அட்லியைத் தொடர்ந்து விஜய்யை இயக்கவிருக்கும் லோக்கேஷ் கனகராஜ்! #Vijay64 | Vijay 64 to be directed by Maanagaram Lokesh

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (14/05/2019)

கடைசி தொடர்பு:14:32 (14/05/2019)

அட்லியைத் தொடர்ந்து விஜய்யை இயக்கவிருக்கும் லோக்கேஷ் கனகராஜ்! #Vijay64

=

அடுத்த படம் ஷங்கரோடா, மோகன் ராஜாவோடா, முருகதாஸோடா என காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு, விஜய் தந்தது ஒரு எதிர்பார்க்க முடியாத சர்ப்ரைஸ். நீண்ட நாள்களாகத் தங்கள் 'தளபதி'யை எப்போதும் போல் இல்லாத, ஒரு மாறுபட்ட படத்தில் பார்க்க வேண்டும் என்கிற ஆசை, எல்லா விஜய் ரசிகர்களுக்குள்ளும் இருப்பது, அவர்களாலும் தவிர்க்க முடியாத உண்மை. அவர்கள், 'கடைசியா 'காவலன்' படத்துல பார்த்தது ப்ரோ' என்பார்கள். அந்தக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, இப்போது தன் அடுத்த படத்தை 'மாநகரம்' லோக்கேஷ் கனகராஜ் இயக்க,  விஜய் நடிக்கவிருப்பதாகத் தெரிகிறது.

விஜய்

தற்போது அட்லி இயக்கத்தில் தன் 63-வது படத்தில் நடித்துவருகிறார் விஜய். மிக வேகமாக நடந்துவரும் இதன் ஷூட்டிங், இன்னும் ஒரு சில மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், டைட்டிலும் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையில், விஜய்யிடம் பல முன்னணி இயக்குநர்கள் அவருடைய அடுத்த படத்துக்காக கதை சொல்லிவந்தனர். அதில் சிலவற்றுக்கு அவர் ஓ.கே சொல்லியிருந்தார். ஷங்கர், முருகதாஸ், மோகன் ராஜா எனத் தொடர்ச்சியாகப் பெரிய இயக்குநர்கள் விஜய்யை நோக்கிப் படையெடுத்துக்கொண்டிருந்தனர். அதேவேளையில், சில இளம் இயக்குநர்களும் அவரை அணுகிவந்தனர்.

இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கோ உற்சாகம் உச்சத்தை எட்டியது. ஏற்கெனவே சிவாஜி புரடக்‌ஷன்ஸுக்காக விஜய் ஒரு படம் நடிக்க வேண்டியிருக்கிறது. இப்போது வந்திருப்பதும் பிரமாண்ட இயக்குநர்கள். எப்படியும் வேற லெவல் படம் எனப் பலத்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். அந்தச் சமயத்தில்தான் இந்தத் தகவல் காற்றில் பரவத் தொடங்கியுள்ளது.

இதைக் கேட்டதும், விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்றே சொல்லலாம். மாஸ், க்ளாஸ் என நடித்துக்கொண்டிருந்த விஜய், இப்படியொரு எக்ஸ்பெரிமென்டல் இயக்குநர் படத்தில் நடிக்கப்போகிறார் என்றதும், படம் எப்படி இருக்கப்போகிறதோ என இப்போது கனவு காணத்தொடங்கிவிட்டனர்.

தற்போது லோக்கேஷ், கார்த்தியை வைத்து 'கைதி' படத்தை இயக்கிவருகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைகிறது. அதைத் தொடர்ந்து, விஜய் படத்துக்கான ப்ரீ-புரடக்‌ஷன் வேலைகளில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.