``அது வேணாம், கொஞ்சம் நல்ல ரோல் கொடுங்கப்பா!''- `பட்டிமன்றம்' மோகன சுந்தரம் | Speaker mohana sundram shares about his carrier

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (08/05/2019)

கடைசி தொடர்பு:20:40 (08/05/2019)

``அது வேணாம், கொஞ்சம் நல்ல ரோல் கொடுங்கப்பா!''- `பட்டிமன்றம்' மோகன சுந்தரம்

``அது வேணாம், கொஞ்சம் நல்ல ரோல் கொடுங்கப்பா!''- `பட்டிமன்றம்' மோகன சுந்தரம்

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிவரும் `ஈரமான ரோஜாவே' சீரியலில் நடித்திருக்கிறார், பட்டிமன்றப் பேச்சாளர் மோகன சுந்தரம். சுகி சிவம் தலைமையில் பல பட்டிமன்றங்களில் பேசி மக்கள் மனதில் இடம் பிடித்தவர். `என்ன திடீர்னு சீரியலில் நடிக்கிறீங்க?' எனக் கேட்டால், சிரிக்கிறார்.  

மோகன சுந்தரம்

``நான் இப்போது அமெரிக்கா வந்திருக்கிறேன். இந்தியா திரும்ப இன்னும் ஒரு மாசம் ஆகும். அமெரிக்காவின் எட்டு மாகாணங்களில், 12 கூட்டங்களில் பேசுறேன். கூடவே, சுகி சிவமும் வந்திருக்கிறார். அந்த சீரியலில் நடிப்பது திடீர் முடிவு. கடந்த மே மாதம் 1-ம் தேதி உழைப்பாளர் தினத்தையொட்டி 'உழைப்பை மதிக்கிறோம் - ஆம், இல்லை' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்த வேண்டியிருந்தது. ஒரே செட்டில் சீரியலுக்கான ஷூட்டிங்கையும் முடிச்சிடலாம் என முடிவு பண்ணியிருந்தாங்க. 

மோகன சுந்தரம்

அதன்படி சீரியல் ஷூட்டிங்கை முதலில் எடுத்தாங்க. கதைப்படி, பட்டிமன்றம் நடக்கும் இடத்தில் ஹீரோ, ஹீரோயின் இருவரும் பிரிந்திருக்கிற கணவன், மனைவியா வருவாங்க. பட்டிமன்றத்தில் கலந்துகொள்வதன் மூலம் இருவரும் ஒன்று சேர்வதுதான், கதை. அந்தப் பட்டிமன்றத்தில் நான்தான் நடுவர். பட்டிமன்றத் தலைப்பின் பெயர், `திருமண பந்தத்துக்குத் தேவையானது பணமா, அன்பா?' என்பதுதான். பட்டிமன்றம் முடியும்போது, `ஆடியன்ஸ் என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்' என்பேன். அதன்படி, `அன்புதான்' என முடிவானதும், ஹீரோயின் மனசு மாறி ஹீரோவுடன் இணைவார்'' என்றவரிடம், `முதன்முறையாக சீரியலில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?' எனக் கேட்டேன். 

``கேமரா முன்னால பல வருடமா பேசுறதால, எனக்கு அது பழகிடுச்சு. ஏதாவது வசனம் பேசச் சொல்லி நடிச்சிருந்தா, கொஞ்சம் பதற்றம் இருந்திருக்கும். இதுக்கு முன்னாடியே எனக்கு நடிக்க பல வாய்ப்புகள் வந்திருக்கு. ஆனால், எனக்கு ஏற்ற கதாபாத்திரம் அமையணும். நான் இலக்கியப் பேச்சாளர். இரண்டு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. இரண்டு படத்தின் கதாநாயகனுமே காமெடியனாக நடிக்கிறாங்க. நான் அவங்க நண்பரா நடிக்கிறேன். இது எனக்கு எப்படிங்க செட் ஆகும்?! அதான் வேண்டாம்னு சொல்லிட்டேன். சமீபத்தில் விதார்த் நடிக்கும் நீட் தேர்வு சம்பந்தமான படத்தில் ஹெட்மாஸ்டர் ரோலில் நடிக்கக் கேட்டாங்க. அவங்க ஷூட்டிங் ஆரம்பிக்கும்போது, நான் வெளிநாட்டுக்குப் போகவேண்டியதாகிவிட்டது. இப்படி சில நல்ல வாய்ப்பு மிஸ் ஆகியிருக்கு. எனக்கு நடிப்பதில் ஆர்வம்தான். வீட்டிலேயும் என்னை எந்த விஷயத்துக்கும் கட்டாயப்படுத்தமாட்டாங்க'' என்பவர், எம்.பி.ஏ மருத்துவ நிர்வாகத் துறை படிப்பை முடித்ததால், தற்போது ஒரு தனியார் மருத்துவமனையில் நிர்வாகத்துறை பணியில் (hospital administration) இருக்கிறார். 

மோகன சுந்தரம்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க