Published:Updated:

பிரபாகரன் இருந்த ஆதரவு இப்போது யாருக்கும் இல்லை!

டி.அருள் எழிலன்ஓவியம் : ஸ்யாம்

பிரபாகரன் இருந்த ஆதரவு இப்போது யாருக்கும் இல்லை!

டி.அருள் எழிலன்ஓவியம் : ஸ்யாம்

Published:Updated:
##~##

''இத்ரிஸ் என்கிற எரித் திரியக் கிழவனுக்கு 30 வருடங்களுக்கு முன்னர் கருமையும் திரண்ட தோள்களும் உருக்குலையாத கட்டான உடலும் வாய்த்துஇருந்தது. இப்போதுபோன்று இடுங்கிய கண்களும் ஒடுங்கிய கன்னங்களும் கோடுகளாகச் சுருங்கிய தோல்களும் இருக்க வில்லை. அகன்ற நெற்றியும் தலையோட் டினை ஒட்டிச் சுருள் சுருளாயிருந்த தலை மயிரும் அவனுக்கு இருந்தன. எப்போதும் எதையோ சொல்லத் துடிப்பதுபோலத் தடித்த உதடுகளை அவன் கொண்டு இருந் தான். உறுதியான கரங்கள் எத்தியோப்பியப் படைகளிடம் இருந்து பறிக்கப்பட்ட துப்பாக்கிகளைத் தாங்கி இருந்தன. இருண்ட வானத்தில் இரண்டு சூரியன்களைப் போன்ற பிரகாசமான கண்கள் அவனுக்கு இருந்தன. அவற்றில் சதா காலத்துக்கும் ஒரேயரு கனவு மீதம் இருந்தது. அது தனி எரித்திரிய விடுதலை தேசம்!''

- தனது 'ஆறாவடு’ நாவலின் இறுதி அத்தியாயத்தை இப்படி ஆரம்பிக்கிறார் சயந்தன். 50 ஆண்டுகளாக ஈழத்தில் நடைபெறும் இன ஒடுக்குமுறை, 30 ஆண்டு கால ஆயுத யுத்தம் என நாடுநாடாக நிழல் தேடி ஓடிய ஈழ மக்களின் ஓட்டத்தையும் அதன் கொடும் வலியையும் மக்களின் பார்வையில் இருந்து தனது நாவலில் பதிவுசெய்திருக்கும் சயந்தன், அண்மையில் தனது நாவல் வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்தார். அவருடன் உரையாடியதில் இருந்து...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இடப்பெயர்வுதான் ஈழ மக்கள் சந்தித்த இரண்டாவது பெரும் யுத்தம். ஒரு பக்கம் இனவாத அரசு, இன்னொரு பக்கம் ஊரைவிட்டுத் துரத்தும் இடப்பெயர்வுகள் என இயற்கையோடு மோதிய உயிர் விளை யாட்டு அது. அப்படித்தான் எங்களின் இடப்பெயர்வும் நடந்தது. எனக்கு மூன்று வயதாக இருந்தபோது, 1983-ல் அப்பா சவுதி அரேபியாவுக்கு இடம்பெயர்ந்தார்.

பிரபாகரன் இருந்த ஆதரவு இப்போது யாருக்கும் இல்லை!

1995-ல் நடந்த மாபெரும் இடப்பெயர் வில் நானும் அம்மாவும் தங்கையும் யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவில் காடு கள் சூழ்ந்த தேவிபுரம் எனும் கிராமத்துக்கு இடம்பெயர்ந்தோம். மூன்று வருடங் களுக்குப் பிறகு 'வெற்றி நிச்சயம்’ என்ற பெயரில் வன்னி மீது இலங்கை ராணுவம் பெரும் எடுப்பில் போர் தொடுத்தது. மீண்டும் உயிர் வாழ்க்கை நிச்சயமற்ற தாகியபோது, மன்னாரில் இலுப்பைக்கடவை என்னும் இடத்தில் இருந்து படகில் ராமேஸ்வரம் வந்தோம். சற்றே பெரிய மீன்பிடி வள்ளத்தில் சுமார் 40 பேர் பயணித்தோம். வெறும் 18 மைல் இடை வெளியில் இந்தியாவும் இலங்கையும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அகதிகளுக்கு அந்தத் தூரம் கொடும் அமைதி சூழ்ந்த பெருந்தூரம். வாழ்தலுக்கான கனவைக் கடலுக்குக் காவு கொடுத்திடாமல் தப்பிப் பிழைப்பதே இயற்கையோடு நாங்கள் நடத்தும் போராட்டம்தான். இரவு 10 மணிக்குப் புறப்பட்ட வள்ளம் மறு நாள் காலை 10 மணி அளவில் கடலில் வைத்து ராமேஸ்வரத்தின் வெளிச்சக் கோபுரம் ஒன்றை மெல்லிய ஒளிக்கோடாகக் காட்டியபோதுதான் மீண்டும் நம்பிக்கை துளிர்விட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து அழைத்துச் சென்று, எங்களை மண்டபம் அகதி முகாமில் தங்கவைத்து இருந்தார்கள்.

