Published:Updated:

இறுதிவரை தோள் கொடுப்போம்!

பாரதி தம்பி

பிரீமியம் ஸ்டோரி
##~##
வர்கள் கழுதையின் மீது 'மாவட்ட ஆட்சித் தலைவர்’ என எழுதி ஒட்டி மனு கொடுத்தார்கள். பாலாற்றில் மணல் திருடிய லாரிகளை இரவு நேரத்தில் விரட்டிப் பிடித்தார்கள். அரிசி ஆலைகளிலும், செங்கல் சூளைகளிலும் கொத்தடிமைகளாக இருந்த நூற்றுக்கணக்கான இருளர் பழங்குடிகளை மீட்டார்கள். சங்கர் ராமனைக் கொலை செய்த வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது, பறையடித்து ஊர்வலம் போனார்கள். கோயில் கருவறையில் சல்லாபம் நடத்திய அர்ச்சகர் தேவ நாதனைக் கோர்ட்டில் வைத்து விளக்குமாற்றால் அடித்தார்கள். அவர்கள், காஞ்சிபுரம் 'மக்கள் மன்றம்’ அமைப்பினர்!
இறுதிவரை தோள் கொடுப்போம்!

மனித உரிமைக்கும், சமூக நீதிக்கும் ஆதரவான போராட்டங்களில் துணிச்சலுடன் தொடர்ந்து பங்கேற்று வரும் மக்கள் மன்றம் அமைப்பின் ஆரம்பம், மகேஷ் -ஜெஸ்ஸி என்ற இரண்டு பெண்களின் நட்புப் புள்ளியில் தொடங்குகிறது. இன்று அவர்களுக்கு முப்பதைக் கடந்த வயது. இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை. காஞ்சிபுரம் அருகே இருக்கும் கீழ்கதிர்ப்பூர் என்ற சிறு கிராமத்தில், தங்களால் மீட்கப் பட்ட இருளர் மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர்.

''மகேஷ் தோழர், உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க!'' என்று குரல் கொடுக்கும் சிறு பையனின் வயது ஏழோ, எட்டோ இருக்கலாம். இங்கு குழந்தைகள்கூட வயது பேதம் இன்றி மற்றவர்களை 'தோழர்’ என்றே அழைக்கின்றனர். எளிய உழைக்கும் பெண்ணின் தோற்றத்தில் இருக் கும் மகேஷ் பேசத் தொடங்குகிறார். ''புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் என்ற சின்ன கிராமம் என் சொந்த ஊர். மின்சார வசதியோ, பேருந்து வசதியோகூட இல்லாத குக்கிராமம். அப்பா ஒரு கம்யூனிஸ்ட். அதனால், இயல்பாகவே நானும் சமூக அக்கறையோடு வளர்ந்தேன். காஞ்சிபுரத்தில் ஸ்கூல் படிச்சப்போ இந்த ஈடுபாடு இன்னும் அதிகமாச்சு. அந்த சமயத்தில் திருச்சி கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த ஜெஸ்ஸியின் அறிமுகம் கிடைச்சுது. கண்ணுக்கு நேரா ஒரு தப்பு நடக்கும்போது 'எனக்கென்ன?’ன்னு ஒதுங்கிப்போகாத இயல்பு எங்க

இறுதிவரை தோள் கொடுப்போம்!

ரெண்டு பேரையும் ஒண்ணு சேர்த்துச்சு. காஞ்சிபுரத்தில் சேர்ந்து வேலை பார்க்க ஆரம்பிச்சோம். எங்க கண்ணுக்குத் தெரிஞ்ச எந்த ஒரு தப்பையும் மக்களோடு சேர்ந்து தட்டிக் கேட்க ஆரம்பிச்சோம். அப்படி உருவான அமைப்புதான் 'மக்கள் மன்றம்’!

