கமலுக்கு மட்டுமல்ல, கமல் ரசிகர்களுக்கும் கிரேஸி மோகன் மீது கிரேஸ்தான்! | Fans will miss the Kamal Crazy Mohan combination

வெளியிடப்பட்ட நேரம்: 20:46 (11/06/2019)

கடைசி தொடர்பு:20:46 (11/06/2019)

கமலுக்கு மட்டுமல்ல, கமல் ரசிகர்களுக்கும் கிரேஸி மோகன் மீது கிரேஸ்தான்!

அந்த வெற்றிக்குப்பின்னர், கமல் - கிரேஸி மோகன் கூட்டணி பல படங்களுக்கும் தொடர்ந்தது. குறிப்பாக, கமல், கனமான சீரியஸ் கதாபாத்திரத்தையேற்று நடிக்கும் படம் வெளியான பின்னர், அடுத்து இன்னொரு சீரியஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னர், இடைப்பட்ட காலத்தில் தனது ரசிகர்களைக் குஷிப்படுத்துவதற்காக கிரேஸி மோகன் வசனத்தில் ஒரு நகைச்சுவைப் படத்தைக் கொடுப்பதை வழக்கமாக்கிக்கொண்டார்.

கமலுக்கு மட்டுமல்ல, கமல் ரசிகர்களுக்கும் கிரேஸி மோகன் மீது கிரேஸ்தான்!

`நாயகன்' படத்தில் நடித்த பிறகு காதல் மன்னனாக நடிப்பதைக் குறைத்துக்கொண்டு, தனது நடிப்புத் திறனுக்குத் தீனி போடும் படங்களில் தீவிர கவனம் செலுத்தத்தொடங்கினார் கமல்ஹாசன். உன்னால் முடியும் தம்பி, சத்யா ஆகிய படங்களில் சமூகப் பொறுப்புள்ள இளைஞராக நடித்திருந்தார். அந்தப் படங்கள் கமர்ஷியலாக வெற்றிபெற்றாலும், நகைச்சுவை விரும்பியான கமல், தனது ரசிகர்களைக் குஷிப்படுத்துவதற்காக நகைச்சுவையுடன்கூடிய நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் விதத்தில் `அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நடித்தார். அதில் கமலோடு இணைந்து வசனம் எழுதியவர் கிரேஸி மோகன். குள்ள அப்பு கதாபாத்திரம் அனைவரையும் ஈர்த்து, பிரமாண்ட வெற்றிபெற்றது.

கமல்

டெல்லி கணேஷை, அப்பு கமல் பழிவாங்கும் காட்சியில், ``போடா குள்ளா, என்ன மெரட்டுறியா? மொளச்சு மூணு இலை விடல" என டெல்லிகணேஷ் அப்புவை கிண்டலாகக் கூற, அதற்கு அப்பு கமல், ``நான் இன்னும் மொளைக்கவே இல்லப்பா, அதான் விஷத்த குடுத்துட்டீங்களே!" என நகைச்சுவை கலந்து ஆதங்கத்துடன் தனது நிலையைக் கூறுவார். இப்படி அந்தப் படம் முழுக்க வசனத்தால் ரசிகர்களை வசப்படுத்தியவர் கிரேஸி மோகன்.

இதற்குப் பிறகு, கமல் - கிரேஸி கூட்டணி பல படங்களிலும் அமைந்தது. தொடர்ந்து கனமான சீரியஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் கமல், இடையிடையே கிரேஸி மோகன் வசனத்தில் நகைச்சுவை படத்திலும் நடித்து தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்தினார். ரசிகர்கள் தங்கள் மனதை ரிலாக்ஸ் செய்துகொள்ள, கிரேஸி மோகனின் வசனங்கள் பெரிதும் உதவின.

வெற்றி விழா, இந்திரன் சந்திரன் போன்ற படங்களுக்குப் பிறகு மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் கமலோடு இணைந்து கிரேஸி மோகன் வசனம் எழுதியிருந்தார். மொத்தம் நான்கு கமல் கதாபாத்திரங்கள், வெவ்வேறு சூழல்களில் வளர்ந்து, சந்தர்ப்பசூழலால்  ஒருவரையொருவர் சந்தித்து, ஆள்மாறாட்டமெல்லாம் செய்து, படம் முழுக்க கலாட்டாவாகவே செல்லும். அப்படத்தில் ``பீம்பாய்... பீம்பாய்! அந்த லாக்கர்லருந்து ஆறு லட்சத்த எடுத்து இந்த அவினாசி மூஞ்சில விட்டெறி" வசனம் ஃபேமஸான ஒன்று. மகாநதி படத்தில் மிகவும் கனமான கதாபாத்திரத்தில் நடித்து தன் ரசிகர்களை இறுக்கமான மனநிலைக்குக் கொண்டு சென்ற கமல், மகளிர் மட்டும் படத்தில் கிரேஸி மோகன் வசனத்தில் ரசிகர்களைக் குதூகலப்படுத்தினார்.

கிரேஸி மோகன்

நம்மவர் படத்தில் பொறுப்பான கல்லூரிப் பேராசிரியராக நடித்த கமல், அடுத்து இவரின் வசனத்தில் சதிலீலாவதி படத்தில் கோவையைச் சேர்ந்த மருத்துவராக நடித்தார். அந்தப் படத்தில் கோவை சரளாவுக்கு ஜோடியாக கமல் ஏற்றிருந்த பாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. குருதிப்புனல், இந்தியன் போன்ற படங்களில் சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்த பின்னர், அவ்வை சண்முகி படத்தில் பெண் வேடத்தில் நடித்து ரசிகர்களுக்கு புது விருந்தளித்தார். `இந்தியன் படத்தில் சுஜாதாதான் வசனம் எழுதினார். பலரும் நான் வசனம் எழுதியதாகத் தவறாகப் புரிந்துகொண்டனர்' என்று கிரேஸி மோகன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அவ்வை சண்முகி படத்தில் டெல்லி கணேஷைத் தெளியவைத்து அடிப்பது, முதலியார் மணிவண்ணனும், ஜெமினி கணேசனும் சண்முகி மாமி மீது காதல்கொண்டு பேசும் வசனமெல்லாம் வயிறு குலுங்கவைக்கும். 

கமல்

இந்திய அளவில் கமலுக்குப் பெருமை தேடித்தந்த ஹேராம் படத்துக்குப் பின் வெளிவந்த தெனாலி, ஆளவந்தான் படத்துக்குப் பின் வெளிவந்த பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், விருமாண்டி படத்துக்குப் பின் வசூல்ராஜா எம்பிபிஎஸ் என, கமல் ரசிகர்களைக் குஷிப்படுத்தும் பணியைத் தொடர்ந்து செய்துவந்தவர் கிரேஸி மோகன். கமல் - கிரேஸி மோகன், இருவருக்குமான நகைச்சுவை உணர்வு, புரிதலான நட்புமே இவற்றை சாத்தியமாக்கின எனலாம். எனவே, கிரேஸி மோகனின் இழப்பு, கமலை மட்டுமல்லாமல் கமல் ரசிகர்களையும் வெகுவாக பாதித்துள்ளது.


டிரெண்டிங் @ விகடன்