தத் தொகுதியில் பேசப் போறேங்கிறது  தலைமைக் கழகம் அறிவிச்ச பிறகு கட்டாயம் சொல்றேன்'' என்று முடித்துக்கொண்டார் விஜய் கணேஷ். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க