`அஞ்சு மணிக்கு வந்துருவேன், மீட் பண்ணுவோம்னு சொன்னார்! - கண்கலங்கும் ரித்தீஷின் நண்பர் | director suresh kamatchi shares last moments of j.k.rithesh

வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (15/04/2019)

கடைசி தொடர்பு:17:05 (15/04/2019)

`அஞ்சு மணிக்கு வந்துருவேன், மீட் பண்ணுவோம்னு சொன்னார்! - கண்கலங்கும் ரித்தீஷின் நண்பர்

ராமநாதபுரம் முன்னாள் எம்.பி-யும் நடிகருமான ஜே.கே.ரித்தீஷ், கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். இவரது இறப்பு, தமிழ் சினிமா மற்றும் ராமநாதபுரம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவரது நினைவலைகளை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. 

ஜே.கே.ரித்தீஷ்

``என்னுடைய நெருங்கிய நண்பர் அவர். கிட்டத்தட்ட 15 வருட நட்பு. மலேசியாவில் சில காலம் பிசினஸ் பண்ணிட்டு இருந்தேன். அப்போ ரித்திஷ் நடித்த `நாயகன்' படம் அங்கே ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் ஆகுறதுக்குத் தேவையான உதவிகளைச் செய்துகொடுத்தேன். அப்போதான் முதல் முறையா ரித்தீஷைப் பார்த்தேன். பிறகு, அவருடைய சொந்த ஊர் ராமநாதபுரத்தில் அவருடைய பிறந்தநாளன்று பார்த்தேன். அப்போ, அவருடைய வீட்டில் கம்பீரமா உட்கார்ந்திருந்தார். ரெண்டு பக்கமும் சாக்குப் பையில் பணத்தை அடக்கிவைத்து மக்களுக்கு எடுத்து கொடுத்துக்கொண்டிருந்தார். பார்க்கவே ஆச்சர்யமாக இருந்தது. அவர் தனக்கு எதையும் வெச்சிக்க மாட்டார். உதவி செய்வதில் வள்ளல். ராமநாதபுரத்தில் இருக்கிற நிறைய மக்களுக்கு உதவிகள் செஞ்சிருக்கார். படிப்புக்கு, மருத்துவத்துக்குனு யார் வந்து உதவி கேட்டாலும், தயங்காமல் பண்ணுவார். கோயில், கல்யாண வேலைகளுக்கும் தயங்காமல் கொடுப்பார். 

என்னோட சொந்த ஊர் பரமக்குடி. ராமநாதபுரம் மாவட்டத்துக்குக் கீழேதான் வரும். அவர் தேர்தலில் போட்டியிட்ட போது, அவருக்காகப் பிரசாரம் பண்ணியிருக்கேன். அவர் கூடவே இருந்தேன். அவர் குடும்பத்தில் ஒருவராய் என்னைப் பார்த்தார். அவருக்குத் திருமணம் முடிந்து ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு இருக்காங்க. பொண்ணுக்கு இப்போதான் ஒரு வயசு ஆகுது. எப்போதுமே குடும்பத்தில் இருக்கிறவங்ககூட நேரம் செலவழிப்பார். இவருடைய இறப்பை குடும்பத்தில் இருக்கிறவங்க எப்படித் தாங்கிக்கப்போறாங்களோ தெரியல. எவ்வளவு பிஸியா இருந்தாலும் பசங்களுடன் விளையாடத் தவற மாட்டார்.

சுரேஷ் காமாட்சி

அவர் கடைசியாக நடித்த எல்கேஜி படம் பார்த்துட்டு போன் பண்ணி பேசினேன். ரொம்ப சந்தோஷப்பட்டார். சினிமாவில், அவர் எந்த அளவுக்கு ஜெயிச்சார்னு தெரியல. ஆனா, அரசியலில் அவருடைய எதிர்காலம் நல்லா இருந்திருக்கு. அவருக்கு சினிமாவில் பெரிய நாட்டமில்லை. ஆனா, நடிகர் சங்கத்தின் வேலைகளில் பரபரப்பாக இருப்பார். அவர் உயிரோடு இருந்திருந்தால், நடிகர் சங்கத்தின் அடுத்த தலைவராக கண்டிப்பா வந்திருப்பார். கடந்த முறையே நடிகர் சங்கத்தின் தலைவராக வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தும் விஷாலுக்காக விட்டுக்கொடுத்துட்டார். அவருடைய இந்த இறப்பு, எங்க மாவட்டத்துக்குப் பெரிய இழப்பு. ஏன்னா, அவர் இருக்கிற தைரியம் மக்களுக்கு இருந்தது. எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்ங்கிற வேறுபாடு இல்லாமல் எல்லாருக்கும் உதவுவார். இந்தக் காலத்துல நல்லது செய்யுறதே பெரிய விஷயமா இருக்கும்போது, பாக்கெட்டில் 10 ரூபாய் இருந்தாலும், அதையும் தானமா கொடுத்துருவார். அவருடைய இறப்பை நம்பவே முடியல. அவர் சாகுறதுக்கு இரண்டு மணிநேரத்துக்கு முன்னாடி எனக்கு போன் பண்ணி, `சாயங்காலம் அஞ்சு மணிக்கு சென்னை வந்துருவேன். மீட் பண்ணுவோம்'னு சொன்னார். கொஞ்ச நேரம் கழிச்சு அவர் இறந்துட்டார்னு செய்தி வருது. இதை என்னால  நம்பவே முடியல. பெரிய அதிர்ச்சியா இருந்தது. ஏற்கெனவே அவர் இருதய சிகிச்சை எடுத்திருந்தார்'' என்று கண்கலங்கினார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க