அந்தச் சமயத்தில் கேட்குறதுக்கு நாதியற்றவங்களா, எல்லோராலும் கைவிடப்பட்ட வங்களா இருந்தவங்க இருளர்கள். பழங்குடி மக்களான அவங்களை இந்தப் பகுதியில் அரிசி ஆலைகள், செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளா வெச்சிருந்தாங்க. தங்களுக்குன்னு சொந்த அரசியல் அமைப்போ, படிப்பறிவோ இல்லாத இருளர்கள் தாங்கள் அடிமையா இருக்குறது தெரியாமலேயே அடிமைப்பட்டுக்கிடந்தாங்க. ஒவ்வொரு ஊராப் போய் கணக்கெடுத்து, பல கட்டமா போராடி 42 இருளர் குடும்பங்களை மீட்டோம். இப்போ இங்கே இருக்குறவங்க எல்லாமே முன்னாடி கொத்தடிமைகளா இருந்தவங்கதான். இவங்களைத் தவிர ஓரிக்கை, நத்தப்பேட்டை, கம்மராஜபுரம்... இப்படி சுத்தியுள்ள கிராமங்களில் இருந்த இருளர்களுக்கு வீடு, ரேஷன் கார்டு, சாதிச் சான்றிதழ்னு எதுவுமே கிடையாது. பல தடவை மனு கொடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. 'மக்களுடைய வரிப் பணத்தில் தின்று கொழுக் கும் பன்றிகளை ஒழித்துக்கட்டுவோம்’னு போஸ்டர் போட்டோம். உடனே, எங்க மேல தேசத் துரோக வழக்கு பாய்ந்தது.

அப்போ பிரதீப் யாதவ்னு ஒரு கலெக்டர் இருந்தார். அவர்கிட்ட பட்டா கேட்டு மனுகொடுக்கப் போனா, அசட்டையா கால் ஆட்டிக்கிட்டே 'காஸ்ட்லியான நிலத்தை எல்லாம் ஏழைகளுக்குத் தர முடியாது’ன்னு எகத்தாளமா பதில் சொன்னார். பல தடவை மனு கொடுத்து அலுத்துப்போய், கழுதை மேல் 'மாவட்ட ஆட்சியர்’னு எழுதி அந்த கலெக்டர் முன்னாடியே நிக்கவெச்சு மனு கொடுத்தோம். உடனே, அதுக்கும் தேசத் துரோக வழக்குப் போட்டு எங்களை உள்ளே தள்ளினாங்க. வெளியில் வந்து வேறொரு பிரச்னைக்காக அதே கலெக்டரிடம் மனு கொடுக்கப் போனோம். 'பிளடி பாஸ்டர்ட்ஸ்’னு திட்டினார். 'தேவடியா மக்களே எனத் திட்டும் கலெக்டர்’னு போஸ்டர் அடிச்சு ஒட்டினோம். இப்படி சமரசம் செஞ்சுக்காம நாங்க போராடிய விதம் மக்களுக்குப் பிடித்துப்போனது. தானா வந்து மக்கள் மன்றத்தில் இணைய ஆரம்பிச்சாங்க. 'இவங்க வந்தா தொடர்ந்து நெருக்கடி கொடுப்பாங்க. எல்லாத்தையும் மக்கள்கிட்ட அம்பலப்படுத்துவாங்க’ங்கற பயம் அதிகாரிகள் மத்தியில் உருவானது. வழக்கு, சிறை, அடக்குமுறை இதுக்கெல்லாம் நாங்க பயப்படலை என்பது தெரிஞ்சதும், எங்க மக்கள் மேல் வழக்குப் போட்டு கொடுமைப்படுத்தத் தொடங்கினாங்க. வரிசையா ஏழெட்டு வழக்கு போட்டு கோர்ட், வாய்தான்னு இன்னமும் அலைஞ்சுக்கிட்டுதான் இருக்கோம். ஆனால், எந்தக் காரணத்துக்காகவும் போராடும் மக்களைப் பலி கொடுத்து சமரசம் செஞ்சுக்கிட்டது இல்லை!'' என்கிற மகேஷ§க் குச் சமீபத்தில்தான் கேன்சர் நோய்க்கான சிகிச்சை முடிந்திருக்கிறது.

