கோடைக் காலத்தில் வெளியாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது `களவாணி-2' | Kalavani-2 all set to release in Summer 2019

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (25/03/2019)

கடைசி தொடர்பு:18:10 (25/03/2019)

கோடைக் காலத்தில் வெளியாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது `களவாணி-2'

விமல், ஓவியா நடிப்பில், சற்குணம் இயக்கிய படம் `களவாணி'. கடந்த 2010-ம் ஆண்டில் வெளியான இந்தப் படம் கிராமத்துப் பின்னணியில் முழுக்க முழுக்க நகைச்சுவையூட்டும் திரைக்கதையுடன் அமைந்திருந்தது. இந்தப் படம் உருவாக்கிய டிரெண்டுக்குப் பின்தான் மனம் கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா போன்ற படங்கள் வெளியாகின.

இப்போது, முதல் பாகத்தை எடுத்த அதே குழு இணைந்து `களவாணி 2' படத்தை உருவாக்கியிருக்கிறது. இந்தப் படத்தைக் கோடை விடுமுறையில் வெளியிட மிக வேகமாக பணிகள் நடந்து வருகின்றன எனப் படக்குழுவினரால் கூறப்படுகிறது.

களவாணி 2

இதுகுறித்துப் பேசிய படக்குழுவினர், ``இந்த இரண்டாம் பாகம் முற்றிலும் புதிய கதைக்களத்தையும், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் அத்துடன் அழுத்தமான கதையையும் கொண்டிருக்கிறது" எனக் கூறினர். 

முதல் பாகத்தைப் போலவே, விமல் மற்றும் ஓவியா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு என அத்தனைப் பேரும் இந்தப் படத்திலும் நடிக்கிறார்கள். மேலும், மயில்சாமி போன்ற இன்னும் சில முக்கிய நடிகர்களும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்களன்றி, துரை சுதாகர் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். ``ஆனாலும் அவரின் கதாபாத்திரத்தின் குணாதிசயம் வழக்கமான வில்லன் கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது மற்றும் தனித்துவமானது. இது கண்டிப்பாக ரசிகர்களால் கவனிக்கப்படும்' என்று அவர்கள் கூறுகிறார்கள்.

மேலும், 'களவாணி 2'வில் ஓவியாவின் கதாபாத்திரம் முந்தைய படங்களில் குறிப்பாக '90எம்.எல்' படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று படக்குழுவினர் உறுதி அளிக்கிறார்கள்.