’உதிரிப் பூக்கள்’ ஸ்பாட்ல அவரை ஒளிஞ்சிருந்து க்ளிக் பண்ணினேன்! - காரணம் பகிரும் ஸ்டில்ஸ் ரவி | cenema still photographer ravi shares about director mahendran

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (02/04/2019)

கடைசி தொடர்பு:15:45 (02/04/2019)

’உதிரிப் பூக்கள்’ ஸ்பாட்ல அவரை ஒளிஞ்சிருந்து க்ளிக் பண்ணினேன்! - காரணம் பகிரும் ஸ்டில்ஸ் ரவி

’’சென்னையில ஜெமினி மேம்பாலத்துக்குப் பக்கத்துல இருக்கிற பாம்குரோவ் ஹோட்டலுக்கு, ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்துக்கு ஃபோட்டோ ஆல்பம் ரெடி பண்ணி எடுத்துட்டுப் போனேன். ’அன்னக்கிளி’ செல்வராஜ் இயக்கிய படம். அதே ஹோட்டல்ல, நாங்க இருந்த ரூமுக்கு பக்கத்து அறையில டிஸ்கஷன்ல இருந்தார் இயக்குநர் மகேந்திரன்.  அப்ப, ‘முள்ளும் மலரும்’ முடிச்சிருந்தார். எதேச்சையா என்னோட ஆல்பம் அவர் கைக்குப் போனது. பார்த்துட்டு கூப்பிட்டுவிட்டார். முதன் முறையா அவரை நான் சந்திச்சது அந்த நாள்தான்.’’ சினிமா புகைப்படக்காரராக சுமார் 600 படங்கள் வரை பணிபுரிந்திருக்கிற ‘ஸ்டில்ஸ்’ ரவி, ‘உதிரிப்பூக்க’ளுக்கு கமிட் ஆன நாளை நினைவு கூர்ந்தபடியே பேசத் தொடங்குகிறார்..

ஸ்டில்ஸ் ரவி

’ஒரேயொரு ஆல்பம் பார்த்துட்டு, எனக்கு அந்தப்  படத்துல பணிபுரிய வாய்ப்பு தந்தார். அந்த வாய்ப்பை நானும் நல்லவிதமா பயன்படுத்தினேன். ஷூட்டிங்ல ஒரு நாள், அவர்கிட்ட இருந்து நான் கேட்ட வார்த்தை, ‘எல்லாரையும் போலவே செய்திட்டிருந்தா அதுல என்ன டேஸ்ட் இருந்துடப் போகுது? எதுவா இருந்தாலும் வித்தியாசமா என்ன செய்ய முடியும்னு யோசிக்கணும்’. இந்த வார்த்தைகள் எனக்குள்ளும் தாக்கத்தை உண்டாக்க, நான் யோசிச்சேன். அப்ப, புகைப்படக்காரர்கள் ஆர்ட்டிஸ்டுகளை ஸ்ட்ரெய்ட்டா சன் லைட்ல வச்சு ஃபோட்டோ எடுப்பாங்க. நான் என்ன பண்ணுவேன்னா, அதுக்கு எதிர்புறமா ஆர்ட்டிஸ்டுகளோட தலைக்குப் பின்னாடி சூரியன் வர்ற மாதிரி எடுக்கத் தொடங்கினேன். இதனாலயே, அந்தச் சமயத்துல ‘பேக்லைட்’ ரவின்னு எனக்கு அடைமொழிகூட கிடைச்சது. என்னோட இந்த முயற்சிக்குக்  காரணம், மகேந்திரன் சார்தான்.

மகேந்திரன்

’உதிரிப்பூக்கள்’ படத்துக்குப் பிறகு, அவரோட எல்லாப் படங்கள்லயும் வொர்க் பண்ணினேன். வருஷத்துக்கு ஒண்ணுங்கிற அளவுல எண்ணிக்கை குறைவா இருந்தாலும், அவரோட படங்கள்னா கமிட் ஆகிடுவேன். காரணம், ஒரு படத்துக்காக அவரோட மெனக்கெடல் இருக்கே, அது எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஒரு பியானோவை லாரியில எடுத்து வச்சுக்கிட்டு அப்படியே போய்கிட்டே இருப்பாங்க. எங்கே இடம் நல்லா இருக்கோ, அந்த லொக்கேஷன்ல இறங்கி, சாங் ஷூட் பண்ணுவாங்க. அப்படியொரு மெனக்கெடல் அவர்கிட்ட இருக்கும். அதேபோல, போட்டோ எடுக்க பிரியப்படாத ஒரு மனுஷன். ஆரம்பத்துல  சில மேக்கிங் ஸ்டில்களை எடுக்கிறப்ப ஒளிஞ்சிருந்துதான் அவரை போட்டோ பிடிச்சேன். ஆனா, பிரின்ட் போட்டு அந்த அவர்கிட்ட காட்டினதும் முகம் மலர்ந்திருக்கார். சமரசம் பண்ணிக்காத ஒரு கலைஞன். தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம் பிடிச்சிருக்கிற ‘உதிரிப் பூக்கள்’ மாதிரியான படங்கள்ல என்னோட வொர்க்கும் இருக்குன்னு நினைக்கிறபோதே ஒரு சிலிர்ப்பா இருக்கு’ என்கிறார் ரவி.