``கலைஞனிடம் படைப்பை நிறுத்தச் சொல்லுவது மிகப்பெரிய தண்டனை'' - `மகேந்திரன்' பற்றி விக்ரமன்! | That is the biggest punishment to the artist says director vikraman!

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (05/04/2019)

கடைசி தொடர்பு:13:40 (05/04/2019)

``கலைஞனிடம் படைப்பை நிறுத்தச் சொல்லுவது மிகப்பெரிய தண்டனை'' - `மகேந்திரன்' பற்றி விக்ரமன்!

 

விக்ரமன்

இயக்குநர் மகேந்திரனின் இறப்பு, தமிழ் சினிமாவுக்குப் பேரிழப்பு. அவரின் மறைவு பற்றி இயக்குநர் விக்ரமனிடம் கேட்டேன்.

``அவரது படைப்புக்கு நான் எப்போதும் ரசிகன். அவரை நான் குருவாகத்தான் பார்க்கிறேன். அவர்கிட்ட நான் வேலை பார்க்கல. என் முதல் படமான `புது வசந்தம்' படத்திலேயே என்னுடைய துரோணர்கள் என எட்டு இயக்குநர்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தேன். என் துரோணர்களுக்கு ஏகலைவனில் குரு வணக்கம்' எனக் குறிப்பிட்டிருந்தேன். அதில் மகேந்திரன் பெயரும் இடம் பெற்றிருந்தது. 

உலக சினிமா என நாம் இப்போது கொண்டாடுகிற ஒரு விஷயத்தை 40 வருஷத்துக்கு முன்னாடியே எடுத்துக் காட்டியவர். நல்ல தரமான இயக்குநர். சினிமா என்பது விஷூவல் மீடியா. வசனத்தை சொல்லிப் புரிய வைக்கக் கூடாது. காட்சியிலேயே புரிய வைக்க வேண்டும். அவர் அடிப்படையில் வசனகர்த்தா. இயக்குநர் ஆவதற்கு முன்பு பல படங்களுக்கு வசனங்கள் எழுதியுள்ளார். வசனம்தான் அதிகமாக எழுதியுள்ளார். பிறகு, இயக்குநர் ஆனதும், வசனம் என்பது காட்சிகளின் மொழிதான் எனக் காட்டியவர். காட்சிகளின் வழியாகத்தான் 
பெரும்பாலான கதைகளைப் புரிய வைப்பார். 

விக்ரமன்

`உதிரிப் பூக்கள்' படத்தில் விஜயன் மனைவி அஸ்வினி ஒரு மூலையில் உட்கார்ந்திருப்பாங்க. விஜயன் வெளியிலிருந்து வீட்டிற்குள் வருவார். வந்தவர் மனைவியைப் பார்ப்பார். பார்த்துவிட்டு, `சீக்கிரம் ரெடியாகு.. சினிமாவுக்குப் போறோம்' எனச் சொல்லிட்டு உள்ளே  போய் விடுவார். அப்போது அஸ்வினி நிமிர்ந்து பார்ப்பாங்க.. வேகமாக வெளியே வந்து வானத்தை அண்ணாந்து பார்ப்பாங்க. `மழை எதுவும் வரப்போகுதா?' என அண்ணாந்து பார்ப்பாங்க. அந்தக் காட்சியில் வானம் முழுக்கக் காண்பித்திருப்பார். அந்த சீனுக்கு அப்படியொரு கிளாப்ஸ் தியேட்டர்களில். அப்படி நாற்பது வருடங்களுக்கு முன்பே, காட்சிகள் வழியாக எடுக்கப்பட சீன்களுக்கு கைதட்டல் வாங்கியவர்.'' என்றவர் அவருடனான நட்பு பற்றிப் பகிர்ந்தார்.

``நான் இயக்குநர் சங்கத் தேர்தலில் ஒரு முறை விசு சாருக்கு எதிராக நின்றேன். அப்போது எனக்கு ஆதரவாகப் பேசியவர். விக்கிரமனைத் தேர்ந்தெடுத்தால் சங்கத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும்' எனச் சொன்னார். என்னுடைய கடைசிப் படமான `நினைத்தது யாரோ' படத்தில் கடைசிக் காட்சியில் கிட்டத்தட்ட 40 இயக்குநர்கள் நடிச்சிருந்தாங்க. அதில் மகேந்திரனும் நடித்திருந்தார். 

நல்ல படைப்பாளிக்கு ஒரு படைப்பு போதும். அது காலாகாலத்துக்கு இருக்கணும். ஆயிரம் படைப்புகள் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவர் சாகும் வரைக்கும் படைக்க வேண்டும் என நினைத்தவர். அது அவருக்குள் தீயாக இருந்த உண்மை. கலைஞனிடம் படைப்பை நிறுத்தச் சொல்லுகிற தண்டனையைவிட பெரிய தண்டனை வேறில்லை. பல வருடங்கள் இயக்காமல் இருந்த அவருக்குள்ளும் அது இருந்ததாகவே நினைக்கிறேன்.''என்றார் விக்ரமன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க