இறுதிவரை தோள் கொடுப்போம்!

கடலூரில் பிறந்து, தகவல் தொழில்நுட்பத் துறை மிக செல்வாக்காக இருந்த 90-களில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை உதறி, மக்கள் போராட் டங்களில் தன்னை இணைந்துக்கொண்டவர் ஜெஸ்ஸி. ''கூத்தரம்பாக்கம் என்ற ஊரில், ஊர்ப் பொதுக் குளத்தில் இறங்கி மீன் பிடித்ததற்காக 19 தலித் மக்கள் வெட்டப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் மயங்கிக்கிடந்தவர்களை இரவு தொடங்கி, அடுத்த நாள் காலை வரை தேடி மீட்டோம். இப்படி மிக மோசமான சூழலுக்குள்தான் நம் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கை கழிகிறது. ஆனால், மக்களோ மிக சுயநலமாக மாற்றப் பட்டு இருக்கிறார்கள். இது திட்டமிட்ட வகையில் நடக்கிறது. இதற்குச் சரியான உதாரணம், மகளிர் சுய உதவிக் குழுக்கள். ஊழல், விலைவாசி, அடக்குமுறை எதைப்பற்றியும் கவலைப்படாமல், வெறுமனே வட்டி பிசினஸ் நடத்துபவர்களாக நமது பெண்கள் மாற்றப்பட்டு உள்ளனர். அரசுத் திட்டங்களில் வரும் பணம் மற்றும் தேர்தல் நேரத்துப் பணம்... இவற்றை 'முறையாக’ப் பிரித்துக் கொள்ளும் அமைப்பாகவே மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்படுகின்றன. எங்கள் களப் பணியில் நாங்கள் காணும் உண்மை இது.

அரசு அதிகாரிகளின் நிலையோ இன்னும் மோசம். அவர்கள் அனைவருமே அரசு அலுவலகங்களைத் தங்கள் சொந்தச் சொத்து போலவே கருதுகின்றனர். அதனால்தான் மனு கொடுக்கப் போகும் பொதுமக்களை 'வெளியே போ’ எனத் துரத்தி அடிக்கிறார்கள். 'மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் பெறுகி றோம்’ என்பதை மறந்ததால்தான் போராடும் மக்களை அடித்து நொறுக்குகின்றனர். இந்த நிலையில்,

இறுதிவரை தோள் கொடுப்போம்!

எங்களைப் போன்ற அமைப்புகள் வெறுமனே 'கைடு’ போல மக்களைப் போராட்டங்களுக்குத் தூண்டிவிட்டுஒதுங்கிக் கொண்டால், அதன்பிறகு வரும் இன்னல்களுக்கு யார் பொறுப்பேற்பது? இறுதி வரை மக்களுடன் நிற்க வேண்டும். இந்த இடத்தில் தான் 'மக்கள் மன்றம்’ மக்களுடன் நெருங்கி இருப்பதாகக் கருதுகிறோம்.

எதிர்காலத்தில் 'மக்கள் மன்றம்’ என்ற இந்த அமைப்பு, ஒரு கலெக்டர் ஆபீஸ் போலவும், ஒரு எஸ்.பி. ஆபீஸ் போலவும், ஒரு நீதிமன்றம் போலவும் செயல்பட வேண்டும் என விரும்புகிறோம். அனைத்து அதிகாரங்களும் மக்கள் கையில் இருக்கும் மாற்று அரசாங்கமாக மக்கள் மன்றத்தை மாற்றுவதே எங்கள் லட்சியம்! அது ஊழலற்ற, அதிகாரப் படிநிலையற்ற, சமத்துவமான ஓர் உலகத்தின் சிறு முன் மாதிரியாக இருக்கும்!''

- ஜெஸ்ஸியின் வார்த்தைகள் முழுவதும் லட்சிய வேட்கை!

படங்கள் : உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு