Published:Updated:

ஆசை : சீரியலில் நடிக்கிறார் காக்க காக்க ஹீரோ!

கெளதம் மேனன் பளிச்

பிரீமியம் ஸ்டோரி
##~##
'நா
ன் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை. என் மகன் கோகுல் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, சிவில் சர்வீசஸ் தேர்வுக்காக சென்னையில் தங்கிப் படித்து வருகிறான். அவன் இயக்குநர் கௌதம் மேனனின் ரசிகன். 'காக்க காக்க’ படம் பார்த்த பிறகுதான் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்று முடிவெடுத்தான். அவன் நடை, உடை, பாவனை என அனைத்துமே கௌதம் மேனனை இமிடேட் செய்யும். கல்லூரியில் அவனை 'கௌதம் கோகுல்’ என்றுதான் அழைப்பார்கள். அவனை ஒரு முறை கௌதம் மேனனைச் சந்திக்க வைத்துவிடுங்களேன். இந்த அம்மாவின் அன்புப் பரிசாக இருக்கட்டும்!’ என்றது மாதவியிடம் இருந்து வந்திருந்த கடிதம்.

சில மொபைல் சீண்டல்களுக்குப் பிறகு 'அமிதிஸ்ட் காபி ஷாப்... மதியம் 2 மணி’ என்று கௌதம் மேனன் - 'கௌதம்’ கோகுல் சந்திப்பு நிச்சயிக்கப்பட்டது! நல விசாரிப்புகள் முடிந்த பிறகு, ''ம்... சொல்லுங்க கோகுல்'' என்று நிமிர்ந்து அமர்ந்தார் கௌதம். ''நான் ப்ளஸ் டூ படிக்கிறப்பதான் 'காக்க காக்க’ படம் பார்த்தேன். போலீஸ் யூனிஃபார்ம்ல சூர்யா ஸ்க்ரீன்ல வர்றப்பலாம் எனக்குள்ள ஏதோ ஒரு கரன்ட். அது வரை என்ன படிக்கணும், எந்த ஃபீல்டுல வேலை பார்க்கணும்னு எனக்கு எந்த ஐடியாவும் கிடையாது. ஆனா, அடுத்தடுத்து பல தடவை அந்தப் படத்தை பார்க்கப் பார்க்க 'ஐ.பி.எஸ்’தான் என் இலக்குன்னு ஃபிக்ஸ் பண்ணிட்டேன். சான்ஸே இல்லை சார்... செம படம்!'' என்று உணர்ச்சிப் பெருக்கில் கோகுல் பேசிக்கொண்டே செல்ல, கௌதம் முகத்தில் ஆச்சர்ய ரேகைகள்.

''சார், நீங்க தப்பா நினைக்கலைன்னா உங்க வாய்ஸ்ல பேசிக் காட்டவா?'' என்று அனுமதி வாங்கி, '27 என்கவுன்டர்ஸ் பாம்பே சிட்டியில மட்டும். அதுல 26 சக்சஸ்ஃபுல். ஒண்ணு ஃபெயிலியர். அந்த ஒண்ணைப் பத்தி மட்டும்தான் டிபார்ட்மென்ட்ல பேசுனாங்க!’ என்று ஆரம்பித்து, சினிமாவில் கௌதம் மேனன் குரலில் ஒலித்த வசனங்களைத் தத்ரூபமாகப் பேசிக் காட்டினார். ''உங்க கூட உக்காந்து நான் பேசிட்டு இருக்கேங்கிறதையே நம்ப முடியலை சார். கோர்ஸ் முடிச்சுட்டு உங்ககிட்ட அசிஸ்டென்ட்டா சேர முயற்சி பண்ணுவேன்னுதான் என் நண்பர்கள் எல்லாரும் நினைச்சாங்க. ஆனா, நான் சில வருஷங்களில் கண்டிப்பா ஐ.பி.எஸ்., ஆயிடுவேன்!'' என்றார் கோகுல் தன்னம்பிக்கைக் குரலில்.

ஆசை : சீரியலில் நடிக்கிறார் காக்க காக்க ஹீரோ!

''என் படம் பார்த்துட்டு, சினிமா வேலைக்கு வராம வேற விஷயம் பண்றது ரொம்ப நல்ல விஷயம் கோகுல். பொதுவா, படத்துல மெசேஜ் சொல்றதே எனக்குப் பிடிக்காது. அதைத் தாண்டியும் உங்களை ஒரு விஷயம் இன்ஸ்பையர் பண்ணியிருக்குங்றது நல்ல விஷயம் நண்பா!'' என்று சிரித்தார் கௌதம். ''சார், நான் ஐ.பி.எஸ் ஆன பிறகு உங்களைச் சந்திக்கணும்னு இருந்தேன். ஆனா, இப்பவே அந்த ஜாக்பாட் வாய்ப்பு. உங்களை நான் சில கேள்விகள் கேட்கலாமா?'' என்ற கோகுலின் கோரிக்கைக்குத் தலையசைத்து ஆமோதித்தார் கௌதம். தொடங்கியது கேள்வி - பதில் படலம்!

'' 'காக்க காக்க’ படத்துக்கு எது இன்ஸ்பிரேஷன்?''

''ஓர் உண்மைச் சம்பவம்தான். என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஒருவரின் மனைவி பேட்டி ஒண்ணு படிச்சேன். 'தினமும் வீட்ல இருந்து கிளம்பும்போது சாயங்காலம் வீட்டுக்குத் திரும்புவாரா மாட்டாரான்னு பயந்துட்டே காத்திருப்பேன். வீட்டுக்கு நிறைய மிரட்டல் போன்கால் வரும்’னு நிறையப் பேசியிருந்தாங்க. அதை அடிப்படையா வெச்சுத்தான் ஸ்க்ரிப்ட் எழுதினேன். அப்புறம் நானும் சூர்யாவும் நிறைய போலீஸ் அதிகாரிகளைச் சந்திச்சோம். கொஞ்சம் டெக்னாலஜி, நிறைய காதல் கலந்து சினிமா ஆக்குனதுதான் 'காக்க காக்க’. நானும் ஆர்மியில் சேர ஆசைப்பட்டு, என்.டி.ஏ எக்ஸாம்லாம் எழுதியவன்தான். எனக்கும் காக்கி டிரெஸ் மேல நிறையக் காதல் உண்டு!''

ஆசை : சீரியலில் நடிக்கிறார் காக்க காக்க ஹீரோ!

''உங்கள் பட வசனங்களில் நிறைய ஆங்கில வார்த்தைகள் இருக்கும். ஆனா, படத் தலைப்பு முதல் கதாபாத்திரப் பெயர்கள் சுத்தத் தமிழில் இருக்கு... என்ன காரணம்?''

''அமுதன், இளமாறன் உட்பட என் பட கேரக்டர்கள் பெயர்கள்கொண்ட என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் இன்னமும் என்னுடன் தொடர்பில் உள்ள நண்பர்கள்தான். என் தமிழ் ஆர்வத்துக்கு காலேஜ்ல என்கூடப் படிச்ச தென் தமிழக நண்பர்கள்தான் காரணம். சொல்லப்போனால், எனக்கு சினிமா மேல ஆசை வந்ததுக்கும் அவங்கதான் காரணம்!''

''உங்க முதல் படத்துல இருந்து எஸ்டாப்ளிஷ்டு ஹீரோக்கள்தான் நடிச்சிருக்காங்க. அவங்ககிட்ட எப்படி வேலை வாங்குறீங்க?''

''நான் ரொம்ப ஃப்ரெண்ட்லி நண்பா. என்கூட வேலை பார்க்கிற எல்லாருக்கும் முதல் ஒண்ணு ரெண்டு நாட்களிலேயே என்னைப் பிடிச்சிடும். கமல் சார்கூட ஆறு மாசம் வொர்க் பண்ணினேன். ஒரு ஷாட், ஒரு ஃப்ரேம் கூட அவர் சந்தேகப்பட்டு என்னை எதுவும் கேட்கலை.  நான் என்ன சொன்னாலும் கேட்கத் தயாரா இருந்தார் சூர்யா. 'விண்ணைத் தாண்டி வருவாயா’ ஆரம்பிச்சப்ப எல்லாரும், 'ஏன் சிம்புவை வெச்சு பண்றீங்க’ன்னுதான் துக்கமா விசாரிச்சாங்க. 'நான் அந்தப் படம் பார்க்க மாட்டேன்’னு என் வீட்லயும் சொன்னாங்க. 'உங்களுக் காக ஒரு வாரம் சரியா இருப்பாரு. அப்புறம் ஷூட்டிங்கே வரமாட்டாரு’ன் னுலாம் பயமுறுத்துனாங்க. ஆனா, ஒரு நாள்கூட என் ஷூட்டிங்கில் பிரச்னை பண்ணலை. இதுவரை நான் வேலை செஞ்ச ஆர்ட்டிஸ்ட்களிலேயே சிங்கிள் டேக்ல எல்லா ஷாட்டும் ஓ.கே. பண்ணது சிம்பு மட்டும்தான்!''

''உங்க இயக்கத்தில் அஜீத் நடிக்கிறதா இருந்த 'துப்பறியும் ஆனந்த்’ படம் எந்த அளவுல இருக்கு?''