அங்கு காலையில் எழுந்ததும் கடலை வெறித்துப் பார்த்தபடி இருந்தோம். பின்னர் மதியம், அந்தியிலும் கடலையே பார்த்தோம். கடலைப் பார்ப்பதைத் தவிர, ஒரு குடிமைச் சமூகத்தின் உரிமைகளான கல்வியோ, வேலையோ யாருக்கும் வழங் கப்படவில்லை. பெரும்பாலான குடும்பங் கள், 200 ரூபாயோடும் கொஞ்சம் பருப்பு, அரிசியோடும் வாழ முடியாது இருந்தனர். இவ்வாறான நிலையில், வேறு வழி இல்லா  மல் நாங்கள் களவாக எங்கு இருந்து தப்பி வந்தோமோ, மீண்டும் அந்த தேசத்துக்குக் களவாகவே சென்றோம்.

இலங்கையில் இருந்து சுமார் 15 லட்சம் மக்கள் உலகெங்கும் இடம்பெயர்ந்து இருக்கிறார்கள். சொந்த நாட்டைவிட்டு ஓடவைத்ததில்... குண்டுகள், ஷெல்லடிகள், கடத்தல்கள், கொலைகள், ஆயுதங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. இந்த ஓட்டம் நிம்மதியான பயணம் அல்ல. கனவை, காதலை, காணியை, பிறந்த வீட்டை, நாட்டை என எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டுத் துரத்தியிருக்கிறது யுத்தம். 80-களின்தொடக்கத்திலேயே மனிதர்களை இலங்கையை விட்டுத் துரத்தத் தொடங்கிய யுத்தம், இன்னமும் துரத்தியபடியே இருக்கிறது!''

''ஒரு பக்கம் போர் வெடிக்கும் என்கிறார்கள்... இன்னொரு பக்கம் ஈழம் சாத்தியம் இல்லை என்கிறார்கள்... நீங்கள் எந்தப் பக்கம்?''

''நான் எந்தப் பக்கமும் இல்லை. சில காயங்கள், கவலைகள் இருந்தாலும் என் மனைவி-குழந்தையோடு சுவிஸ்ஸில் ஓரளவு நிம்மதியாகவே வாழ்கிறேன். போர் வேண்டும் என நான் சொல்ல விரும் பினால், முதல் துப்பாக்கியை என் குழந்தையின் கைகளிலேயே கொடுக்கும் யோக்கியனாக நான் இருக்க வேண்டும். இன்னொரு பக்கம் எல்லாம் முடிந்துவிட்டது என்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை.

பிரபாகரன் இருந்த ஆதரவு இப்போது யாருக்கும் இல்லை!

யாருமே விரும்பாத ஓர் இடத்துக்கு வன்னி மக்கள் வந்துவிட்டார் கள். புலிகளை விமர்சித்தவர்கள்கூட வன்னி மக்களின் இந்தத் துயரத்தை விரும்பவில்லை. பெரும் மரணத் துயருள் சிக்கி, போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலை யிலும் மக்கள் வாழ்வில் எந்த மாற்றமும் தெரியவில்லை. யுத்தம் மக்களைத் தின்று தீர்த்ததே தவிர, அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்கவில்லை. யுத்தத்தின்போது இருந்த அதே பதற்றமும் உயிர்க் கொலை அச்சமுமே அவர்களிடம் எஞ்சியுள்ளது. வன்னியில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் காணாமல்போன யாரோ ஒருவரைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எஞ்சிய கனவைத் தவிர, வேறு எதுவுமே அவர்களிடம் இல்லை. ஆகக் குறைந்தது, வீடுகளுக்கு முன்னால் நிற்கிற ராணுவத்தினர் கொஞ்சம் அப்பால் நகர வேண்டும்!''

''ஏகப்பட்ட தமிழ்த் தலைமைகள் ஈழ மக்களுக்காக உருவாகிவிட்டனவே?''

