`ஜக்கியிடம் கேட்டேன், புரொமோசனுக்காகன்னு சொல்லிட்டாங்க!'- படம் சர்ச்சை குறித்து நீலிமா ராணி விளக்கம் | I'm not ready to speak about the jaggi vasudev pic says neelima rani!

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (26/03/2019)

கடைசி தொடர்பு:17:29 (26/03/2019)

`ஜக்கியிடம் கேட்டேன், புரொமோசனுக்காகன்னு சொல்லிட்டாங்க!'- படம் சர்ச்சை குறித்து நீலிமா ராணி விளக்கம்

நீலிமா ராணி

கடந்த மகா சிவராத்திரி அன்று ஜாக்கி வாசுதேவ் கூட்டத்தில் தமன்னா, காஜல் அகர்வால் போன்ற பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். சமூக வலைதளங்களில் கவனிக்கப்பட்டு, கமென்ட் செய்யப்பட்ட விஷயங்களில் ஜக்கி வாசுதேவ் சிவராத்திரியும் ஒன்று. அப்படி வைரலான படங்கள் வீடியோக்களில் பல ஸ்டார் பெயர்கள் வரிசையில் வந்தவர் நீலிமா ராணி. அவரைப் பற்றி நெகட்டிவ் கமென்ட்களை ட்விட்டர் பக்கத்தில் பார்க்க முடிந்தது. இது குறித்து நீலிமாவிடம் கேட்டேன்.

``இதுபற்றி பேசி என்னவாகப் போகிறது. பேசப் பேச அது தேவையில்லாத விவாதத்துக்குத்தான் உள்ளாகும். அதனால் அதைப்பற்றி நான் பேசவே இல்லை. பதில் சொல்ல ஆரம்பித்தால் வீண் விவாதமாகும். ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல நினைக்கிறேன். சமீபத்தில் பலராலும் ஷேர் செய்யப்பட்ட, கமென்ட் செய்யப்பட்ட ஜக்கியுடன் இருக்கும் என்னுடைய படம் சமீபத்தில் எடுத்தது அல்ல. அது 2014-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அந்த வருடமும் தமன்னா, சமந்தா போன்ற நடிகைகளும் வந்திருந்தனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவியும் அந்த இடத்தில் நாம் செல்வதில் என்னத் தவறு என்று தோன்றியது. அதனால் நானும் பங்குபெற்றேன். அப்போது போட்டோ எடுத்தார்கள்'' என்றவர், 

நீலிமா

``அதன் பிறகு அதை மறந்தேவிட்டேன். கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. இந்த வருடம் சிவராத்திரி அன்று நான் மருத்துவமனையில் இருந்தேன். என் மாமியார் சீரியஸாகி ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். ஒரு வாரம் வரை அங்கேயே தங்கவேண்டிய சூழ்நிலை. இப்போது அவர் நலமாக இருக்கிறார். ஒருவேளை எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்திருந்தால் சென்றிருப்பேன் என்று நினைக்கிறேன். இந்தப் படம் திடீரென இத்தனை வருடங்களுக்குப் பிறகு ஏன் வெளிவந்தது என ஜக்கி வாசுதேவ் பக்கம் கேட்டேன். `அது புரொமோசனுக்காகப் பயன்படுத்தப்பட்ட படம்' என்று விளக்கம் அளித்தார்கள். அதை அதோடு விட்டுவிட்டேன். இப்போது படங்களிலும், சீரியலிலும் கவனம் செலுத்தி வருகிறேன்'' என்றவர், 

நீலிமா ராணி

``வாணி ராணி சீரியலுக்குப் பிறகு ராதிகா மேடமுடன் இணைந்து நடிக்கவில்லையா எனக் கேட்கிறார்கள். நிச்சயமாக அவருடன் இணைந்து கூடிய விரைவில் நடிப்பேன். மற்றபடி தற்போது 'அரண்மனைக் கிளி' சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறேன். படங்களைப் பொறுத்தவரை தற்போது ரிலீஸ் ஆகி ஓடிக் கொண்டிருக்கும் `சத்ரு' படத்தை அடுத்து, `அராத்து' என்கிற படத்தில் ராபர்ட் மாஸ்டருக்கு ஜோடியாக நடிக்கிறேன். இப்போதுவரை இரண்டு, மூன்று ஷெட்யூல் முடிந்திருக்கிறது. கூடிய விரையில் ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள்'' என்றார் நீலிமா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க