`உங்க பேர்ல இருக்கிற `ராதா'வை எடுத்துடுங்க சார்' - ராதாரவியின் சர்ச்சைப் பேச்சுக்கு விஷால் கண்டனம் | Vishal condemns radharavi on the recent controversial speech

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (25/03/2019)

கடைசி தொடர்பு:08:40 (25/03/2019)

`உங்க பேர்ல இருக்கிற `ராதா'வை எடுத்துடுங்க சார்' - ராதாரவியின் சர்ச்சைப் பேச்சுக்கு விஷால் கண்டனம்

விஷால்

`உன்னைப்போல் ஒருவன்' மற்றும் `பில்லா 2' ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்த திரைப்படம், `கொலையுதிர் காலம்'. கடந்த சனிக்கிழமை இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. நயன்தாரா, சக்ரி டோலட்டி ,யுவன் ஷங்கர் ராஜா எனப் படக்குழுவினர் வராததால், தயாரிப்பாளருக்கு நட்பானவர்கள், தயாரிப்பு சங்க நிர்வாகிகள், கரு.பழனியப்பன், நடிகர் ராதாரவி ஆகியோர் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் ராதாரவி, நயன்தாரா குறித்துப் பேசியது பெரிய அளவில் சர்ச்சையானது. பேயாகவும், சீதையாகவும் நயன்தாரா நடிக்கிறார் என்று தொடங்கி, அவர்குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ராதாரவி பேசியதற்கு சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பல்வேறு துறை பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ராதிகா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

விஷால்

 

இந்நிலையில், நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், `டியர் ராதாரவி சார், சமீபத்துல நீங்க முட்டாள்தனமாகப் பேசுனது, குறிப்பாகப் பெண்களுக்கு எதிராக கீழ்த்தரமான முறையில் பேசியதை வன்மையாகக் கண்டித்து, நடிகர் சங்கக் கடிதத்தில் கையெழுத்து போடுறதுல நடிகர் சங்க பொதுச் செயலாளராக மகிழ்ச்சியடைகிறேன்.  இந்தக் கடிதம் விரைவிலேயே வந்து சேரும். இப்போதிலிருந்து உங்க பேர `ரவி’ன்னு வச்சிக்கோங்க. காரணம், உங்கள் பெயரில் ஒரு பெண்ணின் பெயரும் இருக்கிறது" எனப் பதிவிட்டிருக்கிறார். 

அதேபோன்று, நடிகர் ராதாரவி தி.மு.க- விலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர்           க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``நடிகர் ராதாரவி கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டுவருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் தற்காலிகமாக தி.மு.க விலிருந்து நீக்கிவைக்கப்படுகிறார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.