யூடியூபிலிருந்து நீக்கப்பட்ட `எனை நோக்கி பாயும் தோட்டா' வீடியோக்கள் – என்ன காரணம்? | is ennai nokki payum thotta movie dropped?

வெளியிடப்பட்ட நேரம்: 09:53 (05/04/2019)

கடைசி தொடர்பு:11:17 (05/04/2019)

யூடியூபிலிருந்து நீக்கப்பட்ட `எனை நோக்கி பாயும் தோட்டா' வீடியோக்கள் – என்ன காரணம்?

`எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் யூடியூபிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

எனை நோக்கி பாயும் தோட்டா

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஒன்றாகா எண்டர்டையின்ட்மென்ட், எஸ்கேப் ஆர்டிஸ்ட் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் `எனை நோக்கி பாயும் தோட்டா’. தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சசிகுமார் நடிக்கிறார். தர்புகா சிவா படத்துக்கு இசையமைக்கிறார். ஜோமோன் டீ ஜான் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல, `மறுவார்த்தை பேசாதே’ `விசிறி’ உள்ளிட்ட பாடல்கள் ஹிட் அடித்தன. 2016-ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. ஏறக்குறைய 3 ஆண்டுகள் படம் ரீலிஸுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.  ஆனால், பல்வேறு பிரச்னைகள் காரணமாக படம் ரீலிஸாவதில் சிக்கல் ஏற்பட்டது. காலதாமதத்தால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நீக்கப்பட்ட பாடல்கள்

இந்த நிலையில், நேற்று திடீரென படத்தின் பாடல்கள், டீசர் ஆகியவை யூடியூபிலிருந்து நீக்கப்பட்டதால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். என்ன காரணம் என்று தெரியாததால், ட்விட்டரில் ஒன்றாகா நிறுவனத்துக்கு டேக் செய்து கேள்வி எழுப்பினர். தொடர்ந்து `படம் ட்ராப்?’ என்பது போன்ற சந்தேகங்களும் பரவத்தொடங்கின. 

ட்வீட்

இது தொடர்பாக விசாரித்தபோது, ``தனியார் ஆடியோ நிறுவனத்துக்கு ஆடியோ உரிமத்தை விற்க தயாரிப்பு நிறுவனம் சார்பில் பேசப்பட்டுவருகிறது. அதனால் ஒன்றாகா நிறுவனத்தின், யூடியூப் சேனலிலிருந்த, `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் வீடியோக்களை பிரைவேட் மோடில் மாற்றியுள்ளனர்” என தகவல் தெரிவிக்கப்பட்டது. அண்மையில் படத்தின் தயாரிப்பாளர் படத்தை வெளியிடுவது குறித்து விநியோகஸ்தர்கள் மற்றும் பைனான்சியர்களைச் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.