ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தனுசு ராசி நேயர்களே' | Harish kalyan's new movie update

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (08/04/2019)

கடைசி தொடர்பு:13:30 (08/04/2019)

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தனுசு ராசி நேயர்களே'

சமீபத்தில் வெளியான 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படம், ரசிகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்துக்கு 'தனுசு ராசி நேயர்களே' என்று டைட்டில் வைத்துள்ளனர். 

ஹரிஷ் கல்யாண்

'அரிது அரிது', 'சட்டப்படி குற்றம்', 'வில் அம்பு', 'பொறியாளன்' போன்ற படங்களில் நடித்துவந்த  ஹரிஷ், விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதற்குப் பின், இவருக்குக் கிடைத்த வாய்ப்புதான் 'பியார் பிரேமா காதல்'. யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவான இப்படத்தில், அதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரைஸா இவருக்கு ஜோடியாக நடித்தார். ரசிகர்களிடையே நல்ல பெயரைப் பெற்ற இப்படம், வசூல்ரீதியாகவும் ஹிட்டடித்தது.

இதற்குப் பின், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இவர் நடித்த படம், 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்'. ரோம்-காம் ஜானரில் தயாரான இப்படத்தில், ஹரிஷுக்கு ஜோடியாக ஷிப்லா மஞ்சுநாத் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் சஞ்சய் இயக்கும் 'தனுசு ராசி நேயர்களே' எனும் படத்தில் நடிக்க இருக்கிறார்.  சில பேர், ராசி நட்சத்திரங்களில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், இன்னும் சில பேர் காலையில் ராசி பலன் பார்த்துதான் அந்த நாளையே தொடங்குகிறார்கள். இதை மையப்படுத்திதான் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹரிஷ் உண்மையிலே தனுசு ராசிதான் என்பதையும் இயக்குநர் குறிப்பிட்டிருக்கிறார்.