Published:Updated:

உங்களுக்கும் எனக்கும் வரலாறு உண்டு!

பூ.கொ.சரவணன்படங்கள் : பா.காயத்ரிஅகல்யா

உங்களுக்கும் எனக்கும் வரலாறு உண்டு!

பூ.கொ.சரவணன்படங்கள் : பா.காயத்ரிஅகல்யா

Published:Updated:
##~##

ந்தப் புத்தகக் கண்காட்சியில் கவனம் ஈர்த்தவர்களில் முக்கியமானவர் உசிலம்பட்டியைச் சேர்ந்த சுந்தர வந்தியத்தேவன்.' 'பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்’ என்ற அவருடைய புத்தகம் ஒரு சமூகத்தின் வரலாறு என்பதைத் தாண்டி, நல்ல படைப்பாக வந்திருக்கிறது. புத்தகத்தில் வந்திருக்கும் கதையைக் காட்டி லும், அந்தப் புத்தகம் வந்த கதையே முக்கிய மானது என்கிறார்கள் சுந்தர வந்தியத்தேவனை அறிந்தவர்கள்.

 ''என் அம்மா 'பொன்னியின் செல்வன்’ வந்தியத்தேவனின் தீவிர ரசிகை. அதனால், எனக்கு இந்தப் பெயர் வைத்தார்கள். வந்தியத்தேவன்போல நான் வீராதிவீரனாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், நானோ பிறக்கும்போதே குறைபாட்டோடு பிறந்தேன். 'பிளாஸ்டிக் பேபி’ என்பார்கள் என்னைப் போலப் பிறந்தவர் களை!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடலின் தசைகள் இறுகிப்போய் கை கால்களை அசைக்கவே மிகவும் கஷ்டமாக இருக்கும். இதனால், நான் நடக்க ஆரம் பிக்கவே ஐந்து வயதாகிவிட்டது.

உங்களுக்கும் எனக்கும் வரலாறு உண்டு!

நடக்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களுக்குள் அடுத்த சிக்கல். உடல் உறுப்புகளின் எடையைத் தாங்கும் சக்தி தசைகளுக்கு இல்லை. அதனால், என் ஒட்டுமொத்த உடல் எடையும் முதுகெலும்பில் இறங்கி, முதுகெலும்பு வளைந்துவிட்டது. உணவை எடுத்துச் சாப்பிடவே கஷ்டம்.

அம்மா ஆசிரியையாகப் பணியாற்றிய பள்ளியிலேயே நான் படித்ததால், வகுப்பறைச் சங்கடங்களை ஓரளவுக் குச் சமாளிக்க முடிந்தது. பேனாவைப் பிடித்து எழுதுவதற்குக்கூட முடியாது. அப்புறம் கையெழுத்து எப்படி இருக்கும்? யாருக்குமே புரியாது!

எல்லோருக்கும் புரிவதுபோல எழுதவே ரொம்ப காலம் எடுத்துக்கொண்டேன். அப்போது எல்லாம் தேர்வுகளை நினைத்தாலே, மனம் நடுங்கும். ஆனால், பேச்சு கை கொடுத்தது. பேச்சுப் போட்டிகளில் பெயர் எடுத்தேன். கட்டுரைப் போட்டிகளில் நான் பங்கெடுத்துக்கொள்ள முடியாத நிலையில், என் கருத்துக்களை நண்பர்களிடம் சொல்லி அவர்களைப் பங்கெடுத் துக்கொள்ளச் சொன்னேன். அவர்களுடைய அழகிய கையெழுத்துக்களில் என் கருத்துக் கள் பரிசுகளை அள்ளின. ஒரு வழியாகச் சட்டம் படித்து முடித்தேன். வாசிப்பும் படிப்பும் பெரும் ஆறுதலாக இருந்தன. ஆனால், எழுத்து என்பது என்னைப் பொறுத்த அளவில் ஒரு பெரும் கனவாகவே இருந்தது.

உங்களுக்கும் எனக்கும் வரலாறு உண்டு!

இந்த நிலையில், என்னை எழுத்தை நோக்கித் தள்ளியது ஒரு புத்தகம். அது, ந.மு.வேங்கடசாமி நாட்டார் எழுதிய 'கள்ளர் சரித்திரம்’. அந்த நூலை வாசிக்க வாசிக்க... நான் அதிர்ந்துபோனேன். வெறும் கொள்ளையர்களாகவும் குற்றப் பரம்பரையினராகவும் மட்டுமே ஓர் இனத்தைச் சித்திரித்து அந்த வரலாறு எழுதப்பட்டு இருந்தது. இந்த மண்ணின் பூர்வகுடிகளான பிறமலைக் கள்ளர்பற்றியோ, அவர்களுடைய எண்ணற்ற பழக்கவழக்கங்கள்பற்றியோ, வாழ்வியல் பண்புகள்பற்றியோ அதில் துளி அளவும் விஷயம் இல்லை.

ஒரு வேலை விஷயமாக மதுரைக்கு பால்டிமோரில் இருந்து வந்திருந்த பேராசிரியர் ஆனந்த பாண்டியனைச் சந்தித்தேன். அவருக்குப் பூர்வீகம் கம்பம் பள்ளத்தாக்கு. பிறமலைக் கள்ளர்பற்றி அவர் ஆய்வு செய்துவந்தார். அப்போது 'கள்ளர் சரித்திரம்’ எனக்குள் ஏற்படுத்திஇருந்த பாதிப்பு அவருடைய ஆய்வில் என்னை நாட்டம்கொள்ளச் செய்தது. ஆய்வுப் பணி என்றால் என்ன என்று அவரிடம் கற்றுக்கொண்டேன்.