''ஆமாம்... மக்கள் எண்ணிக்கையைவிட தலைவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. துரோகி, கைக்கூலிப் பட்டங்களும் அதிகம். பிரபாகரன் எடுத்த காரியத்தில் உண்மையாகவும் உறுதியாகவும் இருந்தார். அந்த இடத்தில் இன்னொருவரை வைத்துப் பார்க்க பெரும்பாலான ஈழ மக்களால் இயலாது. பந்தயத்தில் நாமும் இருக்க வேண்டும் என்றுதான் சிலர் நினைக்கிறார்கள். எல்லோருக்கும் ஈழம்தான் கனவாக இருக்கிறது. ஆனால், அதை அடையும் வழி தெரியாமல் குழுக்களாகப் பிரிந்து மல்லுக் கட்டுகிறார்கள். விடுதலைப் புலிகளுக்கோ, பிரபாகரனுக்கோ இருந்த ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் ஆதரவு, இப்போது எந்த அமைப்புக்கும் இல்லை என்பதுதான் உண்மை. கசந்துபோன மனநிலையில் இருக்கும் ஈழ மக்கள், இன்று சில உண்மைகளை உணர்கிறார் கள். இனப்படுகொலை அறிக்கையை ஐ.நா. வெளியிடுகிறது என்றால், 'படுகொலையைத் தடுக்காத ஐ.நா. இப்போது அறிக்கை வெளியிடு கிறதா?’ என்று கேட்கிறார்கள். இந்தக் கேள்வி மட்டுமே எங்கள் மக்களின் நியாயமான உணர்வு என்று நான் நம்புகிறேன்!''

''ஈழ மக்களின் இன்றைய தேவை என்ன?''

''நிச்சயமாக அவர்களால் ஆயுதங்களை உண்ண முடியாது. உலகின் மிக மோசமான ஒரு ராணுவக் கண்காணிப்பின் கீழ் அவர் கள் வாழ்கிறார்கள். தமிழகத்தில் இருந்து சிலர், 'ஐந்தாவது ஈழப் போர் வெடிக்கும்; பிரபாகரன் வருவார்’ என்கிறார்கள். இதை எல்லாம் துளியளவுகூட பாதிக்கப்பட்ட மக்கள் ரசிக்கவில்லை. ரசிக்கும் நிலையிலும் அவர்கள் இல்லை. அவர்களின் நிலம், உணவு, வேலை, கல்வி எனச் சகல வாழ்வுரிமைகளும் பறிக்கப்பட்டு இருக்கின்றன. எங்கும் பௌத்த விஹாரைகளை நிறுவுகிறது இலங்கை அரசு. ஈழத் தமிழர் களைச் சூழ்ந்துள்ள இருண்ட மேகங்கள் கலையாத வரை அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது. அவர்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்பவும், இழந்தவற்றைப் பெற்றுக் கொடுக்கவுமே நாம் குரல் கொடுப்பது நேர்மையாக இருக்கும்!''

''இந்தியா இலங்கையைப் பயன்படுத்துகிறதா? இலங்கை இந்தியாவைப் பயன்படுத்துகிறதா?''

''இந்தியா தன் அரசியல் ராணுவ நலன் களுக்காக இலங்கையைப் பயன்படுத்த முயல்கிறது. மிகக் குறைந்த தூரத்தில் இலங்கை இருந்தாலும், இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவின் அரசியல் ஆதிக்கம் இலங்கையில் அண்டவிடாமல் தனித்துவமிக்க ஒரு நாடாக இலங்கையைக் காத்துவருகிறார்கள் சிங்கள ஆட்சியாளர் கள். இது அவர்களின் தனித் திறமை என்றே சொல்லலாம். ஜெயவர்த்தனே தொடங்கி இன்றைய ராஜபக்ஷே வரை இலங்கை விரித்த வலையில்தான் தொடர்ந்து இந்தியா சிக்கியிருக்கிறது. வங்கதேசம், நேபாளம், மாலத்தீவு வரை செல்வாக்கு செலுத்தும் இந்தியாவை இலங்கை மிகத் தந்திரமாகக் கையாள்கிறது என்பதே உண்மை. தனக்குத் தேவையான எல்லா வற்றையும் இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் தந்திரத்தை இலங்கை மிக நுட்பமாகச் செய்துவருகிறது என்றே நினைக்கிறேன்!''

''சரி, இந்தியாவிடம் ஈழ மக்கள் என்ன எதிர் பார்க்கிறீர்கள்?''

''என்னது... மறுபடியும் முதல்ல இருந்தா? எதுவுமே வேண்டாம்... ஆளைவிடுங்க... பட்டதே போதும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism