பிரீமியம் ஸ்டோரி

சந்தித்த நபர் தமிழருவி மணியன்
தலைவர், காந்திய மக்கள் இயக்கம்.

எட்டெட்டு!

''ஆஸ்திரேலிய தமிழ்ச் சங்க விழாவில், அதன் ஒருங்கிணைப்பாளரான பழனியப்பன் என்பவரைச் சந்தித்தேன். இஸ்ரோவில் விஞ்ஞானியாகப் பணியாற்றியவர், அங்கு நடக்கும் உள் அரசியலை வெறுத்து, பணியை ராஜினாமா செய்தாராம். நாமக்கல் பக்கத்தில் பிறந்தவர். இப்போது ஆஸ்திரேலியாவில் இருந்தாலும்கூட, சமீபத்தில் அவர் மகனுக்குத் தமிழ்ப் பெண்ணைப் பார்த்து திருமணம் செய்துவைத்திருக்கிறார். அவரை காந்திய மக்கள் இயக்கத்தின் முதல் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தேன். நல்ல தமிழரான அவரை நினைத்துப் பெருமிதம் அடைகிறேன்!''

பார்த்த படம் தேவிபாரதி, எழுத்தாளர்.

எட்டெட்டு!

''czech dream என்னும் ஆவணப் படத்தை Klusák, Remunda என்ற திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இருவர் இயக்கி இருக்கிறார்கள். ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு 'செக் ட்ரீம்’ எனப் பெயரிட்டு, பாதி விலையில் பொருட்களை விற்கப்போவதாக அறிவிக்கிறார்கள். குறிப்பிட்ட நாளில் ஆயிரக்கணக்கானோர் குவிய, 'நாங்கள் உங்களை ஏமாற்றினோம்!’ என்கிறார்கள். மக்கள் ஆவேசத்துடன் கேள்வி கேட்க, 'நாங்கள் மூன்று ஆயிரம் பேரைத்தான் ஏமாற்றினோம். ஆனால், 'செக் ட்ரீம்’ என்ற பெயரில் செக்கோஸ்லோவேகியாவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்க ஒரு கோடி மக்களை ஏமாற்றியதே அரசு, அதற்காக நீங்கள் ஏன் ஆத்திரப்படவில்லை?’ என்று பொட்டில் அறைந்ததுபோலக் கேட்கிறார்கள்!''

வாங்கிய பொருள்
ஸ்ரீதேவி, சின்னத் திரை நடிகை

எட்டெட்டு!

'' 'பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியலில் நடிக்க ஒப்பந்தமானேன். ரொம்ப முக்கியமான ரோலில் நடிப்பதால், நல்ல டிசைனர் சேலைகள் வாங்கினேன். என் மனசுக்குப் பிடிச்ச மாதிரி பார்த்துப் பார்த்து செலெக்ட் பண்ணேன். புடவை, அதுக்குப் பொருத்தமா நகைகள், செருப்புன்னு ஒருநாள் முழுக்க ஷாப்பிங்!''

கலந்துகொண்ட நிகழ்ச்சி
ரேவதி சண்முகம், சமையல் கலை நிபுணர்.

எட்டெட்டு!

''மலேசிய வாழ் தமிழர்கள், என் அப்பா கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளுக்கு மலேசியாவில் விழா எடுப்பது வழக்கம். ஆனா, இந்த முறை நம்ம ஊருக்கே வந்து அப்பாவுக்கு விழா எடுத்தாங்க. ஒவ்வொருத்தரும் அவ்வளவு அழகாத் தமிழ் பேசுறாங்க. நிகழ்ச்சியின் முடிவில் நடந்த இசைக் கச்சேரியில் அப்பா எழுதிய ஒவ்வொரு பாடலின் நாலு வரிகளை மட்டும் பாடி, பாடலுக்கான அர்த்தமும் சொன்னாங்க. அப்பாவின் நினைவுகளில் நெகிழ்ந்துவிட்டேன்!''

பாதித்த சம்பவம் சீனு ராமசாமி, இயக்குநர்.

எட்டெட்டு!

