சிகிச்சை முடிந்து `ஜுமாஞ்சி-3' படப்பிடிப்புக்குத் திரும்பினார் ட்வேன் ஜான்சன்! | Dwayne Johnson returns to the sets of Jumanji-3 after hospitalisation

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (26/03/2019)

கடைசி தொடர்பு:17:00 (26/03/2019)

சிகிச்சை முடிந்து `ஜுமாஞ்சி-3' படப்பிடிப்புக்குத் திரும்பினார் ட்வேன் ஜான்சன்!

ஒரு வாரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த `ஜுமாஞ்சி-3' படத்தின் ஷூட்டிங் இன்று மீண்டும் தொடங்கியது. கடந்த 2017-ம் ஆண்டு டுவைன் ஜான்சன் (தி ராக்) நடித்து உலகம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்றது `ஜுமாஞ்சி வெல்கம் டு தி ஜங்கிள்' திரைப்படம்.

இது 1995-ம் ஆண்டு ராபின் வில்லியம்ஸ் நடித்து ஹிட்டான `ஜுமாஞ்சி' படத்தின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனாக இருந்தது. ஐந்து பேர் இணைந்து விளையாடும் ஒரு வீடியோ கேமுக்குள் தொலைந்து போகும் இளைஞர்கள் அதைவிட்டு எப்படி வெளியே வருகிறார்கள் என்ற கதைக் களத்துடன் நகைச்சுவையான படமாக இரண்டாம் பாகம் இருந்தது. நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவரான நிக் ஜோனாஸ் இந்தப் படத்தின் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்தார்.

ஜுமாஞ்சி

இந்த இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாகத் தற்போது மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. டுவைன் ஜான்சன், நிக் ஜோனாஸ் உட்பட, இரண்டாம் பாகத்தில் நடித்திருந்த அத்தனை பேரும் இந்தப் படத்திலும் நடித்து வருகின்றனர். இரண்டாம் பாகத்தின் இறுதியில் நீக்கப்பட்ட காட்சி ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதாகத் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கொலம்பிய பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. மேலும், இந்தப் படம், முதல் பாகமான பகடை உருட்டி விளையாடும் பாரம்பர்ய `ஜுமாஞ்சி' கேமை மையப்படுத்தி நகரும் கதையோடு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது படத்தின் நாயகனும், முன்னாள் மல்யுத்த வீரருமான டுவைன் ஜான்சனுக்கு நுரையீரலில் ஏதோ திரவம் சுறந்து கோளாறு ஏற்பட்டது. இதுகுறித்து கூறியிருந்த ஜான்சன், ``இத்தனை ஆண்டுகால ரெஸ்ட்லிங் மற்றும் சினிமா பயணத்தில் இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டதில்லை. முதல் முறையாக இடைவெளி விட வேண்டியதாக இருக்கிறது," என்றார்.

இதனால் படப்பிடிப்பு சிறிது காலம் நிறுத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வாரகாலமாக ஜான்சன் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். ஒரு வழியாக, தன் நீண்ட ஓய்வுக்குப் பிறகு உடல்நிலை தேறிவிட்ட நிலையில், தற்போது அவர் மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல், படம் திட்டமிட்டபடி டிசம்பர் 13-ம் தேதியே வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.