`நான் நடித்த 6 படங்களை எப்ப சார் ரிலீஸ் பண்ணுவீங்க!'- வடிவேல் பாணியில் 'நண்டு' ஜெகன் | Actor jagan upset for his movie pending issue

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (23/04/2019)

கடைசி தொடர்பு:16:40 (23/04/2019)

`நான் நடித்த 6 படங்களை எப்ப சார் ரிலீஸ் பண்ணுவீங்க!'- வடிவேல் பாணியில் 'நண்டு' ஜெகன்

கே.வி. ஆனந்த் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான 'அனேகன்' படத்தில் தனுஷின் நண்பனாக நடித்திருந்தார் ஜெகன். அதுதான் அவர் நடித்து வெளியான கடைசிப் படம். விஜய் டி.வியின் `கனெக்‌ஷன்' ஷோவை தொகுத்து வழங்கியவர். அந்த ஷோவை முடித்தக் கையோடு, கடந்த சில வருடங்களாக அவர் நடித்த கிட்டத்தட்ட 6 படங்கள் ரிலீஸ் ஆகாமல் விரக்தியில் இருக்கிறார் ஜெகன். 

2005-ம் ஆண்டு வெளியான `கண்ட நாள் முதலாய்' படத்தின் வாயிலாக அறிமுகமானவர் ஜெகன். அதன்பிறகு `அயன்' படத்தில் பரிட்சயமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிறகு இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார். கடந்த வருடம் முதல், `எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை', `முகம்', `அசுர குரு',  `கதை அல்ல நிஜம்', `சகுந்தலாவின் காதலன்', ஜோதிகா, ரேவதி நடித்து வரும் `production no.11' என `6-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். எப்போது இந்தப் படங்கள் ரிலீஸாகும் என்கிற ஆர்வத்தில் இருக்கிறார்  ஜெகன். 

``ஒரு நடிகனுக்கு நடிக்கிறது மட்டும்தான் வேலை. அது ஹிட் அடிக்குது, இல்லை என்பதில் இல்லை விஷயம். எது நடிச்சாலும், அவனைப் பொறுத்தவரை அது நடிப்பு. அதை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதில் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் வாரா வாரம் அத்தனை படங்கள் ரிலீஸ் ஆகிறது. அதில் எந்தப் படத்தைப் பார்ப்பது, எதை தவிர்ப்பது என மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் தாண்டி நல்ல படங்கள் எத்தனை வந்தாலும் அதை ஆதரிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். 

தொடர்ந்து இரண்டு, மூன்று வருடங்களாக நான் நடித்த படங்கள் ரிலீஸாகவில்லை. ஒருவேளை நான் நடித்த 6 படங்கள் ரிலீஸ் ஆனால் இந்த வருஷம் ஹாட்ரிக் ஹிட் எனக்குக் கிடைக்கும். அதனால், `எப்போ சார் அந்த 6 படத்தையும் ரிலீஸ் பண்ணுவீங்க'னு வடிவேல் தொனியில்தான் கேட்கவேண்டியிருக்கு'' என்ற ஜெகன், 

``எனக்கு இப்போது இரண்டு குழந்தைகள் இருக்காங்க. டிராவல், நடிப்பு தாண்டி நான் ரெஸ்ட் எடுக்கும், சந்தோஷமாக இருக்கும் ஒரே இடம் வீடு மட்டும்தான். என் இரண்டு பசங்களும், என் மனைவியும்தான் என் உலகம்'' என்று முடித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க