''நான் வேலை இல்லாமல் இருந்த சமயம்... மதுரையில் எங்க வீட்டுக்குப் போயிருந்தேன். வீடு பூட்டிக்கிடந்துச்சு. எப்பவுமே என் அம்மா கோவிந்தம்மா சாவியை ஓர் இடத்தில் வைக்கும். கதவைத் திறந்து உள்ளே போயிட்டேன். 'உங்க ஆத்தா திருச்செந்தூருக்கு பாத யாத்திரை போயிருக்கு’ன்னு பக்கத்து வீட்ல சொன்னாங்க. எனக்குத் தெரியாதா என் அம்மா எதுக்குப் போயிருக்குன்னு? பாரமான மனசோடு படுத்துட்டேன். காலையில் எழுந்து பார்த்தா, வீங்கின காலோடு அம்மா என் பக்கத்தில் படுத்திருக்கு. நான் கண்ணு முழிச்சதும், ஒரு கறுப்புக் கயிறை என் கையில் கட்டிவிட்டுச்சு. என்னை அறியாமலேயே கரகரன்னு அழுதுட்டேன். 'விடுறா சீனி... விழுந்தவன் எழுந்திரிக்குறது இல்லையா?’ன்னுச்சு. அன்னிக்கு மதுரையைவிட்டுக் கிளம்பினவன்தான், மறுபடியும் 'தென்மேற்குப் பருவக்காற்று’ ப்ரிவியூவில்தான் அம்மாவைப் பார்த்தேன். அம்மா முகத்துல அவ்வளவு பூரிப்பு!''

சென்ற இடம் ஊர்மிளா சத்தியநாராயணன்
நடனக் கலைஞர்.

எட்டெட்டு!

''என் தோழியின் குடும்பத்துடன் சேர்ந்து மசனக்குடி காட்டுக்குப் போயிருந்தோம். மைசூருக்கும் ஊட்டிக்கும் நடுவில் இருக்கும் அழகான இடம். 'டீ, காபி, சிப்ஸ் எதுவும் கொண்டுசெல்லக் கூடாது. நிறையப் பாம்பு வரும்’னு பயமுறுத்திட்டாங்க. இருட்டுக்குள் டார்ச் லைட் அடிச்சுட்டே நடக்கும்போது, பயங்கர சத்தம். 'யானை வருது. சத்தம் போடாதீங்க’ன்னு கூட வந்தவர் சொன்னார். 'புலியா இருந்தாலும் இருக்கும்’னு அவர் மேற்கொண்டு சொல்ல, எனக்கு வெடவெடங்குது. ஒரு வழியா, பத்திரமாத் திரும்பி வந்தோம். இப்ப அதை நினைச்சாலும், உடம்புக்குள் ஒரு நடுக்கம் பரவுது!''

கேட்ட இசை அசோக் ரமணி,
கர்னாடக இசைக் கலைஞர்.

எட்டெட்டு!

''இந்த மியூஸிக் சீஸனில் கலாஷேத்ரா கச்சேரியில் பாம்பே ஜெயஸ்ரீ பாட்டு கேட்டேன். பூர்வகல்யாணி ராகத்தில் 'நின்னு வினா’ என்ற சியாமா சாஸ்திரிகள் இயற்றிய கீர்த்தனை, கீரவாணி ராகத்தில் அமைந்த 'கலிகியுண்டே’ பாடல் பாடினப்போ மனசுக்குள் தென்றல். பாபநாசம் சிவன், ருக்மணி அருண்டேல் போன்ற மேதைகள் நடமாடின கலாஷேத்ராவில், அவ்வளவு அற்புதமான இசையைக் கேட்டது ஒரு தெய்விக அனுபவம்!''

படித்த புத்தகம்
பாரதி பாஸ்கர், பேச்சாளர்.

எட்டெட்டு!

''சந்தியா பதிப்பக வெளியீடான 'மகாகவி பாரதியார்’ என்ற புத்தகம். அதை எழுதியிருக்கும் வ.ரா. என்கிற வ.ராமசாமி, பாரதியின் நண்பர். ஒரு முறை, காந்தி தமிழகத்துக்கு வந்தபோது, அவரைத் தான் நடத்தும் கூட்டத்துக்கு அழைக்க வருகிறார் பாரதி. காந்தி தனக்கு வேலை இருக்கிறது என்று சொல்லிவிட, 'பரவாயில்லை, நீங்கள் வராவிட்டாலும் கூட்டம் நடக்கும்’ என்று சொல்லிச் செல்கிறார் பாரதி. அவர் சென்ற பின், ராஜாஜியிடம் காந்தி சொல்கிறார், 'இவரை நாம் பாதுகாக்க வேண்டும்’ என்று. இப்படிப் புத்தகம் முழுக்கப் பல அறியாத சங்கதிகள்... சம்பவங்கள்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு