Published:Updated:

எங்கேயும் எப்போதும் காதலிக்கலாம்!

கி.கார்த்திகேயன்

##~##

''ஆதி மனிதன் முதன்முதலில் சூரிய கிரகணத்தைப் பார்த்துவிட்டு ஏதோ 'பில்லி சூனியம்’ என்று மிரண்டதைப் போல, முதல்முறை காதல் தாக்கும்போதும் ஒவ்வொரு மனிதனும் மிரள்கிறான். மனிதனின் கனவுகளைப் பற்றியும் அலசி ஆராய்ந்து உண்மை சொன்ன மனோதத்துவ நிபுணரான சிக்மண்ட் ஃப்ராய்டு தனது மரணப் படுக்கையில் 'நமக்கு காதலைப் பற்றி மிக மிகக் குறைந்த அளவே தெரியும்’ என்று ஒப்புக்கொள்ளும் அளவுக்குத் தண்ணி காட்டிய வஸ்து காதல். ஆனால், 21 நூற்றாண்டைக் கடந்து மனிதன் நடைபோட்டுக்கொண்டு இருக்கும்போது, காதல் நிச்சயமாக சரிவிகித சமானத்தில் கணக்கிடப்பட்ட ஒரு வேதியியல், உயிரியல் வினைகள் அடங்கிய ஒரு மனோதத்துவவியல் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை (கொஞ்சம் பில்லி சூனியமும் கலந்ததுதான்!).'  

 இப்படி ஆணித்தரமாக, ஆதாரப்பூர்வமாக ஹவ் டு மேக் எனி ஒன் ஃபால் இன் லவ் வித் யு’ (How to make anyone fall in love with you) புத்தகத்தை ஆரம்பிக்கும் லெய்ல் லவுண்டஸ், கையில் இருக்கும் காசுக்கு ஏற்ற வாறு நமது ஷாப்பிங் பட்டியலைக் கணக்கிடுவதுபோலத் தெளிவாகத் திட்டமிட்டால், உங்கள் 'காதல் வலை’யில் எவரையும் சிக்கவைக்கலாம் என்று சவால்விட்டுக் கூறுகிறார்! அதற்கு 85 நிரூபிக்கப்பட்ட சம்பவங்களையும் விளக்கும் புத்தகத்தில் இருந்து இங்கே கொஞ்சம்...

எங்கேயும் எப்போதும் காதலிக்கலாம்!

பார்த்த முதல் நாளே...

ஏன், எதற்கு என்று தெரியாது? சிலரைப் பார்த்த முதல் நாளே... முதல் நொடியே பிடித்துவிடும். ஓர் உதாரணம்... 1924-ம் வருடத்தின் ஒரு நாளில் ஹில்டன் க்ரூப் ஆஃப் ஹோட்டல்களின் நிறுவனரான கோன்ராட் ஹில்டன், தேவாலயத்தில் தனக்கு ஐந்து வரிசைகள் முன்னர் ஒரு சிவப்புத் தொப்பியைக் கண்டார். பிரார்த்தனை முடிந்த பிறகு அந்த சிவப்புத் தொப்பியைப் பின்தொடர்ந்து சென்று அந்தத் தொப்பியை அணிந்திருந்த பெண்ணை மணந்துகொண்டார். முகத்தைக்கூடப் பார்க்கா மலேயே சிவப்புத் தொப்பி அணிந்திருந்ததாலேயே, ஒரு பெண்ணைப் பிடிக்குமா என்ன?

'பிடித்திருக்கிறதே. காரணம், லவ் மேப்!’ என்கிறார் டாக்டர் ஜான். ''மனிதனோ, மானோ ஒவ்வோர் உயிரினத்துக்கும் எதிராளி மீதான ஈர்ப்பைத் தூண்டிவிடும் சங்கதிகள் அவற்றுக்கு உள்ளேயே பொதிந்து இருக்கின்றன'' என்கிறார் ஜான். சிறு வயது முதல் வளர்ந்த சூழல், எதிர்கொண்ட அனுபவங்கள் ஆகியவை ஒவ்வொரு மனிதனின் மூளையிலும் எங்கோ ஒரு மடிப்பில் சந்தோஷமாகவோ, சோகமாகவோ ஆழமாகப் புதைந்து இருக்கின்றன. அப்படியான நினைவுப் பதிவுகள்தான் ஒவ்வொருவரின் 'லவ் மேப்’பையும் தீர்மானிக்கின்றன. விரல் ரேகை, கையெழுத்துபோல அந்த லவ் மேப் ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமாக வேறுபடும். அதுதான் சிலரைப் பார்த்ததுமே அல்லது அருகில் உணர்ந்ததுமே அவர்கள் மீது அன்பு பொங்கிப் பெருகுகிறது. டீச்சரின் கன்னம் குழியும் சிரிப்பு, பள்ளித் தோழியின் புருவம் குவியும் நலம் விசாரிப்பு, அப்பாவின் 'சொல்லுடா செல்லம்’ என்ற அக்கறை ஆகியவற்றை எங்கேயோ, எப்போதோ, யாரிடமோ உணரும்போது... 'பார்த்த முதல் நாளே’ என்று லல்லல்லா பாடத் தொடங்கிவிடுகிறோம்! இது போன்ற பிரேமைதான் 'சிவப்புத் தொப்பி’ பின்னால் ஹில்டனைச் செல்லத் தூண்டி இருக்கிறது. இந்த லவ் மேப்பில், சமயங்களில் நெகட்டிவ் பதிவுகளும் அச்சேறிவிடும். அதனாலேயே சிலரை நமக்குக் காரணம் இன்றிப் பிடிக்காமல்போவதும் உண்டு.

ஆனால், இந்த லவ் மேப் என்பது காரின் பேட்டரி போலத்தான். திடுக்கென்று தீப்பொறி யைக் கிளப்பி இன்ஜினை உசுப்பப் பயன்படும். அதன் பிறகு, ஆயுள் முழுக்க நீடிக்கும் பயணத் துக்கான எரிபொருளை நீங்கள்தான் நிரப்பிக் கொள்ள வேண்டும்!

ஒரு வார்த்தை பேச...

சில வார்த்தைகளின் தவறான பிரயோகத்தால் காதலன் சீண்டப்படும் அபாயம் இருப்பதால், காதலி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். பூங்காவில் அமர்ந்து ரிலாக்ஸாக உரையாடும்போது, ''என் செல்போன்ல உனக்குனு ஸ்பெஷலா ரிங்டோன் வெச்சுக்க முடியலை. என்னவோ பிரச்னை... உன்னால சரிபண்ண முடியுமா பாரேன்!'' என்று காதலி கேட்டால், கொஞ்சமும் யோசிக்காமல் ''ஓ... நிச்சயமா!'' என்றபடி எந்தக் காதலனும் செல்போனை ஆராயத் தொடங்குவான். அப்போது அவனால் சரிபண்ணக் கூடிய பிரச்னையாக அது இருந்துவிட்டால், பிரச்னை இல்லை. ஆனால், அவனால் சரி பண்ண முடியாவிட்டால், அங்கே இருக்கிறது ஆபத்து!  

ஏனெனில், ''உன்னால சரிபண்ண முடியுமா பாரேன்'' என்று ஒரு பெண் கேட்டால், அது ஒரு ஆணின் 'போட்டி மனப்பான்மை’ ஈகோவைச் சீண்டிவிடும். 'உன்னால் முடியுமா?’ என்று அவள் சந்தேகமாகக் கேட்ட ஒரு காரியம், தன்னால் முடியாதபோது உண்டாகும் கோபம், மறைமுகமாகக் காதலி மேல்தான் திரும்பும். அதுவே, ''செல்போன்ல என்னவோ பிரச்னை... கொஞ்சம் சரிபண்ணிக் கொடு!'' என்று கேட்டு

எங்கேயும் எப்போதும் காதலிக்கலாம்!

இருந்தால்... அது எப்படி இருந்திருக்கும்! ''இவள் நம்மை நம்புகிறாள்'' என்று அதே ஈகோ பாசிட்டிவாகச் சிலிர்த்துக்கொள்ளும். ''சரிபண்ண முடியுமா?'' என்பதற்கும் ''சரிபண்ணிக் கொடு!'' என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்துகொண்டீர்களா?

ஆண்களுக்கு இந்த அளவுக்குச் சிக்கல் இல்லை. அவர்கள் என்ன தவறு செய்திருந்தாலும் (சமயங்களில் தவறே செய்திருக்காவிட்டாலும்!) ''என்னை மன்னிச்சிரு!'' என்று இரண்டு வார்த்தைகள் மூலம் எந்தவொரு சிக்க லான சூழ்நிலையையும் சமாளித்துவிடுவார் கள்.

மிகவும் சிம்பிள்... இரண்டே வார்த்தைகள்... 'என்னை மன்னிச் சிரு!’ பெண்கள் அடிக்கடி தேவை இல்லாத சமயங்களில், 'என்னை மன்னிச்சிரு’ என்று ஜபித்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால், ஆண்கள் தேவைப்படும் சமயங்களில்கூட அந்த இரண்டு வார்த்தைகளை மறந்தும் உச்சரிக்க மாட்டார்கள். அதுதான் பிரச்னை!  

அடுத்த கட்டுரைக்கு