Published:Updated:

ஆல் இஸ் வெல்!

எஸ்.ஷக்திபடங்கள் : தி.விஜய், செ.பாலநாக அபிஷேக்

ஆல் இஸ் வெல்!

எஸ்.ஷக்திபடங்கள் : தி.விஜய், செ.பாலநாக அபிஷேக்

Published:Updated:
##~##

நிசப்தப் பூக்கள் மட்டுமே பூத்துக் குலுங்குகின்றன அந்தப் பள்ளியில்! மலர்ந்த முகங்களால் தங்களுக்குள் உற்சாகத்தைப் பரிமாறிக்கொண்டே ஒவ்வொரு நொடியையும் கடந்து செல்கிறார்கள். 'ஹோம் வொர்க் பண்ணிட்டியா?’, 'விளையாடப் போலாம்டா!’ என அனைத்துத் தகவல் பரிமாற்றங்களும் சைகைகளினால் மட்டும்தான். ஆசீர்வதிக்கப்பட்ட பட்டாம்பூச்சிகளாகப் பாடித் திரிகிறார்கள் அவர்கள்.

 மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான ஒரு முன்னோடிப் பள்ளியாகத் திகழ்கிறது திருப்பூர் மாவட்டம், கோதபாளையத்தில் அமைந்திருக்கும் திருப்பூர் காது கேளாதோர் பள்ளி. இங்கு உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக் குழந்தைக்கும் ஓர் அசாதாரணத் திறமை உண்டு. நான்காம் வகுப்பு அபிநயா, இயற்கை விவசாயத்தின் நுணுக்கங்களை நேர்த்தியாகப் பகிர்ந்துகொள்கிறாள். 'நான் நேஷனல் செஸ் சாம்பியன்’ என்று மெடலை எடுத்துக்காட்டுகிறாள் சுதாஸ்ரீ. பூர்ணிமா குட்டி எடுத்த அசத்தல் புகைப்படங்கள் சென்னை மற்றும் டெல்லிக் கண்காட்சிகளுக்காக ஃப்ரேம் ஆகிக்கொண்டு இருக்கின்றன. அங்கு உள்ள அத்தனை குழந்தைகளுக்கும் சித்ரா அக்கா என்றால் உயிர். தாயும் அவரே... தந்தையும் அவரே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆல் இஸ் வெல்!

பள்ளியின் கதை சொல்லத் தொடங்குகிறார் சித்ரா. ''முருகசாமி என்ற தனி மனுஷர் 14 வருஷங்களுக்கு முன்னாடி ஆரம்பிச்ச பள்ளிக்கூடம் இது. அவரும் கேட்கும் பேசும் திறன் அற்ற ஒரு மாற்றுத்திறனாளிதான். சின்ன வயசுல தான் அனுபவிச்ச அத்தனைப் புறக்கணிப்புகளும் அவமதிப்புகளும்தான் அவரைப் போன்ற மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்காக இந்தப் பள்ளியை ஆரம்பிக்கத் தூண்டியதாம். சொந்த நிலத்தில் பள்ளிக்கூடத்தை ஆரம்பிச்சுட்டார். ஆனா, தொடர்ந்து நடத்தணுமே... தன்னோட சொத்தைக் கொஞ்சம் கொஞ்சமா வித்தும் நண்பர்களின் உதவியோடும் போராடி இந்தப் பள்ளியை நடத்திட்டுவர்றார்!'' - சித்ரா  என்ன  சொல்கிறார் என்பதை   அனுமானித்தோ என்னவோ... பேச்சை மடை மாற்றச் சொல்கிறார் முருகசாமி.

ஆல் இஸ் வெல்!

''சராசரிக் குழந்தைங்க படிக்கிற அதே பாடங்கள்தான் இந்தக் குழந்தைகளுக்கும். ஆனா, மற்ற சாதாரண பள்ளிகளுக்குக் கிடைக்கும் அரசு உதவிகள்கூட எங்களுக்கு இல்லை. 'உணவீட்டு மானியம்’னு ஒரு சொற்பத் தொகை மட்டும் கிடைக்கும். ஆனா, இயல்பான குழந்தைகளுக்குக் கிடைக்கும் எல்லாக் கல்வி வசதிகளும் இந்தக் குழந்தைகளுக்கும் கிடைக்கணும்கிற ஒரே நோக்கத்தோட இந்தப் பள்ளிக்கூடத்தை நடத்திட்டு வர்றோம்.  

ஆல் இஸ் வெல்!

கொஞ்சமே கொஞ்சம் ஊக்குவிச்சாலும் அசாதாரண சாதனையாளர்களா இவங்க பரிணமிப்பாங்க. அப்பா, அம்மா கைவிட்டுட்டதால், அஞ்சு வயசுலயே அனுப்பர்பாளையம் பக்கம் சுத்திட்டு இருந்தான் சுரேஷ். முருகசாமி சார் அவனை இங்கே அழைச்சுட்டு வந்தார். இப்போ 10-ம் வகுப்பு படிக்கிற அவன் மாற்றுத்திறனாளிகளுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தேசிய அளவில் தங்கப் பதக்கம் ஜெயிச்சிருக்கான். வாலிபால், நீளம் தாண்டுதல் போட்டிகளிலும் அவனை அடிச்சுக்க ஆளே இல்லை. நந்தினி செஸ் விளையாட்டில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பரிசுகளைக் குவிக்கிறார். சமையல் வேலை செய்யும் அவங்க அம்மா நந்தினி ஜெயிச்ச மெடல்களை வீடு முழுக்க அடுக்கிவெச்சுப் பூரிக்கிறாங்க. உங்களுக்கு என்ன கவலை இருந்தாலும், இங்கே வந்து கொஞ்ச நேரம் செலவழிச்சுட்டுப்போங்க. அடுத்த ஆறு மாசத்துக்கான உற்சாகத்துக்கு நாங்க கியாரன்ட்டி!'' என்று பெருமிதம் நிறைந்த குரலில் பூரிக்கிறார் சித்ரா.  

ஆல் இஸ் வெல்!

குழந்தைகளின் ரசனையை நல்வழியில் மேம்படுத்துவதையே நோக்கமாகக்கொண்டு இயங்கும் 'குக்கூ’

ஆல் இஸ் வெல்!

அமைப்பு, கடந்த சில மாதங்களாக இந்தப் பள்ளியைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. மரத்துக்குக் கூழாங்கற்களால் தடுப்புச் சுவர், தரிசு நிலத்தில் தானியச் செடிகள் வளர்ப்பு, இயற்கை விவசாயம், நூலகப் பராமரிப்பு, புகைப்படப் பயிற்சி என்று அந்த மாணவர்களின் ரசனையை அடுத்த கட்டத் துக்குக் கொண்டுசென்று இருக்கிறார்கள். பார்வை யால் மட்டுமே எதையும் புரிந்துகொள்ளும் இந்தக் குழந்தைகளுக்குச் சிறுகச் சிறுகப் பயிற்சி கொடுத்து தாளத்துக்கு ஏற்ப நடனமாடவைத்து இருக்கிறார்கள்.

சிரிப்பும் சந்தோஷமுமாகக் குதூகலிக்கும் குழந்தைகள் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தையும் இதே உற்சாகத்தோடு எதிர்கொள்ள... உங்கள் கரங்களும் ஆசீர்வதிக்கட்டுமே!