``வயதான என்னை வீட்டைவிட்டு துரத்துகிறார்! - `பிதாமகன்’ சங்கீதா மீது தாய் புகார் | compliant filed against pithamagan actress sangeetha by her mother in women's commission

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (11/04/2019)

கடைசி தொடர்பு:16:45 (11/04/2019)

``வயதான என்னை வீட்டைவிட்டு துரத்துகிறார்! - `பிதாமகன்’ சங்கீதா மீது தாய் புகார்

`வயதான என்னை வெளியேற்றிவிட்டு நான் வசித்துவரும் வீட்டை அபகரிக்க முயல்கிறார் என் மகள்’ என நடிகை ‘பிதாமகன்’ சங்கீதா மீது அவரின் தாய் பானுமதி தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகார் குறித்து விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு சங்கீதாவுக்கு ஆணையம் சம்மன் அனுப்ப, இரு தினங்களுக்கு முன் கணவர் கிரிஷுடன் ஆணையத்தில் ஆஜரானார் சங்கீதா.

பிதாமகன் சங்கீதா

சங்கீதாவின் அம்மா பானுமதியின் புகார் குறித்து இருவரையும் நன்கு தெரிந்த சிலரிடம் விசாரித்தோம். ‘எம்.ஜி.ஆரை வெச்சு பத்துப் படங்களுக்கும் மேல தயாரிச்ச கே.ஆர்.பாலனின் பொண்ணுதான் இந்த பானுமதி. இவங்க சென்னை வளசரவாக்கத்துல இப்ப குடியிருக்கிற வீடு தன் மாமனார் வீட்டு வழியில வந்த சொத்து. அந்த வீட்ல இப்ப பானுமதி தரை தளத்துலயும் அவங்களோட பொண்ணு சங்கீதா மாடியிலயும் குடியிருக்காங்க.

அந்த வீடு இப்ப சங்கீதா பேர்ல இருக்கு. இப்ப வில்லங்கமே அதுதான். அந்த வீட்டை தன் அண்ணன் தம்பிங்க அபகரிச்சுடுவாங்களோனு சங்கீதாவுக்கு சந்தேகம். அதுக்கு தன் அம்மாவும் துணைபோயிடுவாங்களோனு பயப்படுறாங்க. இந்த விஷயத்துல சங்கீதா கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம். ஏன்னா பானுமதியம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருக்கு. அதுவும்போக, சமீபத்துலதான் தன் ஒரு பையனை (சங்கீதாவின் சகோதரர்) சாகக் கொடுத்திருக்காங்க. இந்தச் சூழல்ல வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னா அவங்க எங்கப்போவாங்க? அதனாலதான்  மகளிர் ஆணையத்துல புகார் தந்திருக்காங்க’ என்கிறார்கள். 

பானுமதி தரப்பில் பேச முயற்சி செய்தோம், `புகார்ல எல்லாத்தையும் சொல்லிட்டோம். நல்ல தீர்வு கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு. அப்படி நல்லது நடக்கலைனா அந்த சமயத்துல விரிவா பேசலாம்’ என்றார். 

ஆணையத்தில் ஆஜரானது குறித்து சங்கீதாவிடம் பேசினோம். ``சினிமா தொடர்பான விஷயம்னா பேசலாம். இது என் தனிப்பட்ட விஷயம். இதைப்பற்றி நான் எதுவும் பேச விரும்பலை’ என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.