``கலீஸீயை விவரிக்க வார்த்தைகளைத் தேடுகிறேன்!" - எமிலியா க்ளார்க் உருக்கம் #GOT | Emilia Clarke posted a sentimental post

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (21/05/2019)

கடைசி தொடர்பு:17:26 (21/05/2019)

``கலீஸீயை விவரிக்க வார்த்தைகளைத் தேடுகிறேன்!" - எமிலியா க்ளார்க் உருக்கம் #GOT

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' டி.வி சீரிஸின் ஃபைனல் சீஸன் நேற்றோடு (20/5/19) முடிந்துவிட்டது. இதைத் தொடர்ந்து, டினேரியஸ் டார்கேரியனாக நடித்த எமிலியா க்ளார்க், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். 

எமிலியா க்ளார்க் - கேம் ஆஃப் த்ரோன்ஸ்

கேம் ஆஃப் த்ரோன்ஸில் அதுவரை 7 சீஸன்களில் வந்திருந்த நிலையில், 8-வது மற்றும் இறுதி சீஸன், கடந்த ஏப்ரல் 14-ல் இருந்து வெளியிடப்பட்டது. ரசிகர்கள் எதிர்பார்த்த மற்றும் பாராத பல மாற்றங்கள் நிகழ்ந்தன. திரையில் இதை வெறும் சீரிஸாகப் பார்த்தாலும் திரைக்குப் பின்னால் பார்க்கும்போது, இதில் நடித்த அனைவரும் ஒரு குடும்பமாகவே வாழ்ந்துவந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரம் பிடித்தமானதாக இருக்கும். இதில் இடம்பெற்ற சில கதாபாத்திரங்களின் பெயர்களைப் பிறந்த குழந்தைக்குப் பெயரிட்டு மகிழ்ந்தார்கள். அந்த அளவுக்கு வெறித்தனமான ரசிகர் பட்டாளம் இதற்கு இருந்தது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் முடிந்ததையடுத்து, பல ரசிகர்கள் உருக்கமாகப் பதிவிட்டுவருகிறார்கள். 

game of thrones

இந்நிலையில், அதில் பலருக்கும் பிடித்தமான கலீஸீ (எ) டினேரியஸ் டார்கேரியன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், "இதில் நான் நடித்த டேனி கதாபாத்திரத்தை விவரிக்க வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். டிராகன்களின் தாயாக நான் நடித்தது, என்னுடைய பருவ வயது முழுவதையும் எடுத்துக்கொண்டது. இந்தக் கதாபாத்திரம்தான் என் மனம் முழுவதும் நிறைந்திருக்கிறது. டிராகன்கள் உமிழும் தீயால் நான் வியர்வையில் நடித்து உழைத்திருக்கிறேன். சீக்கிரம் இந்தக் குடும்பத்திலிருந்து பிரிந்தவர்களை நினைத்து அழுதிருக்கிறேன். கலீஸீயாக நடிக்க நடக்க,  அவளைப் போல் இருக்க, என்னுடைய மூளையைப் பிழிந்தெடுத்தேன். 'எவ்வளவு தூரம் நாம் பறந்திருக்கிறோம் பார்' எனச் சொல்வதற்கு அப்பா என்னுடன் இருக்க நான் ஆசைப்படுகிறேன். என்னுடைய அன்பான ரசிகர்களுக்கு நன்றி சொல்ல என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். நாங்கள் என்ன செய்தோம், இந்தக் கதாபாத்திரத்தின்மூலம் நான் என்ன செய்தேன் என்பது ஏற்கெனவே ரசிகர்களின் இதயத்தில் வேரூன்றி நின்றுவிட்டது. எங்களுடைய பயணம் முடிந்துவிட்டது!" என்று உருக்கமாக போஸ்ட் பகிர்ந்துள்ளார் எமிலியா க்ளார்க்.