`இந்த இரண்டு கேரக்டர் கிடைச்சா உடனே ஓகேதான்!'- ரீ என்ட்ரிக்குத் தயாராகும் விசித்ரா | actress vichitra interview

வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (26/04/2019)

கடைசி தொடர்பு:15:35 (26/04/2019)

`இந்த இரண்டு கேரக்டர் கிடைச்சா உடனே ஓகேதான்!'- ரீ என்ட்ரிக்குத் தயாராகும் விசித்ரா

’நடிப்பை விட்டு ஒதுங்கி பதினெட்டு வருஷமாச்சு. ஃபேமிலி, குழந்தைகளைப் பார்த்துக்கிட்டே ஹோட்டலையும் நிர்வகிச்சிட்டிருந்ததுல எப்படி இந்த நாள்கள் ஓடுச்சுன்னே தெரியலை. ஒரு பழமொழி சொல்வாங்களே, ஆடுன கால் மறக்காதுன்னு!, அதேதான்.. இப்ப மனசு என்னவோ `மறுபடியும் நடிச்சா என்ன’ன்னு கேட்குது. சினிமா நான் விரும்பித் தேர்ந்தெடுத்ததுதானே, அதனால நானும் ரீ என்ட்ரிக்குத் தயாராகிட்டேன்’ என்று உற்சாகம் பொங்கப் பேசுகிறார் நடிகை விசித்ரா.

இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் `ஜாதிமல்லி’ படம் மூலம் சினிமா பயணத்தைத் தொடங்கியவர். தொடர்ந்து சுமார் 50 படங்கள் வரை நடித்திருப்பார். ரஜினியின் `முத்து’, `வீரா’, விஜய் நடித்த `ரசிகன்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். நடிகையாக அறிமுகமானாலும் போகப்போக கவர்ச்சி நடிகையாக அதுவும் குத்துப்பாட்டுக்கு நடனமாடுபவராகவே பிரபலமானார்.

விசித்ரா

பிசியாக இருந்த காலத்திலேயே திருமணம் செய்துகொண்டு, சினிமாவை விட்டு விலகியிருந்தவர்தான் தற்போது மீண்டும் நடிப்பைத் தொடர விரும்புவதாகச் சொல்கிறார். விசித்ராவிடம் பேசினேன்.

விசித்ரா

``கடந்த சில வருஷங்களாவே சினிமா வாய்ப்புகள் வந்துட்டேதான் இருக்கு. உடனே `சரி’ சொல்லாம நானேதான் தள்ளிப் போட்டுட்டு வர்றேன். பதினெட்டு வருஷம் கழிச்சு வர்றோம்னா, அந்த ரீ என்ட்ரி அர்த்தமுள்ளாதா இருக்கணும்னு விரும்பறேன். அதாவது கேரக்டர் ரோல்  பண்ணனும்னு ஆசையா இருக்கு. அதனால யோசிச்சுதான் முடிவெடுக்கணும். பழைய மாதிரி கிளாமர்ங்கிற பார்வையே இருக்கக் கூடாதுங்கிறதுல மட்டும் உறுதியா இருக்கேன். பொதுவா கிளாமர் நடிகைகள் எல்லாருமே செகண்ட் இன்னிங்க்ஸ் இப்படிதான் இருக்கணும்னு விரும்புவாங்கன்னுதான் எனக்குத் தோணுது. ஆனா, `ரசிகர்கள் உங்களை பழைய அடையாளத்தைக் கடந்து ஏத்துப்பாங்களா’ங்கிற ஒரு கேள்வியை எல்லாரும் எதிர்கொள்ள வேண்டியிருக்கு. என்னைப் பொறுத்தவரை மறுபடி சினிமா பண்ண ஆயத்தமாகிட்டேன். என்னை மாதிரி ஒரு `டால் பர்சனாலிட்டி’ இன்னைக்கு ஃபீல்டுல இருக்காங்களா சொல்லுங்க. அதனால ஒரு போலீஸ் ஆபீஸர், பவர்ஃபுல்லான பிசினஸ் விமன். இந்த மாதிரி டாமினேட்டிங் பண்ற கேரக்டர்கள்னா உடனே ஓ.கே சொல்லிடுவேன்’ என்கிறார்.