``ராமேஸ்வரம் பாட்டிக்கும், சிவகாசி அக்காவுக்கும் கதை புரியுமான்னு யோசிப்பேன்!" - `மெளனகுரு' சாந்தகுமார் | Director Santhakumar on Mounaguru and Magamuni

வெளியிடப்பட்ட நேரம்: 20:06 (15/05/2019)

கடைசி தொடர்பு:20:06 (15/05/2019)

``ராமேஸ்வரம் பாட்டிக்கும், சிவகாசி அக்காவுக்கும் கதை புரியுமான்னு யோசிப்பேன்!" - `மெளனகுரு' சாந்தகுமார்

"படங்களை வகை பிரிக்கிறது எனக்குப் பிடிக்காது. நல்ல சினிமா, கெட்ட சினிமான்னு மக்கள் பேசுவாங்க. ஆனா, எல்லா சினிமாவுக்கும் இங்கே ஆடியன்ஸ் இருக்காங்க. சினிமா மேதாவிகளுக்கானதல்ல; பாமரனுக்கான ஊடகம்."

``ராமேஸ்வரம் பாட்டிக்கும், சிவகாசி அக்காவுக்கும் கதை புரியுமான்னு யோசிப்பேன்!

``நீச்சலடிக்கத் தெரிந்தவனுக்கு, ரொம்பநாள் கழிச்சு கிணறு கிடைச்சா, தொப்புனு குதிச்சிடுவான்! `மகாமுனி' ஷூட்டிங் தொடங்குனப்போ, எனக்கு அப்படித்தான் இருந்தது." - `மௌனகுரு' படத்திற்குப் பிறகு தன்மேல் எழுந்த எதிர்பார்ப்பை `மகாமுனி' படம் மூலம் பூர்த்திசெய்ய ஆயத்தமாகியிருக்கிறார், இயக்குநர் சாந்தகுமார்.   

இயக்குநர் சாந்தகுமார்

`` `மௌனகுரு'வுக்குப் பிறகு இந்த ஏழு வருட இடைவெளியில சினிமாவுல என்னென்ன மாற்றத்தை உணர்றீங்க?"  

`` `மௌனகுரு' ஃபிலிம்ல பண்ண படம். இப்போ, டிஜிட்டல் கேமராவுக்குப் பழகிட்டோம். `மெளனகுரு'வுல வேலை பார்த்த வாலி சார், நா.முத்துக்குமார் இப்போ உயிரோடு இல்லை. வாலி சாரை முதல் முறையா பார்க்கிறப்போ, நான் நொந்துபோய் உட்கார்ந்திருந்த சமயம். அப்போ, கிட்டத்தட்ட 50 பேருக்குக் கதை சொல்லி, 14 வருடம் காத்திருந்தேன். பிறகு, எனக்குக் கிடைச்ச தயாரிப்பாளரோடு போய் வாலி சாரைப் பார்த்தேன். என் திரைக்கதையைப் படிச்சுட்டு, `யோவ் தமிழரசு.. இதுல ஒரு நியாயமான உழைப்பு தெரியுதுய்யா'ன்னு சொன்னார். அவரோட வார்த்தைகள், எனக்கு எவரெஸ்ட்டைத் தொட்ட சந்தோஷம். வாலி, நா.முத்துக்குமார் இந்த ரெண்டுபேரையும் நான் ரொம்ப மிஸ் பண்றேன்."

``கமர்ஷியல் படங்கள்ல உதவி இயக்குநரா வொர்க் பண்ணியிருக்கீங்க. ஆனா, உங்க படம் வேறமாதிரி இருக்கே?"

``நான் சினிமாவைக் கத்துக்கிறதுக்காக சேர்ந்த இடங்கள் வேற; அங்கிருந்து நான் கத்துக்கிட்ட விஷயங்கள் வேற. நான் உலக சினிமாவும் பார்ப்பேன், தெலுங்கு டப்பிங் படங்களும் பார்ப்பேன். படங்களை வகை பிரிக்கிறது எனக்குப் பிடிக்காது. நல்ல சினிமா, கெட்ட சினிமான்னு மக்கள் பேசுவாங்க. ஆனா, எல்லா சினிமாவுக்கும் இங்கே ஆடியன்ஸ் இருக்காங்க. சினிமா மேதாவிகளுக்கானதல்ல; பாமரனுக்கான ஊடகம். அதனால, நான் கதை எழுதும்போது ராமேஸ்வரத்துல கருவாடு விற்கிற பாட்டிக்கும், சிவகாசியில தீப்பெட்டிக்கு அட்டை ஒட்டுற அக்காவுக்கும் புரியுமான்னு யோசிப்பேன். மத்தபடி, `மெளனகுரு' ஒரு கமர்ஷியல் படம்தான்." 

