``கீழ்த்தரமான பேச்சு மேன்மையை உயர்த்தாது!"- ராதாரவிக்கு நடிகர் சங்கம் கண்டனம் | Nadigar Sangam condemns Radha Ravi for his remarks on Nayanthara

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (25/03/2019)

கடைசி தொடர்பு:15:14 (25/03/2019)

``கீழ்த்தரமான பேச்சு மேன்மையை உயர்த்தாது!"- ராதாரவிக்கு நடிகர் சங்கம் கண்டனம்

நடிகை நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி பேசிய சர்ச்சைக்குரிய பேச்சால் அவருக்குத் தொடர்ச்சியாக எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அண்மையில் நடைபெற்ற `கொலையுதிர் காலம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராதாரவி அந்தப் படத்தின் நாயகி நயன்தாரா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசினார். அதைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன், விஷால், மிலிந்த் ராவ், சின்மயி எனப் பல திரைப் பிரபலங்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தென்னிந்திய நடிகர் சங்கம் அதிகாரபூர்வமாக, தன் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது. சங்கத்தின் தலைவர் நாசர், ராதா ரவிக்கு எழுதியிருந்த அந்தக் கடிதத்தில், ``ஆடியோ வெளியீட்டு விழாவில் பெண்களை கொச்சைப்படுத்துவது போல் நீங்கள் பேசிய இரட்டை அர்த்த வசனங்களைக் கேட்டு உண்மையிலேயே மனது மிகவும் வருந்துகிறது. இதைத் தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது" என்று கூறப்பட்டது.

ராதாரவி

மேலும், ``இந்த மேடையில் மட்டுமல்ல, பல காலங்களாக தங்களுடைய இணையதள நேர்காணலிலும் பொது மேடைகளிலும் திரைப்பட விழாக்களிலும் இதுபோல் இரட்டை அர்த்த வசனங்களையும், பெண்களைக் கொச்சைப்படுத்தி பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள். இது ஊடகங்களின் மூலம் உலகெங்கும் பரவியிருக்கிறது.

``இது ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் மற்ற நடிகர்களுக்கும், அதில் பங்காற்றக்கூடிய பெண்களுக்கும், ஒரு அவமானகரமான சூழ்நிலையையும், மனஉளைச்சளையும் ஏற்படுத்தித் தருகிறது என்பதை ஏன் தாங்கள் உணரவில்லை", என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது நடிகர் சங்கம்.

அதுமட்டுமல்லாமல், ராதாரவியின் சீனியாரிட்டி குறித்து, ``திரைத்துறையில் தங்களது தந்தையாருக்குப் பிறகு தொடர்ச்சியாக ஐம்பது வருடங்கள் நீண்ட அனுபவத்தைக் கொண்டிருக்கக்கூடிய தாங்கள் தங்களுடைய அனுபவங்களை நல்வழியில் பயன்படுத்தினால் அது வருகின்ற தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்கும்.

ஆனால், இதுபோன்ற கொச்சையான, கீழ்த்தரமான பேச்சுக்கள் உங்களுடைய மேன்மையை உயர்த்தாது மட்டுமல்லாமல், திரைத்துறையின் மேல் மக்களுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையும் சீரழிக்கும் என்பதை ஏன் உணரவில்லை. எது எப்படி இருப்பினும், இனிவரும் காலங்களில் நீங்கள் இதை உணர்ந்து, இதுபோன்ற வக்கிரமான பேச்சைத் தவிர்த்து செயல்படுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

அதைத் தவிர்த்து, இது போன்ற செயல்களில் நீங்கள் தொடர்ந்து செயல்படுவீர்கள் என்றால் `தென்னிந்திய நடிகர் சங்கம்' திரைத்துறையில் தங்களுக்குத் தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி, தீவிரமாக முடிவு செய்ய வேண்டி இருக்கும் என்பதை முன்னரே தங்களுக்கு இக்கடிதத்தின் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்," என்ற எச்சரிக்கையையும் நடிகர் சங்கம் விடுத்துள்ளது.