ஜெயலலிதாவாக நடிக்கும் பாலிவுட் நடிகை - `தலைவி’ படக்குழு அறிவிப்பு | vijay's directorial thalaivi got kangna ranaut to play as Jayalalitha

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (23/03/2019)

கடைசி தொடர்பு:10:50 (23/03/2019)

ஜெயலலிதாவாக நடிக்கும் பாலிவுட் நடிகை - `தலைவி’ படக்குழு அறிவிப்பு

தலைவி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.இ.அ.தி.மு.க கட்சியில் நடந்த போட்டாபோட்டிகளைவிட அவரது பயோபிக் படத்தை எடுப்பதற்குப் போட்டி போட்டுக்கொண்டு கோலிவுட் இயக்குநர்கள் தயாராகி வருகின்றனர். பாரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி, ஏ.எல்.விஜய் ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கத் திட்டமிட்டிருந்தனர். மேலும், கெளதம் மேனன் ஜெயலலிதா பயோபிக்கை வெப்-சீரீஸாக எடுத்துக்கொண்டிருக்கிறார்.

கங்கனா ரணாவத்

ஏ.எல் விஜய்  இயக்கும் `தலைவி' படத்தில் பாலிவுட் நடிகையும் தமிழில் அஜித்குமாரின் `நேர்கொண்ட பார்வை' மூலம் அறிமுகமாகும் வித்யா பாலன் நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அவரது கால்ஷீட் உரிய நேரத்தில் கிடைக்காததால் தற்போது, `தாம்தூம்' படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதைப் படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டது.

மணிகர்ணிகா

சமீபத்தில் இவர் ஜான்ஸி ராணியாக நடித்து இயக்கிய `மணிகர்ணிகா' படம் பெறும் வெற்றிபெற்றது. திறமைக்கும், சர்ச்சைக்கும் குறைவே இல்லாத கங்கனா நடித்தால் தலைவி படம் இந்திய அளவில் பேசப்படும் ஒன்றாய் அமையும். ஏ.எல்.விஜய் இயக்கும் முதல் பயோபிக்  `தலைவி' படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும், பாகுபலி படத்தின் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கு இணை கதாசிரியராக இணைய, படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.

இப்படம் குறித்துப் படக்குழு விடுத்திருந்த செய்திக்குறிப்பில் கூறியதாவது, ``இது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அதிகாரபூர்வ வாழ்க்கை வரலாற்றுப் படம். ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகள் தீபாவிடமிருந்து NOC (No Objection Certificate) பெற்ற பின்னரே படத்தை உருவாக்கி வருகிறோம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா

 

கௌதம் மேனன் வெப் சீரிஸில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணனும், சசிகலாவாக விஜி சந்திர சேகரும் நடிக்கின்றனர். மேலும்,  பிரியதர்ஷினி படத்தில் நித்யா மேனனும் ஜெயலலிதாவாக நடிக்கின்றனர். லிங்குசாமி படத்தில் நயன்தாரா நடிக்கலாம் எனப் பேசப்பட்டு வருகிறது.