`அது என்னோட குரலே இல்ல!' - அ.தி.மு.க பிரசார ஆடியோ குறித்து விஜய் சேதுபதி | Vijay Sethupathi explains about ADMK election campaign audio

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (16/05/2019)

கடைசி தொடர்பு:17:40 (16/05/2019)

`அது என்னோட குரலே இல்ல!' - அ.தி.மு.க பிரசார ஆடியோ குறித்து விஜய் சேதுபதி

`நான் இதுவரை எந்தக் கட்சிக்கும் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் நோக்கத்தில் பேசியதில்லை'' என மிகக் காட்டமாகக் கூறுகிறார் விஜய் சேதுபதி. அண்மையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஆதரவாக அவரைப்போலவே அவர் குரலில் ஒருவர் பேசிய ஒலிநாடா ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

விஜய் சேதுபதி

அதைத் தொடர்ந்து பலர், அதை விஜய் சேதுபதிதான் பேசியுள்ளார் என்றே நம்பி, அவர் மீது விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர். பொதுவாக, நடிகர்களைப் போல வேடமிட்டு, அவர்களைப் போல பேசி வாக்கு கேட்பதைத் தங்கள் பொதுக்கூட்ட மேடைகளில் சில அரசியல் கட்சிகள் ஒரு முக்கிய பிரசார யுக்தியாகக் கடைப்பிடிக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்து தற்போது அதை வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களுக்கும் எடுத்து வந்துள்ளனர்.

விஜய் சேதுபதி

இந்நிலையில், விஜய் சேதுபதியைப் போல ஒரு பலகுரல் கலைஞரைப் பேசவைத்து வெளியாகியுள்ள ஒலிநாடா சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. என்ன வேடிக்கை என்றால் சினிமாவில் அவர் பேசும் ``குமுதா ஹேப்பி'', ``ஆர் யூ ஓ.கே பேபி" போன்ற வசனங்களையெல்லாம் சேர்த்து ஒரு ஸ்கிரிப்ட் எழுதி, அதை அந்த ஆடியோவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். பேசியவரும் சில இடங்களில் அச்சு அசல் அப்படியே அவர் குரலிலேயே பேசியும் உள்ளார். 

இதுகுறித்து விஜய் சேதுபதியிடம் கேட்டபோது, ``என் வாய்ஸ் ஏன் பயன்படுத்தினாங்கனு தெரியலை. என் ரசிகர்களும் என்கிட்ட இதைப் பற்றிச் சொன்னாங்க. நான் அந்தத் தொகுதி மக்களுக்குச் சொல்வது ஒன்றுதான். அது என் குரலே இல்ல" என்றார். மேலும், தேர்தலில் வாக்களிப்பது குறித்து அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு அறிவுரையாக, ``உங்க தொகுதிக்கு யார் நல்லது செய்யவாங்கன்னு நினைக்கறீங்களோ, அவங்களுக்கு ஓட்டு போடுங்க. ஆனா, நிச்சயம் ஓட்டு போடுங்க'' என்று அவர் கூறினார்.