''ஸ்க்ரிப்ட் பக்கா. அதுல ஒரு பவர்ஃபுல் வில்லன் கேரக்டர் இருக்கு. அதனால இங்கே இருக்குற ஹீரோஸ் அதில் நடிக்க யோசிக்கிறாங்க. ஒரு பெரிய ஹீரோ, 'ரெண்டு கேரக்டரையும் நானே பண்றேனே’ன்னு கேட்டாரு. அது நமக்கு செட் ஆகாது. கமல், அஜீத், விக்ரம், தெலுங்குல வெங்கடேஷ், பாலகிருஷ்ணா, இந்தியில அமீர் கான்னு அந்த ஸ்க்ரிப்ட் எல்லார்கிட்டயும் போயிருக்கு. எல்லாருக்கும் அந்த பவர்ஃபுல் வில்லன் கேரக்டர்தான் பிரச்னையா இருக்கு!''

ஆசை : சீரியலில் நடிக்கிறார் காக்க காக்க ஹீரோ!

''அடுத்தடுத்து என்ன புராஜெக்ட் மனசுல வெச்சிருக்கீங்க?''

''பொங்கலன்று 'சென்னையில் ஒரு மழைக் காலம்’ ஆரம்பிக்கிறோம். ரஹ்மான் சார் மியூஸிக். த்ரிஷா நடிக்கிறது இப்ப வரை சந்தேகம்தான். ஏப்ரல்ல இந்தி 'விண்ணைத் தாண்டி வருவாயா’ வேலைகள் ஆரம்பிக்கும். 'வேட்டையாடு விளையாடு’ முடிச்சதும் அதன் தொடர்ச்சியாக ஒரு லைன் ரெடி பண்ணேன். அதை வெச்சு ஒரு டி.வி சீரியல் பண்ண ஐடியா. சினிமா ஒரு ரீச். டி.வி அதைவிடப் பெரிய ரீச். வாரம் ஒரு போலீஸ் ஸ்டோரி. நானே டைரக்ட் பண்றேன். மியூஸிக் ரஹ்மான். மெயின் கேரக்டர் அன்புச் செல்வன் அல்லது ராகவனாக இருக்கலாம். மர்டர், க்ரைம்னு ஒவ்வொரு வாரமும் தனித்தனி விசாரணை அத்தியாயங்கள். பாப்புலர் சேனல்களிடம் பேசிட்டு இருக்கோம். சினிமாவில் இருந்து யாரும் டி.வி-க்கு வர மறுக்குறாங்க. நாம முன் உதாரணமா இருக்கலாமேனு டி.வி-க்கு வர்றேன்!''

''ஹீரோயின்களுடன் உங்களை இணைத்து வரும் கிசுகிசுக்கள்பற்றி...''

''அதுக்கு நான் அலட்டிக்கிறது இல்லை. என் வொஃய்ப் கண்டுக்குறதுகூட இல்லை. ஹீரோக்கள்கூட நட்பா இருக்குற மாதிரிதான் ஹீரோயின்களுடனும் நான் ஃப்ரெண்ட்லியா இருக்கேன். கொஞ்சம் எக்ஸ்ட்ராவா அவங்களை வெளியில கூட்டிட்டுப் போவேன். எனக்குப் பெண்களைப் பிடிக்கும். அவங்களோட பேசப் பிடிக்கும். அவங்களை சின்னதா ஃபிளிர்ட்கூடப் பண்ணுவேன். ஆனா, லைன் கிராஸ் பண்றதில்லை. ஏன்னா, வீட்ல அந்த அளவுக்கு என்னைச் சந்தோஷமா வெச்சிருக்காங்க. எனக்கும் என் வொய்ஃபுக்குமான காதலில், நட்பில் பத்து படங்கள் பண்ற அளவுக்கு மெட்டீரியல் இருக்கு. ஃப்ரெண்ட்ஸா இருந்து கல்யாணம் பண்ணினதால், அவங்க என்னை எளிதா புரிஞ்சுக்கிறாங்க. வாழ்க்கை சந்தோஷமா இருக்கு!''

திருப்தியான முகத்துடன் எழுந்த கோகுல், தான் வாங்கி வந்த ஆங்கிலப் புத்தகம் ஒன்றை கௌதம் மேனனுக்கு பரிசாக அளித்தார். புது டைரியில் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டார். ''அடுத்து உங்களை ஐ.பி.எஸ் ஆகத்தான் சந்திப்பேன் சார்!'' என்று கோகுல் சொல்ல, ''ஆல் தி பெஸ்ட் பாஸ்!'' என்று கைகுலுக்கி வாழ்த்தினார் கௌதம். விடை பெற்று வெளி வந்ததும், கோகுல் செல்போனில் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்ட முதல் நபர் அவரது அம்மா மாதவி!

ஆசை : சீரியலில் நடிக்கிறார் காக்க காக்க ஹீரோ!

படங்கள் : வி.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு