விஜய் சேதுபதி குரலில் `பளபளக்கும் மதுரை' - வெளியானது 'தேவராட்டம்' படத்தின் சிங்கிள் | Devarattam movie's first single 'Madura Palapalakkuthu' is out

வெளியிடப்பட்ட நேரம்: 18:58 (12/04/2019)

கடைசி தொடர்பு:18:58 (12/04/2019)

விஜய் சேதுபதி குரலில் `பளபளக்கும் மதுரை' - வெளியானது 'தேவராட்டம்' படத்தின் சிங்கிள்

நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை-வசன எழுத்தாளர், டப்பிங் கலைஞர் என சினிமாவில் அடிக்கடி ஒரு அவதாரம் எடுக்கிறார் விஜய் சேதுபதி. அந்த வரிசையில், இன்று வெளியான 'தேவராட்டம்' படத்தின் முதல் சிங்கிள் 'மதுர பளபளக்குது' பாடல் மூலமாக பின்னணிப் பாடகர் ஆகியிருக்கிறார்.

தேவராட்டம்

மத்திய தமிழகத்தின் மண்வாசனை வீசும் கதைகளை மையப்படுத்தி படம் எடுக்கும் இயக்குநர் முத்தையாவின் அடுத்த படம், 'தேவராட்டம்'. கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில்,  மஞ்சிமா மோகன், சூரி, ராம்தாஸ், ராஜ்கிரண் எனப் பலர் நடித்துள்ளனர். பொதுவாகவே, சாதி, வெட்டுக்குத்து, பங்காளிச் சண்டை எனக் களேபரம் நிறைந்திருக்கும் முத்தையாவின் படங்களைப் போலவே இந்தப் படமும் இருக்கும் என இதன் டிரெய்லரைப் பார்த்தே முடிவுசெய்துவிடலாம். அதை உறுதிசெய்யும் விதத்தில் இந்தப் பாடலும், அதில் இடம்பெறும் மோகன்ராஜனின் வரிகளும் வன்முறையையும், கிராமத்துச் சாரத்தையும் சேர்த்தே வீசுகின்றன.

விஜய் சேதுபதியுடன் சேர்ந்து, படத்தின் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, 'சூப்பர் சிங்கர்' பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் நிரஞ்சனா ரமணன் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். ஒரு ஊர் திருவிழாவில் இடம்பெறும் பாடல் என்பதால், முழுக்க முழுக்க நாட்டுபுற இசை வடிவில், வசனமும் பாடலுமாகச் சேர்ந்து இந்தப் பாடல் உருவாகியிருக்கிறது.