`அதே ஹோட்டலில் இன்று இருந்திருந்தால்...' - இலங்கை குண்டுவெடிப்பு குறித்து ராதிகா வேதனை! | Actress radikaa sarathkumar says about that srilanka blast

வெளியிடப்பட்ட நேரம்: 15:22 (21/04/2019)

கடைசி தொடர்பு:16:50 (21/04/2019)

`அதே ஹோட்டலில் இன்று இருந்திருந்தால்...' - இலங்கை குண்டுவெடிப்பு குறித்து ராதிகா வேதனை!

கொழும்புவில் உள்ள அந்தோணியர் தேவாலயத்தில்தான் முதலில் குண்டு வெடிப்பு நடந்ததாகவும் அதனைத் தொடர்ந்து நீர்கொழும்புவில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயம் மற்றும் மட்டகளப்பில் உள்ள ஒரு தேவாலயம் போன்றவற்றிலும் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இவை மட்டுமல்லாது கொழும்புவில் உள்ள மிகவும் பிரபலமான நட்சத்திர ஹோட்டல்களான சங்கரி லா, சின்னமன் கிராண்ட், கிங்ஸ்புரி ஹோட்டல் ஆகியவற்றிலும் சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. மேலும், பலியானோர் எண்ணிக்கை 129 எனவும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்க கூடும் எனவும் கருதப்படுகிறது. இந்நிலையில் நடிகை ராதிகா ட்விட்டரில் இந்த சம்பவம் குறித்து பதிவு ஒன்றை இட்டியிருந்தார். இது குறித்து ராதிகாவிடம் பேசியதிலிருந்து. 

ராதிகா

''இரண்டு நாளுக்கு முன்னாடி இலங்கை சென்றிருந்தேன். அதுவும் குடும்பத்துடன். என்னோட ப்ரதர் அங்கேதான் இருக்கார். நாங்கள் சின்னமன் கிரான்ட் ஹோட்டலில் தங்கியிருந்தோம். எப்போது இலங்கை போனாலும் பிரசித்திபெற்ற கொச்சிக்கடை சர்ச்க்கு போவோம்.  சக்திவாய்ந்த சர்ச்சும்கூட. ஆனால், இன்னைக்கு காலையில் இந்த சர்ச்சிலும், நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலும் குண்டு வெடிச்சிருக்குற செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. என்னோட ப்ரதர்தான் எனக்குப் போன் பண்ணி இந்த செய்தியை சொன்னார். எங்களை இன்னும் இரண்டு நாள்கள் இலங்கையில் தங்கிவிட்டு போகச்சொல்லி என்னுடைய ப்ரதர் கட்டாயப்படுத்தினார். ஷூட்டிங் வேலைகள் இருந்ததால் சென்னைக்கு வரவேண்டிய சூழல் அதனால் கிளம்பிவிட்டோம். ஒருவேளை அங்கே அதே ஹோட்டலில் இன்று இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்னு தெரியல. கடவுள் கூடவே இருக்கார்னு நம்புறேன். 

ராதிகா

முக்கியமா, இலங்கையில் இருக்கக்கூடிய தேவாலயங்களில் கிறிதுஸ்மஸ், ஈஸ்டர் பண்டிகையை ரொம்ப கிரன்டா கொண்டாடுவாங்க. என்னால இந்த சம்பவத்தை ஏத்துக்கவே முடியல. இலங்கையில் இப்போதுதான் அமைதி திரும்பி இருக்கு. இதெல்லாம் இலங்கை மக்கள் கடந்து வந்துட்டாங்க. இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியா இருக்காங்க. இப்போது இந்த சம்பவம் நடந்திருப்பது மனசுக்கு வருத்தமா, கனமா இருக்கு.அதுவும் ஈஸ்டர் அன்னைக்கு தேவாலயத்தில் குண்டு வெடிக்கிறதுலாம் டூ மச். இந்த சம்பவத்தை பண்ணுவங்களை மன்னிக்கவே முடியாது.'' என்று ஆதங்கத்துடன் முடித்தார் ராதிகா சரத்குமார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க