

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'தானே' புயலின் கோர தாண்டவம் ஏற்படுத்திய அழிவுகளில் இருந்து கடலூர், புதுச்சேரி மக்களை மீட்டு எடுப்பதற்கான துயர் துடைப்புத் திட்டத்துக்கு நீங்களும் உதவலாம். Vasan Charitable Trust என்ற எங்களின் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி. எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சேமிப்புக் கணக்கு எண் 000901003381 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: ICIC 0000009, நுங்கம்பாக்கம் கிளை, சென்னை-600034) வழியாக அனுப்பலாம்.
வெளிநாட்டு வாசகர்கள் எங்களின் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918-க்கு (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: IDIB 000C032, எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) அனுப்பலாம். நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடனின் அண்ணா சாலை அலுவலகத்தில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக் கொள்ளலாம்.
Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/0304 dt. 10052010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.
நேயமிக்க வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருப்பினும், கீழே நாங்கள் அளித்து உள்ள படிவத்தையும் தயவுசெய்து பூர்த்திசெய்து, 'தானே துயர்துடைப்புத் திட்டம்’ என்று உறையின் மீது மறவாமல் குறிப்பிட்டு 'ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600002' என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம். www.vikatan.com/thane என்ற இணைய முகவரியில், இது தொடர்பான பூர்வாங்க விவரங்களை இப்போதே நீங்கள் காணலாம்.
வாருங்கள் வாசகர்களே... 'தானே’ துயரை நாமும் துடைப்போம்!
- ஆசிரியர்

நெகிழவைத்த குழந்தைகள்!

'உதவி செய்வதற்குப் பணம் முக்கியம் இல்லை... மனம்தான் வேண்டும்’ என்று பொட்டில் அறைந்தாற்போல காட்டிவிட்டார்கள் திருப்பூரைச் சேர்ந்த காது கேளாத, வாய் பேசாத மாணவ, மாணவியர். கடலூர் பாதிப்பை அறிந்து அதிர்ச்சியும் அனுதாபமும் அடைந்திருக்கிறார்கள். அதுவரை அவர்கள் சேமித்துவந்த உண்டியலை, ''இதைப் பாதிக்கப் பட்டவங்களுக்கு அனுப்புங்க சார்...'' என்று பள்ளி நிர்வாகி முருகசாமியிடம் மனப்பூர்வமாகக் கொடுத்து இருக்கிறார்கள். அவர் அனுப்பிவைத்த ஏழு உண்டியல்கள் நமக்கு வந்து சேர்ந்தன. அத்துடன் இருந்த முருகசாமியின் கடிதத்தில் 'விகடனில் பதிவான தானே புயல் கட்டுரையை, குக்கூ குழந்தைகள் வெளி நண்பர் குமரன் என் குழந்தைகளோடு பகிர்ந்துகொண்ட வேளையில், நிறைய குழந்தைகளின் கண்களில் நீர்... பெருமூச்சு. அடுத்த நாள் அந்த மக்களுக்காக இறை வேண்டலுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன. விகடனின் உயர் கருணைக்கு எம் குழந்தைகளின் சிறிய பங்களிப்பு அவர்களது சேமிப்பிலிருந்து... பெற்றுக் கொள்ளுங்கள்!’ என்று எழுதி இருந்தது. அந்த உண்டியல்களில் இருந்த தொகை

8,343.25. இந்தத் தொகை ஆயிரம் கோடிகளுக்குச் சமம்!
சாலியந்தோப்புக்கு கூரை, மூங்கில்!

''தானே புயலில் வீடுகளை இழந்து 100 குடும்பத்தினர் உறங்கவும் இடம் இல்லாமல் தவிக்கிறோம். எங்களுக்கு ஏதாவது வழி செய்ய முடியுமா?'' என சிதம்பரம் அருகே உள்ள சாலியந்தோப்பு கிராமத்தில் இருந்து நமக்கு விண்ணப்பம் வந்தது.
100 வீடுகளுக்கான மூங்கில்கள், 12 ஆயிரம் கீற்று மட்டைகள், 150 கிலோ கயிறு, இணைப்பதற்கான 1,000 பாளைகள் என சாலியந்தோப்பு கிராமத்துக்கான அவசியத் தேவைகளை நிறைவேற்றும் வேலைகள் கடகடவென நடந்தன. கீற்றுகளுக்கான மொத்தச் செலவையும் சினிமா இயக்குநர் சசிகுமார் ஏற்றுக்கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் நம் வாசகரான முகமது அசாருதீன், கயிறு மற்றும் பாளைகள் ஆகியவற்றுக்கான செலவை ஏற்றுக்கொண்டார். 1,000 மூங்கில் கழிகளை நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில் 'ஸ்ரீதுர்கா பவன்’ உணவகம் நடத்தும் செல்வம் வழங்கினார். இவர்கள் மூவரும் இணைந்து 100 வீடுகளுக்கு உயிர் கொடுத்தார்கள்.
பத்திரக்கோட்டையில் மருத்துவ முகாம்!

சென்னை (கிழக்கு) ராஜா அண்ணாமலை புரம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.விஸ்வநாதன், செயலாளர் ஆரியோ பாபு, அடுத்த வருடத்துக்கான தலைவர் பி.டி.குமார், இளைஞர் நலன் பிரிவு இயக்குநர் பி.ரகு நாதன் ஆகியோர் மிகுந்த ஆர்வத்துடன் மருத்துவ உதவிகள் செய்ய முன்வந்தனர்.
உடனடியாக, கடலூரில் பாதிக்கப்பட்ட பகுதி களில் ஆய்வு நடத்திய 'டாக்டர் விகடன்’ குழுவினர், பத்திரக்கோட்டை கிராமத்தைத் தேர்வுசெய்தார்கள். கடந்த 21-ம் தேதி அங்கே மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. சென்னை செட்டிநாடு ஹெல்த் சிட்டியைச் சேர்ந்த கண்-காது-மூக்கு, தோல், பொது மருத்துவம், நோய்த்தடுப்பு மற்றும் சமூக மருத்துவம், மனநலம், எலும்பு, பல் எனப் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனர்.
இந்த முகாமில் பத்திரக்கோட்டை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 550 பேர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் செட்டிநாடு ஹெல்த் சிட்டி சார்பில் வழங்கப்பட்டன. மேலும், அப்போலோ ஃபார்மஸி சார்பில்

40 ஆயிரம் மதிப்புள்ள மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன. சிலருக்கு இதய நோய் போன்ற பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களுக்கு செட்டிநாடு ஹெல்த் சிட்டியிலேயே அரசுக் காப்பீட்டைப் பயன்படுத்தி, மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி பரிந்துரைக்கப்பட்டது.