Published:Updated:

இவன் வீரன்டி!

கட்டுரை, படங்கள் : இரா.முத்துநாகு

இவன் வீரன்டி!

கட்டுரை, படங்கள் : இரா.முத்துநாகு

Published:Updated:
##~##

ட்டியில் நடந்த குடியரசு தின விழாவில், ஆயிரம் பேர் சாட்சியாக அநியாய மாகப் பிரிந்துவிட்டது ஆயுதப் படை வீரர் பாண்டியனின் உயிர். பல்வேறு சாகசங்களுக்கு இடையில் 13 பேரைத் தாண்டிக் குதிக்கும் நிகழ்ச்சியின்போது, புல்தரை ஈரம் காரணமாக மெத்தை நழுவி, கழுத்து எலும்பு முறிந்து இறந்துபோனார்.

 சொந்த ஊரான சின்னமனூரில் அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகும், அவர் இறந்ததை நம்ப முடியாமல் கதறி அழுதுகொண்டு இருக்கிறார் பாண்டியனின் மனைவி சத்யா. குழந்தைகள் இரண்டும் இடைவிடாமல் 'அப்பா... அப்பா’ என்று அரற்றிக்கொண்டு இருக்க, அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் விம்மி வெடிக்கிறார் பாண்டியனின் தாய் கருப்பாயி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என் வீட்டுக்காரர் பட்டாளத்துல இருந்தப்ப தப்பு செய்யச் சொன்ன அதிகாரியை ஓங்கி அடிச்சுட்டு, வேலையை விட்டுட்டு வந்தவர். இவன் பொறந்து மூணு மாசமா இருக்கிறப்பவே, 'இவன் வீரனா வருவான்டீ’னு ரெண்டு காலையும் பிடிச்சுத் தலைகீழா தொங்கவிட்டு, ராட்டினம் கணக்கா ஆட்டுவார். இவன் கெக்கெக்கேனு சிரிப்பான். அஞ்சு வயசு இருக்கும்போது, 'வீட்டு மச்சுல இருந்து குதி’ன்னார் அவங்க அப்பாரு. அவர் சொன்ன மாயத்துல பயமறியாம குதிச்சான் பாண்டியன். பத்தாவது படிக்கிறப் பவே மரம் ஏறுவான். அஞ்சு ஆள் மட்டம் இருக்கிற எங்க தோட்டத்து தென்னை மரத்துல ஏறி தேங்கா பிடுங்கச் சொன்னா, அடுத்த நிமிஷம் மரத்து உச்சியில நிப்பான்.

இவன் வீரன்டி!

போலீஸுக்கு ஆளு எடுக்கிறாங்கனு தெரிஞ்ச உடனே அம்புட்டு சனத்துல முதல் ஆளா ஓடிப் போய் நின்னான். வீரப்பனைச் சுட்டதுல என் மகனும் இருந்தான்னு நினைக்கிறப்ப பெருமையா இருந்துச்சு. இவன் செய்யிற சாகசங்களைப் பார்த்துட்டு வீட்டுக்குக் கூப்பிட்டு விருந்து கொடுத்தார் அதிரடிப் படைத் தலைவரு விசயகுமாரு. அதிரடிப் படை எஸ்.பி-யா இருந்த பொன்.மாணிக்கவேல், 'உள்ளூர் போலீஸ் வேலைல சேர்ந்துடுறியா? நான் மாத்திவிடுறேன்’னு கேட்டார். வேணாம்னு மறுத்துட்டான். இப்ப எம் மவராசன் மண்ணோட மண்ணாகிட்டானே!'' என்றபடி பெரும் குரலில் அழுகிறார் கருப்பாயி.

தந்தை மாரிமுத்துக்காளை இறந்த பிறகு, உடன் பிறந்த சகோதரிகள் மூவருக்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து கடமைகளைச் செய்து முடித்திருக்கிறார் பாண்டியன்.

இவன் வீரன்டி!

 அழுதழுது கண்ணீரும் வார்த்தைகளும் வற்றிவிட்ட சத்யா, மிகுந்த பிரயாசைக்குப் பிறகு பேசுகிறார், ''வீடு முழுக்க அவர் வாங்கின பதக்கந்தேன். எங்க கல்யாண ஆல்பத்தைக்கூட அவர் இப்படிப் பத்திரப்படுத்தலை. வீட்லயும் ஒரு நிமிஷம்கூடச் சும்மா இல்லாம, கையை ஊனித் தலைகீழா நடந்துதான் குழந்தைகளுக்கு விளையாட்டு காமிப்பார். ஸ்ரீவர்சினிக்கு அப்பான்னா கொள்ளப் பிரியம். 'நானும் அப்பா மாதிரி கராத்தேல ப்ளாக் பெல்ட் வாங்குவேன்’னு சொல்லிக்கிட்டுத் திரிவா. இதுக்கு முந்தி 14 பேரைத் தாண்டி தங்கப் பதக்கம் வாங்கினவரு, இப்ப 13 பேரைத் தாண்டும்போது என் கண்ணு முன்னாடியேஉயிரை விட்டுட்டாரே! அவுக அம்மாவுக்கு பால்கோவான்னா பிடிக்கும். திடுக்குனு வந்து நின்னு பால்கோவாவை அம்மாவுக்கு ஒரு வாய்... மகளுகளுக்கு ஒரு வாய்னு ஊட்டிவிடுவாரே... இனி யார் கொண்டுவருவா பால்கோவா?'' என்று சத்யா மீண்டும் அழத் தொடங்க, 'பால்கோவா’ என்ற வார்த்தையைக் கேட்டதும் வாசல் பக்கம் திரும்பி சின்ன மலர்ச்சியுடன் 'அப்பா’ என்கிறாள் ஸ்ரீவர்சினி!