``3டி அனிமேட்டரா சினிமாவுல வேலை பார்க்க ஆரம்பிச்சதுல தொடங்கி, இயக்குநர் ஆன வரை... உங்க பயணத்தைக் குட்டியா ரீவைண்டு பண்ண முடியுமா?" 

``மதுரை அமெரிக்கன் காலேஜ்ல விலங்கியல் படிச்சேன். 96-ல காலேஜ் முடிச்சுட்டு, சென்னைக்குப் போனா.. பத்து வருடத்துல டைரக்டர் ஆகிடலாம்னு நினைச்சேன். அப்போ, சினிமாவுல வாய்ப்புகள் கஷ்டம். வீட்டுலேயும் சினிமாவுக்குப் போறதுக்குப் பெருசா சப்போர்ட் இல்லை. என் காலேஜ் சீனியர் மூர்த்திதான், `அனிமேஷன் படிங்க'ன்னு சொன்னார். பிறகு, பிரசாத் இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்து அனிமேஷன் படிச்சுட்டு, ரெண்டு வருடம் ஃபிரீலான்ஸரா வேலை பார்த்தேன். பிறகு, சுசி கணேசன்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன். அப்புறம், தரணி சார்கிட்ட வொர்க் பண்ணேன். `மெளனகுரு' இயக்குறதுக்கு முன்னாடி, பிரான்ஸ்ல இருக்கிற ஒரு சேனலுக்கு `பொம்மி அண்டு ஃப்ரெண்ட்ஸ்'ங்கிற அனிமேஷன் சீரிஸ்ல ரெண்டு எபிசோடுக்கு ஸ்கிரிப்ட் எழுதினேன். அதுல ஒரு எபிசோடை நானே இயக்கினேன்."

மௌனகுரு இயக்குநர்

`` `மெளனகுரு' படத்துல நடிகர்களின் நடிப்பு ஸ்பெஷலா இருக்கும். நீங்களே நடிச்சுக் காட்டுவீங்களோ?"

``இயக்குநர்கள் நடிச்சு காட்டினா, அவங்க உடல்மொழி படத்துல வர்ற எல்லாக் கதாபாத்திரங்களிலும் இருக்கிறதைப் பார்க்க முடியும். அதனால, நான் நடிச்சுக்காட்டவே கூடாதுன்னு தீர்மானமா இருக்கேன். ஷூட்டிங் போறதுக்கு முன்னாடியே நடிகர்களுக்கு அவங்க கேரக்டரைப் புரியவெச்சிடுவேன். அவங்க நடிச்சிடுவாங்க." 

``நாவல், சிறுகதைகளைப் படமா எடுக்கிறாங்க. உங்களுக்கு அந்த மாதிரி எண்ணம் இருக்கா?"

``அப்படி எதுவும் இல்லை. என் வாழ்க்கை அனுபவமும், கற்பனையும் சேர்ந்ததாதான் என் படைப்புகள் இருக்கும். அதுல எது நிஜம், எது கற்பனைன்னு பிரிக்கிறது கஷ்டம். என் சினிமாக்கள் என் வாழ்வின் ஒரு பகுதிதான். நான் புத்தகத்துல இருந்தோ, படங்களிலிருந்தோ என் கதை, திரைக்கதையை உருவாக்குவதில்லை. நான் ஒரு கதாபாத்திரத்தைத் தூக்கி, வித்தியாசமான ஒரு சூழல்ல போடுறேன். அங்கே அது செய்ற வேலைகள்தான், திரைக்கதையைத் தீர்மானிக்கும். சிறுசா இருக்கிற வடகம் பொறிக்கிறப்போ பெருசா வேற ஒரு வடிவத்துல வரும். அதுமாதிரிதான், ஒரு படத்திற்கான திரைக்கதை." 

``அதிகமா படித்த புத்தகங்கள்?"

