Published:Updated:

தமிழகத்தில் ஓர் உலக அதிசயம்!

க.நாகப்பன்

தமிழகத்தில் ஓர் உலக அதிசயம்!

க.நாகப்பன்

Published:Updated:
##~##

'முத்திபெற சித்தர்களைக் காணவென்று
மூதுலகில் வெகுகோடி மாண்பரப்பா
நித்தியமும் எந்தனது கிரியை நாடி
நிஷ்டையுடன் தவமிருக்க வருவார்பாரெ
!’

- அகத்திய மாமுனிவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதிகை மலை, தென் மலை, தமிழ் மலை எனப் பல பெயர்களிட்டு அழைக்கப்படும் அகத்தியர் மலை... சித்தர்கள் வாழ்ந்த அதிசய பூமி! மனிதனின் காலடிகள் அதிகம் தடம் பதிக்காத இந்த மண்ணில் உலகின் அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. இந்தியாவின் பறவையியல் நிபுணர் சலீம் அலிக்குப் பிறகு, இந்த மலையில் ஆராய்ச்சிக்கு என சென்று படம் எடுத்தவர்கள் எவரும் இல்லை. அகத்திய மலையில் தங்கி ஆய்வு செய்து 'ஓர் அருந்தமிழ்க் காடு’ என்ற பெயரில் சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வு ஆவணப் படத்தை எடுத்திருக்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் மோகன்ராம். அவரைச் சந்தித்தேன்.

''எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை கிராமம். பாட்டி சொல்லும் 'காட்டுக் கதைகள்’தான் என் மனசுக்குள்ள பச்சை படரக் காரணம்.  மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்ல டிப்ளமோ முடிச்சிட்டு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துட்டு இருந்தாலும், விடுமுறைக்கு திருநெல்வேலிக்குத் திரும்ப மனசு குரங்கா தவ்விட்டு இருக்கும். ஊருக்குப் போனதும் அகத்திய மலைக்குக் கிளம்பிடுவேன். 15 வருஷமா அந்த மலை எங்கும்  அலைஞ்சு திரிஞ்சிருக்கேன். ஒரு கட்டத்துல வேலையை விட்டுட்டு வர்ற அளவுக்கு இயற்கை என்னை ஈர்த்துக் கொண்டது. மலையே பழியாக் கெடந்தேன்.

தமிழகத்தில் ஓர் உலக அதிசயம்!

இந்த மலையில் படப்பிடிப்பு நடத்த மணிரத்னம் அனுமதி கேட்டும் கிடைக்கலை. அந்த அளவுக்கு வெளிஉலக வாடை படாம பாதுகாக்கப்படும் பகுதி இது! என் கையடக்க கேமராவில் பதிவுசெய்த ஆய்வுகளை, வனத் துறையினரிடம் காட்டி, தமிழக - கேரள அரசுகளின் ஒப்புதலைப் பெற்று   சென்னைத் திரைப்படக் கல்லூரி மாணவர்கள், புகைப்படக்காரர்கள், ஆதிவாசிகள்னு 18 பேர்கொண்ட குழுவாக காட்டுக்குள் படம் பிடிக்கக் கிளம்பினோம்.  50 நாட்கள் தங்கி இருந்து காட்டின் அழகை துளி பிசகாமல்  படமாக்கினோம். கேமராவுக்கு முன்னாடி காடு அழகா விரிஞ்சு கிடக்கும். ஆனால்,  கேமராவுக்குப் பின்னாடி காடு அவ்வளவு பயங்கரமா இருக்கும்.

காட்டுல நடந்துகிட்டே இருக்கணும். அசந்து ஓய்வு எடுக்க நினைச்சு உட்கார்ந்தா ஒரு நிமிஷத்துல ராட்சச அட்டைகள் உடல் முழுக்க அப்பிக்கும்!'' என்று  அந்த நிமிட சிலிர்ப்புக்கு ஆட்பட்டுவிட்டு மேலும் தொடர்கிறார்...  

தமிழகத்தில் ஓர் உலக அதிசயம்!

''27 வகை ஆற்று மீன்கள், 9 வகை தவளைகள், 600-க்கும் மேற்பட்ட மூலிகைகள், 100-க்கும் மேற்பட்ட அரிய தாவரங்கள், 300 வகை மலர்கள், உலகில் வேறு எங்கும் இல்லாத 177 வகை மரங்கள், 15 வகை எறும்புகள், 157 வகை ஊர்வன என ஒரு பிரமாண்ட பல்லுயிர்ப் பெருக்கச் சுரங்கம் இந்த மலை. மனித முகத்தைப் போன்ற தோற்றம் உடைய பூச்சி இனம், பறக்கும் பல்லி உட்பட 20 வகை பல்லி இனங்கள் இங்கே இருக்கு. 500 சதுர கி.மீ. பரப்புக்கு மேல் மழைக் காடுகளைக்கொண்ட உலகின் ஒரே காடு

தமிழகத்தில் ஓர் உலக அதிசயம்!

இதுதான். தாலாட்டுப் பாடும் வண்ணத்துப்பூச்சி, குரங்குகளின் பஞ்சாயத்து, பறவைகளின் சிரிப்பு, விலங்குகளின் கொஞ்சல்னு பல நுட்பமான விஷயங்களை ஆவணமாக்கி இருக்கோம்!'' என்று கூறும் மோகன்ராம்,  ஆவணப்படத்தைத் தன் சொந்தச் செலவிலேயே எடுத்திருக்கிறார்.

''கையிருப்பு, மனைவியின் நகைகள், ஏகப்பட்ட கடன் என சிரமப்பட்டுத்தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கேன்.  உலகத்துக்கு நல்ல விஷயத்தைக் கொண்டுசேர்த்த திருப்தி. பெங்களூரைச் சேர்ந்த 'A Tree’ எனும் விஞ்ஞானிகள் குழு, 'அகத்திய மலை ஆய்வு... முறியடிக்கப்படாத உலக சாதனை’னு சொல்லி அங்கீகரிச்சிருக்காங்க. உலகம் முழுக்க இப்போ என்னோட ஆவணப்படம் திரையிடப்படுது.  ஒரு மேஜர் ஆபரேஷன் காரணமா இப்போ மாடிப்படிகூட ஏறக் கூடாதுனு என்னை எச்சரிச்சிருக்காங்க. ஆனா, கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கும் பரம்பிக்குளம் புலி கள் சரணாலயமும் ஆவணப்பட ஆர்வத்தைத் தூண்டுது. பார்க்கலாம்!'' என்று நீண்ட பெருமூச்சோடு முடிக் கிறார் இந்த கானகக் காதலர்!