``விஜய், அஜித்துடன் ஒரே படத்தில் நடிச்சது ரொம்ப நாளைக்குப் பிறகுதான் எனக்கே தெரியும் - ஜெனிஃபர் | 'gilli' jenifer shares her 'nerukku ner' memories with vijay and ajith

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (07/05/2019)

கடைசி தொடர்பு:13:10 (07/05/2019)

``விஜய், அஜித்துடன் ஒரே படத்தில் நடிச்சது ரொம்ப நாளைக்குப் பிறகுதான் எனக்கே தெரியும் - ஜெனிஃபர்

’கில்லி’ வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்த மகிழ்ச்சியுடன், தொலைக்காட்சியில் ‘சண்டே கலாட்டா’பயணத்தில் ஓராண்டு நிறைவடந்திருக்கிற மகிழ்ச்சியும் சேர்ந்துகொள்ள, செம உற்சாகத்திலிருக்கிறார், ஜெனிஃபர்.

வாழ்த்து சொன்னதும் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.
‘குழந்தை நட்சத்திரமா சினிமாவுல அறிமுகமானேன். சில படங்கள் நடிச்சுட்டு ‘கில்லி’யில கமிட் ஆனேன். பிரபலமானதும் அந்தப் படத்துக்குப் பிறகுதான். இன்னைக்கும் ‘புவி’ங்கிற அந்தக் கேரக்டர் பெயரை ரசிகர்கள் மறக்க மாட்டேங்கிறாங்களே!’ என்றவர், ‘கில்லி’ ஷூட்டிங்கில் முதன் முதலாக விஜய்யைச் சந்தித்ததையும் நினைவில் வைத்திருக்கிறார்..

ஜெனிஃபர்

‘அவரோட சேர்ந்து நடிக்கிறேன்னு தெரிஞ்சதுல இருந்து எனக்குத் தூக்கமே இல்ல. முதல் நாள் ஷூட்டிங்ல விஜய் அண்ணாவைச் சந்திச்சதும் முதல் கேள்வியே, ‘நீ என்னோட நடிச்ச அந்த குட்டிப் பொண்ணுல்ல’ எனச் சிரித்தபடியே கேட்டார். குழந்தை நட்சத்திரமா அவரோட நான் நடிச்ச படம், ‘நேருக்கு நேர்’. குட்டியூண்டு பாப்பாவா நடிச்சதெல்லாம் எனக்கு எப்படி ஞாபகம் இருக்கும்? ஆனா, அவர் சரியா ஞாபகத்துல வச்சிருந்தார்’ என்றவர், அடுத்து சொன்னதே ஹைலைட்!

‘நேருக்கு நேர்’ல  விஜய் அண்ணாவோட அண்ணன் ரகுவரன் பொண்ணா வந்தேன். அதாவது, விஜய் அண்ணா எனக்கு சித்தப்பா. என்னோட அம்மாவுக்குத் தம்பியா, அதாவது மாமாவா அந்தப் படத்துல வந்தது சூர்யான்னுதானே உங்களுக்கெல்லாம் தெரியும்... ஆனா ஆரம்பத்துல சில நாள்கள் அந்த மாமாவா நடிச்சதச் சொன்னா நம்ப மாட்டீங்க. தல அஜித் சாரேதான்.

ஆமாங்க, விஜய் அண்ணா சித்தப்பாவாகவும் அஜித் சார் மாமாவாகவும் முறைச்சிட்டே இருக்கிற அந்த ஷூட்டிங்ல, நானும் கலந்துகிட்டேங்கிறதே ரொம்ப நாளைக்குப் பிறகுதான் எனக்கே தெரியவந்தது. கஷ்டப்பட்டு ஒரு இடத்துல இருந்து அந்த ஷூட்டிங்ல எடுத்த போட்டோஸ் கலெக்ட் செய்து, இப்பவும் வீட்டுல அந்தப் போட்டோவை பொக்கிஷமா வச்சிருக்கேன்' என்கிறார்.