நரேந்திர மோடி பயோபிக்கிற்குத் தடை விதித்தது தேர்தல் ஆணையம்! | Election commission detained the release of narendra modi biopic

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (10/04/2019)

கடைசி தொடர்பு:17:25 (10/04/2019)

நரேந்திர மோடி பயோபிக்கிற்குத் தடை விதித்தது தேர்தல் ஆணையம்!

தேர்தல் களத்தில் சர்ச்சையை உண்டாக்கிய 'பி.எம் நரேந்திர மோடி’ படம் வெளியிடத் தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.

மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிவருகிறது. படத்துக்கு, `பி.எம் நரேந்திர மோடி’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.  இந்தப் படத்தில், நரேந்திர மோடியாக நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். பிரியங்கா சோப்ரா நடித்த `மேரி கோம்' படத்தை இயக்கிய ஓமங் குமார், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில், மோடி டீ விற்பது, போராடி சிறை சென்றது, நடுரோட்டில் குளிரில் உறங்கிக்கிடப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

மக்களவைக்கு, முதல்கட்ட தேர்தல் நாளை ஏப்ரல் 11-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்தப் படம்  வெளியிடுவதில் அரசியல் உள்நோக்கம் இருக்கு, இந்தப் படத்துக்கு தடைவிதிக்கவேண்டி காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தன.

தேர்தல் ஆணையம்

இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், `பி.எம் நரேந்திர மோடி’ படத்துக்குத் தடை கோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்துள்ளது. ஏப்ரல் 5-ம் தேதி வெளிவருவதாக இருந்த இப்படம் ஏப்ரல் 12, அதாவது நாளை மறுநாள் வெளிவருவதாக இருந்தது. இந்நிலை பிரதமர் மோடியின் திரைப்படத்தை வெளியிடுவது, தேர்தல் விதிமுறை மீறலாக இருக்கும் எனக் கூறி தேர்தல் ஆணையம் இப்படத்துக்கு தடை விதித்துள்ளது. மேலும், மோடி மட்டுமல்லாமல் அரசியல்வாதிகளின் பயோபிக் படங்கள் எந்தவிதமான டிஜிட்டல் ஊடகத்திலும் வெளியிடத் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.