``நான் நிறைய வாசிக்கிற ஆளில்லை. `Non-fiction' புத்தகங்ளைத்தான் அதிகம் வாசிப்பேன். கதைகளைப் பொறுத்தவரை, அந்தந்த எழுத்தாளர், கதாபாத்திரங்களின் வாழ்வியலை எப்படி அணுகுகிறார்னு தெரிஞ்சுக்கிறதுக்காகப் படிப்பேன். மத்தபடி, யாருக்கும் பெரிய ரசிகனோ, அவங்க படைப்புகளை டன் கணக்குல வாசிப்பேன்னோ எதுவும் கிடையாது. நான் எடுத்துக்கிட்ட கதைக்குத் தேவையான விஷயங்களைத் தேட, தெரிஞ்சிக்க, வாசிக்கிறது எனக்கு முக்கியம். நிறைய ஆவணப்படங்களைப் பார்ப்பேன். புத்தகங்களைவிட சினிமாக்கள்தான் என்னை அதிகமா பாதிச்சிருக்கு."

சாந்தகுமார்

``ரெகுலர் சினிமா ஆள்களோட உங்களைப் பார்க்க முடியலையே!" 

``சினிமா ஆள்கள் மட்டுமல்ல; சினிமா அல்லாத நபர்களுடன்கூட என்னால ஒட்டமுடியாது. ஏன்னா, எனக்கு வெவ்வேறு விதமான நட்பு வட்டம் இருக்கு. ஆனாலும், அவங்ககூட பெரிய நெருக்கம் இல்லை. குறிப்பா, எல்லாம் தெரிஞ்சமாதிரி பேசுறவங்களைப் பார்த்தா, எனக்கு ஆகாது."

``சினிமா சமூகத்துக்குக் கருத்து சொல்லும், தனி மனிதனுக்கு உளவியல் ரீதியான மாற்றத்தைக் கொடுக்கும்னு நம்புறீங்களா?"  

``சினிமாவுல எல்லாமே செய்யலாம். எழுதப் படிக்கத் தெரியாதவங்களும், ட்விட்டர், ஃபேஸ்புக், யூ-டியூப்ல இல்லாதவங்களுக்குப் புதுப்புது விஷயங்களைக் கத்துக்கொடுக்கிற இடமா சினிமா இருக்கு. ஒரு நல்ல சினிமா ஒருத்தரைச் சிரிக்க வைக்கும், அழ வைக்கும். யோசிக்கவும் வைக்கும்."

``எதையுமே உயிரோட்டத்தோட பார்க்கிற உங்களுக்கு, ஷூட்டிங் ஸ்பாட் அனுபவம் எப்படி இருக்கும்?"

``இயக்குறதும், டீம் வொர்க்கும் எனக்குப் பிடிக்கும். நாம் எழுதிய கதையை சினிமாவா எடுக்கிறதுக்கு இவ்வளவுபேர் இருக்காங்க. ஒவ்வொருத்தரும் ஒருமாதிரி இருப்பாங்க. அவங்களுக்குப் புரியிற மாதிரி சொல்லி வேலை வாங்குறது பிடிக்கும். தவிர, ஷூட்டிங் நடக்கும்போது பெரிய கூட்டம் வரும். அவங்களை வேடிக்கை பார்க்கிறதும் பிடிக்கும்." 

``ஊர் ஊரா சுத்துற ஆள் நீங்க. வீட்டுல அதுக்கு என்ன சொல்வாங்க?" 

``என் கிறுக்குத்தனத்தோடு சேர்த்து என்னை ஏத்துக்குவாங்க. நான் இயல்பா இல்லைன்னு ஆரம்பத்துல கொஞ்சம் வருத்தம் இருந்தது. ஆனா, அது இல்லைன்னா நான் இல்லைன்னு தெரிஞ்ச பிறகு என்னைப் புரிஞ்சுக்கிட்டாங்க." 

``சினிமா கலைஞனா இருக்கிறதோட பயன் என்னங்கிற கேள்வி உங்களுக்கு வந்ததுண்டா?"

``நான் சினிமாக்காரனா இருக்கிறதாலதான் என்னை ஒரு மனிதனாவே மதிக்கிறீங்கன்னு நான் நினைக்கிறேன். இல்லைன்னா இவன் கிறுக்கன்னு ஒதுக்கி வெச்சிருவீங்க." 

இவை தவிர, `மகாமுனி' படம் குறித்த தகவல்கள், நீண்ட இடைவெளியில் சாந்தகுமாரின் செயல்பாடு, இடைவெளிக்கான காரணம், `மகாமுனி'க்குப் பிறகு இயக்கவிருக்கும் படம்... போன்ற பல்வேறு விஷயங்களுக்கு நாளை வெளியாகும் ஆனந்த விகடன் இதழில் விரிவாகப் பேசியிருக்கிறார், இயக்குநர் சாந்தகுமார். விகடன் இதழை ஆன்லைனில் சப்ஸ்கிரைப் செய்து படிக்க இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவும்


டிரெண்டிங் @ விகடன்