`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன?’ - சர்ச்சை ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் விளக்கம் | Vivek Oberoi's refuses apologise on Aishwarya Rai Meme

வெளியிடப்பட்ட நேரம்: 08:43 (21/05/2019)

கடைசி தொடர்பு:10:34 (21/05/2019)

`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன?’ - சர்ச்சை ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் விளக்கம்

இந்தியாவின் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுவருகின்றன. இந்தத் தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களைக் கைப்பற்றி, மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘கடந்த வருடங்களில் பல கருத்துக்கணிப்புகள் பொய்யாகியுள்ளன. அதனால், மே-23 வரை காத்திருப்போம்’ என்பதுதான் பல அரசியல் தலைவர்களின் கருத்தாக உள்ளது.

தேர்தல்

 பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை நடிகை ஐஸ்வர்யா ராயுடன் இணைத்து ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார். அந்த ட்வீட்டில், ஒபீனியன் போல் (Opinion Poll) என்று கூறி, சல்மான் கானுடன் ஐஸ்வர்யா ராய் இருப்பதுபோன்ற படமும், பின், எக்ஸிட் போல் (Exit poll) என்று கூறித் தன்னுடன் ஐஸ்வர்யா ராய் இருப்பது போலவும், பிறகு, ரிஸல்ட் (Result) என்று கூறி, அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயுடன் இருப்பதுபோன்ற புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். தற்போது, இது பெரும் சர்ச்சையாகியுள்ளது. விவேக் ஓபராயின் ட்வீட்டுக்கு பல பெண்கள் அமைப்புகளும், பாலிவுட் பிரபலங்களும் கடும் கண்டம் தெரிவித்துவருகின்றனர். இப்படியான ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்றும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், இந்த சர்ச்சை பற்றிப் பேசியுள்ள நடிகர் விவேக் ஓபராய், “ மன்னிப்பு கேட்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லை. ஆனால், நான் என்ன தவறு செய்தேன். எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்கலாம். இது தவறாக எனக்குத் தோன்றவில்லை. ட்வீட் சர்ச்சை பற்றி அந்தப் படத்தில் இருப்பவர்களே இதுவரை எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. ஆனால், உள்நோக்கம் கொண்ட சிலர், இதை அரசியலாக்க முயல்கின்றனர். 

மேற்கு வங்கத்தில் உள்ள திதி மீம் போட்டதற்காக ஒருவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தார். அந்த வரிசையில் என்னையும் சேர்க்கப்பார்க்கிறார்கள். அவர்களால் என் படத்தை எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் இந்த வழியைப் பயன்படுத்துகின்றனர். அந்த ட்வீட்டில் ஏதேனும் தவறு உள்ளதா...  அது ஏதேனும் ஆபாசமான உள்ளதா?  தேர்தல் நேரத்தில் ஆக்கபூர்வமாக உருவாக்கப்பட்ட மீம் அது, அவ்வளவுதான். நான் அதைப் பார்த்தேன், சிரித்தேன். இதற்குப் போய் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.

விவேக் ஓபராய்

மகாராஷ்டிரா பெண்கள் ஆணையம் என்மீது புகார் அளித்துள்ளனர். அவர்களின் புகார் கடிதத்துக்காக நான் காத்திருக்கிறேன். மேலும், அந்தப் பெண்களை நேரில் சந்தித்து, நான் செய்தது தவறு இல்லை என அவர்களுக்கு விளக்கமளிக்கவும் தயாராக உள்ளேன். மக்கள் இதை ஏன் இவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்கிறார்கள் எனத் தெரியவில்லை. யாரோ ஒருவர் இந்த மீமை எனக்கு அனுப்பினார். நான் அதைப் பார்த்து சிரித்துவிட்டு, இதை உருவாக்கியவரைப் பாராட்டினேன். யாரேனும் உங்களை ஏளனம் செய்தால், நீங்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து தற்போது தான் ட்வீட்டுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் விவேக் ஓபராய். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ சில சமயங்களில் ஒரு விசயம் முதலில் பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களும் அதை வேடிக்கையாகவே எடுத்துக்கொள்ளமாட்டார்கள். கடந்த 10 வருடங்களாக நான் பாதிக்கப்பட்ட 2000 பெண்களுக்கு உதவி செய்துள்ளேன். நான் ஒருபோதும்  பெண்களை இழிவாக நினைத்தது கூட இல்லை. என் மீம் ஒரு பெண்ணுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் அதற்கான பரிகாரத்தைத் தேடுகிறேன். அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ட்வீட் நீக்கப்பட்டுவிட்டது’ எனப் பதிவிட்டுள்ளார்.