இதனிடையே சென்னையில் என் மாமாவின் முயற்சியால், தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சத்தியநாராயணன் அவர்களிடம் ஜூனியராகச் சேர்ந்தேன். என்னால் விரைந்து பணிகளை முடிக்க முடியாது. நான் ரொம்பவும் மெதுவாகவே வேலைகளைச் செய்வேன். இருந்தாலும், அவர் எனக்கு மிகப் பெரிய உற்சாகத்தை அளித்தார். என் வளர்ச்சியில் பெரிய அக்கறை எடுத்துக்கொண்டார்.

ஆனாலும், என் மனம் முழுவதும் என் மக்களின் வரலாற்றைத் தேடித் தொகுக்க வேண்டும் என்பதிலேயே இருந்தது. என் அம்மாவின் ஓய்வூதியப் பணத்தை மட்டுமே நம்பி நடந்த என் ஜீவனத்தையும் பேருந்தில் ஏறக்கூடப் பிறர் துணை தேவைப்படும் என் உடல்நிலையையும் சுட்டிக்காட்டி, என் ஆய்வுக்குத் தடை போட்டார்கள் சொந்தக்காரர்கள்.

மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வக்கீல் தொழில் செய்யப்போகிறேன் என்று சொல்லிவிட்டு, யாரையாவது துணைக்கு அழைத்துக்கொண்டு ஆய்வுப் பணிக்காக கிராமம் கிராமமாகச் சுற்றத் தொடங்கினேன்.

சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்... கிராமத்து மக்கள் ஓடி ஓடி உதவினார்கள். தங்கள் ஊரார் வாழ்க்கை, தங்கள் முன்னோரின் வரலாறு பதிவுசெய்யப்படுகிறது என்கிற ஆர்வம்!

இதை ஒரு குறிப்பிட்ட மக்களின் வாழ்வாகப் பார்க்கக் கூடாது. நம் சமூகத்தில் எந்த இனத்தவரும் தனி வாழ்க்கை வாழ்ந்துவிடவில்லையே? கள்ளர் இன மக்களின் வாழ்வும் பிற இன மக்களின் வாழ்வோடு ஒருங்கிணைந்தே அமைந்து இருந்தது. அதனால், இந்த வரலாற்றுப் பதிவு பல்வேறு இன மக்கள் வாழ்வோடும் இணைந்ததுதான். இதை யார் புரிந்துகொண்டார்களோ இல்லையோ... கிராமத்து மக்கள் நன்றாகப் புரிந்துவைத்திருந்தார்கள். எனக்கு எல்லா இன மக்களின் ஆதரவும் கிடைத்தது. அனைத்துத் தரப்பினருமே உதவினார்கள்.

ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்... ஒரு நாள் என் காலில் இருந்து செருப்பு நழுவி விழுந்துவிட்டது. என்னால் கால் விரலை நகற்றி செருப்பை அணிந்துகொள்ள முடியாது. அப்போது ஒரு பெரியவர் தன் கைகளால் என் கால் விரல்களை விலக்கி செருப்பைப் போட்டுவிட்டார். என்னை நெகிழவைத்து, அழவைத்த சம்பவம் அது!

எட்டாண்டு காலம் எவ்வளவோ கஷ்டங்களுக்குப் பிறகுதான் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைத் தேடிப்போய் என் ஆய்வுப் பணியை முடித்தேன். மக்களின் குரல்களைப் பதிவுசெய்தேன்.

உங்களுக்கும் எனக்கும் வரலாறு உண்டு!

ஆனால், அப்போது எல்லாம் ஏற்படாத சவால், நான் பதிவுசெய்ததை எழுத உட்கார்ந்தபோது ஏற்பட்டது. பேனா என்னைப் பயமுறுத்தியது. அப்போதுதான் கொச்சம்மாள் எனக்கு உதவ முன்வந்தார். தலித் பெண்ணான அவருடைய அழகான கையெழுத்தில்தான் என்னுடைய எழுத்துக் கனவு சாத்தியமானது. பல்வேறு தடைகள், அவமானங்கள், துரோகங்களைத் தாண்டி இந்த நூல் வெளிவந்து உள்ளது.

இந்த ஆய்வுக்காகப் பல விஷயங்களை விரும்பி ஏற்றுக்கொண்டேன். என் வயது நாற்பதை எட்டவிருக்கிறது. இன்னமும் திருமணம் முடியவில்லை. வருமானம் என்று அம்மாவின் ஓய்வூதியத்தைத் தவிர, வேறு எதுவும் இல்லை. ஆனாலும் ஒரு திருப்தி இருக்கிறது!

இதுவரை நம்முடைய வரலாறு சேர, சோழ, பாண்டியர்களின் வரலாறாகத்தான் இருக்கிறது. மக்களின் வரலாற்றுக்கு அதில் இடமே இல்லை. நான் ஒரு சின்ன முன்னெடுப்பை ஆரம்பித்துவைத்திருக்கிறேன். இன்னமும் நிறைய எழுத வேண்டி இருக்கிறது. மக்கள் கதைகளுக்குப் பஞ்சமா என்ன?'' - வலியை மீறி வார்த்தை கள் வெளிப்படுகின்றன சுந்தர வந்தியத்தேவனிடம் இருந்து!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism