Published:Updated:

ஒவ்வொரு வீட்டிலும்... ஒரு சேரி!

பாரதி தம்பி

பிரீமியம் ஸ்டோரி
##~##
துக்கப்படும் தலித் மக்களைப்போலவே, 'அம்பேத்கர்’ திரைப்படமும் பெரும்பான்மை மக்களிடம் சென்று சேராமல் ஒதுக்கப்படுகிறது. ஆபாசப் படங்களைக் கூச்சமின்றித் திரையிடும் தியேட்டர்கள்கூட 'அம்பேத்கர்’ படத்தை வெளியிட மறுக்கின்றன. இதற்கு எதிராக 'அம்பேத்கர்’ படத்தைப் பரவலாக்கும் முயற்சியில் முனைப்புடன் இறங்கியிருக்கிறது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம். ஏற்கெனவே 'தெரு சினிமா இயக்கம்’ தொடங்கி, சர்வதேசத் திரைப்படங்களைச் சாதாரண மக்களிடம் கொண்டுசேர்க்கும் வேலையையும் செய்துவரும் இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளரும், எழுத்தாளருமான ச.தமிழ்ச்செல்வனைச் சந்தித்தேன்.

'' 'அம்பேத்கர்’ படம் தந்த அனுபவங்கள் என்ன?''

ஒவ்வொரு வீட்டிலும்... ஒரு சேரி!

''தமிழ்நாடு அரசு இந்தப் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கும்,

ஒவ்வொரு வீட்டிலும்... ஒரு சேரி!

10 லட்ச ரூபாய் மானியமும் வழங்கி இருக்கிறது. இது பாராட்டப்பட வேண்டியது. ஆனால், அத்துடன் தன் கடமை முடிந்ததாக ஒதுங்கிக்கொண்டது தவறு. 'காந்தி’, 'பாரதி’, 'பெரியார்’ படங்களை மக்கள் பார்ப்பதற்கு அரசே முயற்சி எடுத்தது. 'அம்பேத்கர்’ படத்துக்கும் அப்படிச் செய்ய வேண்டும். மறுபுறம் 'அம்பேத்கர்’ படத்தைத் திரையிட தியேட்டர் உரிமையாளர் களே தயங்கி, மறுக்கின்றனர். 'இது ஒரு சாதிப் படம்’ என்பது அவர் களின் எண்ணம். பொதுவான படம் என்பதுபோன்ற பாவனையுடன் வெளிவருபவை எல்லாம் எத்தனை அழுத்தமாக சாதிப் பெருமை பேசுகின்றன? யாரிடமும் இலவச மாகக் கேட்கவில்லை. உரிய கட்டணத்தை செலுத்தித்தான் தியேட்டர் கேட்கிறோம். அப்படியும் தர மறுக்கின்றனர். சமூகத்தில் தலித்துகளுக்கு என்ன மரியாதை இருக்கிறதோ, அதே மரியாதைதான் அம்பேத்கரின் படத்துக்கும் இருக்கிறது!''

'' 'தெரு சினிமா இயக்கம்’ எந்த அளவுக்கு இருக்கிறது?''

''ஒரு சொஸைட்டி ஏற்படுத்தி, அதன் மூலம் மக்களிடம் நல்ல சினிமாவைக் கொண்டுசேர்க்கும் முயற்சி இது. கேரளாவில் இப்படித் தொடங்கப்பட்ட 'சூர்யா ஃபிலிம் சொஸைட்டி’தான் இன்று உலகத் திரைப்பட ழாவை நடத்துகிறது. இதுவரை 50 சொஸைட்டி கள் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளன. 500 சொஸைட்டிகளை நோக்கி நகர்கிறோம். தற்போதைய நிலையில், நல்ல சினிமா எடுத்தால்கூட, அதைத் திரையிட தியேட்டர் கள் கிடைப்பது இல்லை. மதுரையில் 20 தியேட்டர்கள் ஒரே நபரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர் வேறு ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். 'ரெட் ஜெயன்ட்’, 'கிளவுட் நைன்’ போன்ற நிறுவனங்கள், ஒரு மாதத்துக்கு ஒரு படத்தை வெளியிட்டுக்கொண்டே இருக்கின்றன. அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தியேட்டர்களில் மற்றவர்களின் திரைப்படங்களை வெளியிட முடியாத நிலை நீடிக்கிறது. இதனால், பல தயாரிப்பாளர்கள் சினிமாவைவிட்டே ஓட வேண்டிய நெருக்கடி நிலை. அல்லது, தாங்கள் எடுத்த படத்தை அடிமாட்டு விலைக்கு இவர்களிடம் விற்றாக வேண்டும்!''

ஒவ்வொரு வீட்டிலும்... ஒரு சேரி!

''அது சரி, உங்களை மாதிரியான கலை, இலக்கிய அமைப்புகள் எல்லாம் சினிமாவை நோக்கி நகர்வது ஆரோக்கியமானதா?''

''எங்களின் முழு நேர வேலைத் திட்டம் சினிமா அல்ல. நாட்டுப்புறக் கலைகளின் வளர்ச்சி, அழிந்த கலைகளை மீட்டு எடுப்பது என்பதை நோக்கியும் நாங்கள்தான் செயல்படுகிறோம். நாட்டுப்புறக் கலைகளுக்கு இன்று உள்ள பிரச்னை, அதன் மூலம் எந்த வருமானமும் கிடைப்பது இல்லை என்பதுதான். முதல்வருக்கு நடத்தப்படும் பாராட்டு விழாக்களில்கூட சினிமா நடிகைகள்தான் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். நான் ஒருமுறை பரிசு வாங்குவதற்காக ஒரு விழா வுக்குச் சென்றபோது, இரண்டு மணி நேரம் டான்ஸ் ஆடிவிட்டு 20 நிமிடங்களில் பரிசளிப்பு விழாவை முடித்துவிட்டார்கள். நாட்டுப்புறக் கலைகளுக்கும் இன்று தீண்டாமை நிலவுகிறது!''

''சமூக அக்கறையுள்ள ஆயிரக்கணக்கான புதிய இளைஞர்கள் ஈழப் போராட்டத்தை ஒட்டிப் போராட வந்தபோது, அவர்களை எந்த இயக்கமும் அரசியல்படுத்தவில்லையே?''

''சமீப கால வரலாற்றில் மிக அதிகமாகக் குழப்பப்பட்டது ஈழ விவகாரம்தான். கூர்மையான அரசியல் பார்வை இல்லை என்றாலும், 'அநீதிக்கு எதிரான மனநிலை’ என்ற அளவில், கணக்கில் அடங்காத புதிய இளைஞர்கள் வந்தார்கள். ஆனால், இயக்கங்களுக்குள் இருந்த குழப்பம் அவர்களையும் பிரித்துப்போட்டுவிட்டது. 'ஐந்தாம் கட்ட ஈழப் போர் வெடிக்கும்’ என்று பேசி உசுப்பேற்றுவதில் என்ன அரசியல் பார்வை இருக்க முடியும்? இப்படிப் பேசுவதால் அங்கு இலங்கை அரசின் கண்காணிப்பின் கீழ் வாழும் மக்களுக்கு மேற்கொண்டும் துன்பம்தான் வரும்!''

'' 'ஆண்கள் சமைத்தல் அதனினும் இனிது’ புத்தகம் எழுதிய நீங்கள், ஆண்களுக்கான சமையல் பட்டறைகள் நடத்தினீர்கள். அந்த முயற்சியைத் தொடரவில்லையே?''

ஒவ்வொரு வீட்டிலும்... ஒரு சேரி!

''நிச்சயம் செய்ய வேண்டும். 'நச்சரிக்கும் வீட்டு வேலைகளில் இருந்து பெண்களுக்கு விடுதலை இல்லாமல், மனிதகுல விடுதலை சாத்தியம் இல்லை’ என்று லெனின் சொன்னது முழு உண்மை. தம் வீட்டு ஆண்கள் வீட்டு வேலை செய்யாமல், தன்னை அதிகாரம் செய்வதுதான் தனக்குப் பெருமை எனப் பெண் களே நினைக்கின்றனர். 'என் பொண்டாட்டியே என்னை வீட்டு வேலை செய்ய வேண்டாம்கிறா’ என ஆண்கள் தப்பித்துக்கொள்கின்றனர். 'Fear of freedom’ எனச் சொல்வார்கள். சுதந்திரமாக இருக்க அச்சப்படும் இந்த நிலையில் இருந்து நமது பெண்களை மீட்டெடுக்க வேண்டும். நமது குழந்தைகள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், சிறு வயதில் இருந்தே அவர்களுக்குச் சமையல் வேலைகளையும் பழக்க வேண்டும். ஆண்களில் பலர் சமையல் அறைக்குள் நுழை வதையே தீட்டுப்போல நினைக்கின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சேரி இருக்கிறது. அதன் பெயர் சமையல்அறை!''

படங்கள் : வி.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு