`கடைசி மூச்சு இருக்கும்வரை போராடுவோம்!’ - அயர்ன் மேனுக்குக் குரல் கொடுத்த விஜய் சேதுபதி! #AvengersEndgame | Avengers end game tamil trailer

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (05/04/2019)

கடைசி தொடர்பு:13:20 (05/04/2019)

`கடைசி மூச்சு இருக்கும்வரை போராடுவோம்!’ - அயர்ன் மேனுக்குக் குரல் கொடுத்த விஜய் சேதுபதி! #AvengersEndgame

மார்வெல் காமிக்ஸிற்கு அசைக்க முடியாத ஹிட் கொடுத்தது அவஞ்சர்ஸ். மார்வெல்லின் அனைத்து சூப்பர் ஹீரோக்களும் சங்கமிக்கும் இடம் இதுதான். இந்தப் படம் வரும் ஏப்ரல் 26-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்துடைய தமிழ் டிரெய்லர் நேற்று வெளியாகி இருக்கிறது.

அவெஞ்சர்ஸ்

அயர்ன்மேனில் ஆரம்பித்து தோர், கேப்டன் அமெரிக்கா, ஏன்ட்மேன், ப்ளாக் விடோ, ப்ளாக் பாந்தர் போன்ற அனைத்து சூப்பர் ஹீரோக்களும் இணைந்து சண்டையிட்டு உலகத்தைக் காப்பாற்றுவதுதான் அவெஞ்சர்ஸ் படத்தின் கதை. இந்தப் படத்தின் நான்காவது பாகமான `எண்டு கேம்' வரும் ஏப்ரல் 26-ம் தேதி வெளியாகிறது. `இன்ஃபினிட்டி வார்' பாகத்தில் தானோஸ் அனைவரையும் மாயமாக மறைய வைத்துவிடுவார். இதைத் தொடர்ந்து எண்ட் கேம் பாகத்தில் என்ன நடக்கவிருக்கிறது என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பும். பொதுவாக இதுபோன்ற ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவிலும் மார்க்கெட் அதிகம். இந்த யுக்தியை அடுத்தகட்டத்துக்குக் கொண்ட செல்ல நடிகர் விஜய் சேதுபதியையும், நடிகை ஆண்ட்ரியாவையும் இந்தப் படத்திற்கு டப்பிங் செய்ய வைத்திருக்கின்றனர். ராபர்ட் டௌனி ஜூனியரின் அயர்ன்மேன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதியும், ஸ்கார்லெட் ஜொஹான்சனின் ப்ளாக் விடோ கதாபாத்திரத்துக்கு ஆண்ட்ரியாவும் டப்பிங் கொடுத்துள்ளனர். இதன் தமிழ் வெர்ஷன் டிரெய்லர் நேற்றுதான் வெளியானது. தற்போது, யூ டியூபின் முதல் டிரெண்டிங்கிலும் இந்த டிரெய்லர் இடம்பெற்றிருக்கிறது. இதன் தமிழ் வசனங்களை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.