``உங்களுக்கும் மற்ற கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம் கமல் சார்?'' - அமித் பார்கவ் கேள்வி | amith bhargv against tweet for kamal's speech

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (14/05/2019)

கடைசி தொடர்பு:14:40 (14/05/2019)

``உங்களுக்கும் மற்ற கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம் கமல் சார்?'' - அமித் பார்கவ் கேள்வி

அமித் பார்கவ்

''உங்கள்மீது மிகப்பெரிய மரியாதை உண்டு. ஆனால், மக்களை மதத்தின் பெயரால் பிரிப்பது எங்களை மிகவும் காயப்படுத்துகிறது' என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், நடிகர் அமித் பார்கவ். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜ் என்பவரை ஆதரித்து, 'மக்கள் நீதி மய்யம் கட்சி'யின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார், அதில், 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து' என பேசியிருப்பது கடந்த சில நாள்களாக சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. 

''முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம்'' என பி.ஜே.பி தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும், ``கோட்சேவை நீங்கள் தீவிரவாதி எனக் கூறலாம். ஆனால், ஏன் இந்து என்று குறிப்பிடுகிறீர்கள்'' என நடிகர் விவேக் ஓபராயும் கண்டனங்களைப் பதிவுசெய்திருந்தனர். நாதுராம் கோட்சே  ஓர் இந்து. அவர்தான் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என்கிற  பேச்சுக்கு, நடிகர் அமித் பார்கவும் தனது கண்டனத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்திருக்கிறார். இதுகுறித்து அவரிடம் பேசினோம்.. 

அமித் பார்கவ்

``சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி, அரசியலைப் பொறுத்தவரை மற்ற அரசியல்வாதிகளிடமிருந்து சாதி, மதம், இனம் என எந்தப் பாகுபாடும் இல்லாத மனிதர் என்பதால்தான் அவரை நான் பெரிதும் நம்பினேன். அவருடைய பேட்டிகள், பிரசாரங்கள், எழுத்துகள் என ஒன்றுவிடாமல் தொடர்ந்து ஃபாலோ செய்கிறேன். இப்படித் தெளிவான சிந்தனையைத் தன்னகத்தே கொண்ட அவரால் எப்படி இப்படிப் பேச முடிந்தது என்பதை நம்பமுடியவில்லை. எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள்  உண்டு. இதையெல்லாம் தாண்டி இந்து, இஸ்லாமியர் என ஏன் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பதுதான் என் கேள்வி. 

கமல்

கமல் பேச்சைக் கேட்கும்போது சென்சிபிளாக இருக்கும். என்ன பேசவேண்டுமோ அதை சரியாகப் பேசுவார். அது புரட்சிகரமாக இருக்கும். இந்த விஷயத்தில் ஏன் இப்படிப் செய்தார் என்றுதான் தெரியவில்லை. மதத்தை வைத்து அரசியல் செய்யாதவர். அவரிடமிருந்து பெரிய மாற்றம் உண்டாகும் என்பதால்தான் அவரைப் பின் தொடர்கிறார்கள். அவரே இப்படி ஜாதி, மதம் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார். அவருக்கும் மற்றக் கட்சிக்கும் என்ன வித்தியாசம் என்பதுதான் என் கேள்வி'' என்றவர்,

மதத்தை நம்பாதவர்தான் கமல்ஹாசன். அவரை அப்படித்தான் தெரியும். அவருடைய கொள்கைகளுக்கு எதிராக அவரது இந்த பேச்சு இருந்தது. என்னைப் பொறுத்தவரை தீவிரவாதிகள் தீவிரவாதிகள்தான்'' என்று முடித்தார் அமித் பார்கவ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க