`கும்பலை எதிர்த்து நின்ற ஓர் உறவின் கதை!'- ராம் கோபால் வர்மாவின் `சசிகலா' படத்தின் அப்டேட் | sasikala-jayalaitha relationship's story to be made film by Ram gopal varma

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (01/04/2019)

கடைசி தொடர்பு:16:34 (01/04/2019)

`கும்பலை எதிர்த்து நின்ற ஓர் உறவின் கதை!'- ராம் கோபால் வர்மாவின் `சசிகலா' படத்தின் அப்டேட்

சர்ச்சைக்கு பேர் போனவர் பிரபல தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா. ஜெயலலிதா, சசிகலாவின் உறவை மையப்படுத்திய படமாக இது உருவாகவிருக்கிறது.


ஜெயலலிதா - சசிகலா 

சமீபத்தில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில், `என்.டி.ஆர்: கதாநாயகுடு’ படம் வெளியானது. டோலிவுட் சூப்பர் ஸ்டாரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் வாழ்க்கையை மையப்படுத்தியது இது. மற்ற பயோபிக்குகளைப்போல இல்லாமல், இது இரண்டு பாகங்களாக வெளியாகிறது. ராமராவின் திரைத்துறை வாழ்க்கையை முதல் பாகமான `கதாநாயகுடு (கதாநாயகன்)' படத்திலும், அரசியல் வாழ்க்கையை `மஹாநாயகுடு (மகாநாயகன்)' என இரண்டாம் பாகத்திலும் படமாக்கியிருந்தனர்.  

ராம்கோபால் வர்மா வேறு ஒரு கோணத்தில் இயக்குவதாகவும், ராமராவின் இரண்டாவது மனைவி லக்ஷ்மியின் கண்ணோட்டத்தில் சொல்லப்படும் திரைக்கதையில் அமைந்திருக்கும் இந்தப் படத்துக்கு, 'லக்ஷ்மிஸ் என்.டி.ஆர்' எனப் பெயரிட்டிருந்தார். சமீபத்தில், இப்படத்துக்கு சந்திரபாபு நாயுடுவைத் தவறாகக் காட்டியிருக்கக்கூடும் எனக் கூறி, ஆந்திராவில் வெளியாகத் தடைவிதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆந்திராவைத் தவிர உலகெங்கும் ரிலீஸானது.

சசிகலா

ஆந்திராவில் படத்தை வெளியிடுவதற்கான வேலைகளைப் பார்த்துவரும் அதேவேளையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு படத்தை விரைவில் எடுக்கப்போவதாக, தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  "இரக்கமற்ற ஆண்கள், சிறைச்சாலைகள் மற்றும் மன்னார்குடி கும்பலை எதிர்த்து நின்ற ஒரு உறவின் கதை" என்ற வாசகத்துடன் ஜெயலலிதா சசிகலா  இணைந்திருக்கும் போஸ்டர் ஒன்றை ஷேர் செய்துள்ளார். 

ram gopal varma

"ஜெயலலிதா, சசிகலா இடையே இருக்கும் உறவுகுறித்து போயஸ் கார்டன் பணியாள்கள் என்னிடம் கூறிய உண்மைகள், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிர்ச்சிகரமாக இருந்தது. அதை என் படத்தில் காட்டுவேன்" எனவும், "மன்னார்குடி மாபியாவின் டான் விடோ சசிகலா கார்லியோன்…சசிகலாகூட  இதை மறுக்க மாட்டார்" என்று இரண்டு வருடங்களுக்கு முன்பே, 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம்தேதி இப்படம் குறித்து தெரிவித்திருந்தார்.